எபோலா வைரஸ் பரவல் தீவிரமடைந்து வருவதைக் கருத்தில் கொண்டு, பாதிப்புக்குள்ளான நாடுகளுக்கு அத்தியாவசியமற்ற பயணங்களை மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு இந்தியர்களுக்கு மத்திய அரசு  அறிவுறுத்தியுள்ளது.

மத்திய சுகாதார மற்றும் குடும்ப நல அமைச்சகம் வெளியிட்டுள்ள புதிய வழிகாட்டுதல்களில், காங்கோ ஜனநாயகக் குடியரசு (DR Congo), உகாண்டா (Uganda) மற்றும் தெற்கு சூடான் (South Sudan) ஆகிய நாடுகளுக்குப் பயணம் மேற்கொள்வதைத் தவிர்க்குமாறு நாட்டு மக்களிடம் திட்டவட்டமாகக் கேட்டுக்கொள்ளப்பட்டுள்ளது.

காங்கோ மற்றும் உகாண்டாவில் எபோலா நோய் பரவல் அதிகரித்து வருவதால், சர்வதேச சுகாதார விதிமுறைகளின்படி (IHR) மே 17, 2026 அன்று இதனை “சர்வதேச அளவில் கவலைக்குரிய பொது சுகாதார அவசரநிலையாக” (PHEIC) உலக சுகாதார அமைப்பு (WHO) அறிவித்தது. இதன் தொடர்ச்சியாகவே இந்திய அரசு இந்த எச்சரிக்கையை விடுத்துள்ளது.

https://x.com/MoHFW_INDIA/status/2058404558939001213?

மேலும், ஆப்பிரிக்க நோய் கட்டுப்பாட்டு மற்றும் தடுப்பு மையமும் (Africa CDC) இந்த ‘புண்டிபுஜியோ’ (Bundibugyo) வகை எபோலா வைரஸ் பரவலை ஆப்பிரிக்கக் கண்டத்தின் பாதுகாப்புக்கு அச்சுறுத்தலான பொது சுகாதார அவசரநிலையாக (PHECS) அதிகாரப்பூர்வமாக அறிவித்துள்ளது.

இந்த விவகாரம் குறித்து மத்திய சுகாதார அமைச்சகம் வெளியிட்டுள்ள அறிக்கையில் முக்கியக் குறிப்புகள் இடம்பெற்றுள்ளன. இந்தியாவில் இதுவரை இந்த ‘புண்டிபுஜியோ’ வகை எபோலா வைரஸ் பாதிப்பு எதுவும் கண்டறியப்படவில்லை எனத் தெரிவிக்கப்பட்டுள்ளது. மே 22-ம் தேதி IHR வழங்கிய தற்காலிகப் பரிந்துரையின் அடிப்படையில், சர்வதேச நுழைவு வாயில்களில் (Points of Entry) நோய் கண்காணிப்பு தீவிரப்படுத்தப்பட்டுள்ளது. எபோலா பாதிப்பு ஆவணப்படுத்தப்பட்ட பகுதிகளில் இருந்து வரும் பயணிகளுக்குக் காய்ச்சல் அறிகுறிகள் உள்ளதா என்பதைத் தீவிரமாகக் கண்காணிக்கவும், பரிசோதிக்கவும் அதிகாரிகளுக்கு உத்தரவிடப்பட்டுள்ளது.

காங்கோ மற்றும் உகாண்டாவின் எல்லைகளைப் பகிர்ந்து கொள்ளும் தெற்கு சூடான் போன்ற அண்டை நாடுகளில் நோய் பரவும் அபாயம் மிக அதிகமாக இருப்பதாகக் கருதப்படுகிறது. உகாண்டாவில் புதிதாக 3 பேருக்கு எபோலா பாதிப்பு உறுதி செய்யப்பட்ட சில மணி நேரங்களிலேயே இந்திய அரசின் இந்த அறிக்கை வெளியாகியுள்ளது நோயின் அதிவேகப் பரவலை உணர்த்துகிறது.

இந்த நோய்த்தொற்றானது எபோலா வைரஸின் ‘புண்டிபுஜியோ’ (Bundibugyo) வகையால் ஏற்படும் வைரஸ் ரத்தக்கசிவு காய்ச்சலாகும் (Viral haemorrhagic fever). இது அதிக உயிரிழப்புகளை ஏற்படுத்தக்கூடிய கொடிய நோயாகும்.

தற்போதைய நிலவரப்படி, இந்தக் குறிப்பிட்ட வகை எபோலா வைரஸைத் தடுக்கவோ அல்லது குணப்படுத்தவோ அங்கீகரிக்கப்பட்ட தடுப்பூசிகளோ அல்லது பிரத்யேகமான சிகிச்சைகளோ இதுவரை இல்லை என்பது பொது சுகாதார நிபுணர்களிடையே பெரும் கவலையை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version