மின் துறையின் மொத்த நிலுவைக் கடன் மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடி என்று தெரிவிக்கப்பட்டு இருந்தது.
தமிழ்நாடு மின்சார வாரியத்தின் (TANGEDCO) நிதி நிலை குறித்த விரிவான வெள்ளை அறிக்கையை மின்துறை அமைச்சர் சி.டி.ஆர். நிர்மல் குமார் இன்று மின்வாரிய தலைமையகத்தில் வெளியிட்டார். இந்த அறிக்கை கடந்த 25 ஆண்டுகளாக மின்வாரியம் எதிர்கொண்டுள்ள நிதி சவால்கள், செலவு-வருமான ஏற்றத்தாழ்வுகள் மற்றும் எதிர்கால சீர்திருத்த திட்டங்களை விரிவாக விளக்குகிறது.
மாநில அரசு சமீபத்தில் வெளியிட்ட ஒட்டுமொத்த நிதி வெள்ளை அறிக்கையில், தமிழ்நாட்டின் மொத்த கடன் ரூ.13 லட்சத்து 18 ஆயிரம் கோடியாக பதிவாகியுள்ளது. இதில் பொதுத்துறை நிறுவனங்களின் கடன் ரூ.3 லட்சத்து 18 ஆயிரத்து 176 கோடியில், மின்துறையின் பங்கு மட்டும் ரூ.2 லட்சத்து 47 ஆயிரத்து 130 கோடியாக உள்ளது. இது மொத்த பொதுத்துறை கடனில் 77.6 சதவீதத்தை கொண்டுள்ளது என்பது குறிப்பிடத்தக்கது.
அமைச்சர் நிர்மல் குமார் செய்தியாளர்களிடம் கூறுகையில், “தற்போது மின்வாரியத்திற்கு ரூ.2,47,130 கோடி கடன் உள்ளது. 2021 முதல் 2026 வரையிலான காலகட்டத்தில் மின்வாரியத்தின் மொத்த செலவு ரூ.5.32 லட்சம் கோடியாகவும், வருமானம் ரூ.4.97 லட்சம் கோடியாகவும் பதிவாகியுள்ளது. இதனால் ஏற்பட்ட பற்றாக்குறை ரூ.34,447 கோடியை எட்டியுள்ளது” என்றார்.
2001ஆம் ஆண்டு முதல் மின்வாரியத்தின் செயல்பாடுகளை விரிவாக ஆவணப்படுத்தியுள்ள இந்த அறிக்கை, துறையை மீட்டெடுத்து வளர்ச்சிப் பாதையில் கொண்டு செல்ல வேண்டியதன் அவசியத்தை வலியுறுத்துகிறது. 2001-2006 காலகட்டத்தில் ரூ.59 ஆயிரம் கோடி வருமானத்துக்கு எதிராக ரூ.67 ஆயிரம் கோடி செலவு ஏற்பட்டதாக அறிக்கை சுட்டிக்காட்டுகிறது. கட்டண உயர்வு நடைமுறைக்கு வந்தபோதெல்லாம் அதே அளவுக்கு செலவினங்களும் அதிகரித்து வந்ததால், உள்கட்டமைப்பு வலுப்படுத்தப்படவில்லை. புதிய பணியாளர்கள் தேர்வு செய்யப்படாமல் இருந்ததும், குறுகிய கால ஒப்பந்தங்கள் மூலம் அதிக விலைக்கு மின்சாரம் வாங்கப்பட்டதும் முக்கிய பிரச்னைகளாக உள்ளன.
இதை நீண்ட கால ஒப்பந்தங்களாக மாற்றுவதன் மூலம் மாதம் ரூ.215 கோடி சேமிக்க முடியும் என அமைச்சர் தெரிவித்தார். மின்வாரியத்தில் மொத்தம் 1,40,635 பணியிடங்களில் 65,921 பணியிடங்கள் காலியாக உள்ளன. 74,714 பணியிடங்கள் மட்டுமே நிரப்பப்பட்டுள்ளன. ஊழியர் பற்றாக்குறை இருந்தபோதிலும், மக்களுக்கு தடையின்றி மின்சார சேவை வழங்கப்படுவதாக அவர் சுட்டிக்காட்டினார்.
2021-2026 காலகட்டத்தில் 9,136 பேர் ஓய்வு பெற்ற நிலையில், வெறும் 343 பணியாளர்கள் மட்டுமே நியமிக்கப்பட்டுள்ளனர். இது வேலை வாய்ப்புகளை கணிசமாக குறைத்துள்ளது. புதிய திட்டங்கள் எதுவும் தொடங்கப்படாததால் வளர்ச்சி பாதிக்கப்பட்டுள்ளது என்று அமைச்சர் விளக்கினார்.மின்துறையை சீரமைக்கும் நோக்கில் அரசு உரிய நடவடிக்கைகளை மேற்கொள்ளும் என எதிர்பார்க்கப்படுகிறது.
