உலகப் பணக்காரர்கள் பட்டியலில் தொடர்ந்து முதலிடத்தில் ஆதிக்கம் செலுத்தி வரும் டெஸ்லா மற்றும் ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனங்களின் தலைவர் எலான் மஸ்க், உலக வரலாற்றிலேயே இதுவரை எவரும் எட்டாத புதிய உச்சத்தைத் தொடவுள்ளார். மனித வரலாற்றின் முதல் ‘ட்ரில்லியனர்’ (ஒரு லட்சம் கோடி டாலர் சொத்து மதிப்புடையவர்) என்ற பெருமையை நோக்கி அவர் மிக வேகமாக நகர்ந்து வருகிறார்.

மஸ்க்கின் இந்த அசாத்தியமான பொருளாதாரப் பாய்ச்சலுக்குப் பின்னால், அவரது வான்வெளி ஆராய்ச்சி நிறுவனமான ‘ஸ்பேஸ் எக்ஸ் பொதுப் பங்குச்சந்தையில் தடம் பதிக்கவிருப்பதுதான் முக்கியக் காரணமாகப் பார்க்கப்படுகிறது. வரும் ஜூன் 12-ம் தேதி வெளியாகவுள்ள இந்த வரலாற்றுச் சிறப்புமிக்க ஐபிஓ (IPO) மூலம், ஸ்பேஸ் எக்ஸ் நிறுவனத்தின் ஒட்டுமொத்த சந்தை மதிப்பு சுமார் 1.77 ட்ரில்லியன் டாலரை எட்டும் என்று நிதித்துறை வல்லுநர்கள் கணித்துள்ளனர்.

அமெரிக்கப் பத்திரங்கள் மற்றும் பரிவர்த்தனை ஆணையத்தின் தரவுகளின்படி, ஜூன் மாதத் தொடக்கத்திலேயே எலான் மஸ்க்கின் தனிப்பட்ட சொத்து மதிப்பு 835 பில்லியன் டாலராக உயர்ந்து, உலகப் பணக்காரர்கள் பட்டியலில் அவர் முதலிடத்தைத் தக்கவைத்துள்ளார்.

ஸ்பேஸ் எக்ஸ் பங்குகள் சந்தைக்கு வந்தவுடன், மஸ்க்கின் சொத்து மதிப்பு ஒரே நாளில் ராக்கெட் வேகத்தில் உயர்ந்து 1 லட்சம் கோடி டாலரை  கடந்துவிடும் என்று புகழ்பெற்ற ‘ஃபோர்ப்ஸ்’ இதழ் தெரிவித்துள்ளது.

இந்த அசுர சொத்து மதிப்பின் பிரம்மாண்டத்தை விளக்கப் பொருளாதார வல்லுநர்கள் ஒரு வியப்பூட்டும் ஒப்பீட்டை முன்வைக்கின்றனர். எலான் மஸ்க் தற்போதைய நிலையில் இருந்து, மணிக்கு 1 மில்லியன் டாலர் (இந்திய மதிப்பில் சுமார் 8.3 கோடி ரூபாய்) வீதம் இரவு பகலாகத் தொடர்ந்து செலவு செய்து கொண்டே இருந்தாலும், அவரது மொத்த சொத்தையும் முழுமையாகக் காலி செய்ய 100 ஆண்டுகளுக்கும் மேலாகும். இந்தத் தொகை உலகின் பல வளர்ந்து வரும் நாடுகளின் ஒட்டுமொத்த உள்நாட்டு உற்பத்தியை (GDP) விடப் பல மடங்கு அதிகமாகும்.

கடந்த 2002-ஆம் ஆண்டு, பலரது கேலிப் பேச்சுகளுக்கு மத்தியில் தனது சொந்தப் பணமான 100 மில்லியன் டாலரைக் கொண்டு எலான் மஸ்க்கால் தொடங்கப்பட்டதுதான் இந்த ‘ஸ்பேஸ் எக்ஸ்’ நிறுவனம். இன்று அதுவே உலகின் மிக மதிப்புமிக்க வணிக சாம்ராஜ்யமாக உருவெடுத்துள்ளது.

மறுபயன்பாட்டு ராக்கெட் தொழில்நுட்பம், உலகெங்கும் அதிவேக இணையம் வழங்கும் ‘ஸ்டார்லிங்க்’ செயற்கைக்கோள் நெட்வொர்க் மற்றும் செயற்கை நுண்ணறிவு போன்ற எதிர்காலத் தொழில்நுட்பங்களில் மஸ்க் செய்த முதலீடுகள், இன்று அவரை உலகப் பொருளாதாரத்தின் அசைக்க முடியாத சக்கரவர்த்தியாக மாற்றியுள்ளன.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version