பொள்ளாச்சியில் முன்னாள் அமைச்சர் உடுமலை ராதாகிருஷ்ணன் இல்ல விழாவில் கலந்து கொள்ள கோவை விமான நிலையம் வந்த அதிமுக பொதுச்செயலாளரும், எதிர்க்கட்சி தலைவருமான எடப்பாடி பழனிசாமிக்கு, முன்னாள் அமைச்சர் எஸ்.பி.வேலுமணி தலைமையில் சிறப்பான வரவேற்பு அளிக்கப்பட்டது.

கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களை சந்தித்த எடப்பாடி பழனிசாமி, “தமிழ்நாடு முதலமைச்சர் ஸ்டாலின், கடந்த மூன்று ஆண்டு காலமாக பாரதப் பிரதமர் தலைமையில் நடைபெற்ற, நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை. அதற்கு பல்வேறு கருத்துக்களை முதல்வர் ஸ்டாலின் தெரிவித்து இருக்கிறார். தமிழகத்திற்கு தேவையான நிதியை மத்திய அரசு வழங்கவில்லை என்றும், பல்வேறு திட்டங்களுக்கு அனுமதி கிடைக்கவில்லை என்ற குற்றச்சாட்டை சொல்லி கடந்த 3 ஆண்டு காலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்தார் முதலமைச்சர் ஸ்டாலின்” என குற்றம்சாட்டினார்.

”3 ஆண்டு காலம் புறக்கணித்த பிறகு, நேற்று(24.05.2025) இரவு பிரதமர் நரேந்திர மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்துகொண்டு, கருத்தை பதிவு செய்து இருக்கிறார். நாங்கள் கேட்பது எல்லாம் மூன்றாண்டு காலமாக பாரத பிரதமர் மோடி தலைமையில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் ஏன் கலந்து கொள்ளவில்லை? அந்த 3 ஆண்டுகாலம் நிதி ஆயோக் கூட்டத்தில் கலந்து கொண்டு இருந்தால் தமிழகத்திற்கு தேவையான நிதியை பெற்று இருக்கலாம்” என்றார்.

”புதிய திட்டங்களுக்கு அனுமதி கிடைத்து இருக்கலாம். மாநிலம் சார்ந்த பிரச்சனைகளை இந்த கூட்டத்தில் தெரிவித்து இருக்கலாம். ஆனால் மக்கள் மீது அக்கறையில்லாத முதலமைச்சர் ஸ்டாலின் என்பது இதில் இருந்து தெரிய வருவதாக” கூறினார். அமலாக்கத் துறை டாஸ்மாக் நிறுவனத்தில் பல்வேறு மட்டத்தில் ஊழல் நடைபெற்று, அதற்கான ரைடுகள் நடைபெற்று விசாரணை நடைபெற்றுக் கொண்டு இருக்கிறது. ஆகையால் பயந்து டெல்லியில் நடைபெற்ற நிதி ஆயோக் கூட்டத்தில் முதலமைச்சர் பங்கேற்று இருப்பதாக” குற்றச்சாட்டை முன்வைத்தார்.

”உண்மையில் மக்களுடைய பிரச்சனையை தீர்க்க வேண்டும் என்று முதலமைச்சர் கருதி இருந்தால் கடந்த மூன்று ஆண்டுகாலமாக நிதி ஆயோக் கூட்டத்தை புறக்கணித்து இருக்க மாட்டார். இது தான் எங்களுக்கு இருக்கின்ற மிகப் பெரிய சந்தேகம். அதோடு, ஸ்டாலின் எதிர்க்கட்சி தலைவராக இருந்த போது, பிரதமர் தமிழ்நாட்டிற்கு வருகை தந்த போது, கருப்பு பலூன்களை பறக்க விட்டு எதிர்ப்பை தெரிவித்தார். திராவிட முன்னேற்றக் கழகம் ஆளும் கட்சியாக வந்த பிறகு, ஸ்டாலின் அதே பிரதமருக்கு வெள்ளைக் கொடி பிடித்தார். எதிர்க் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு ஆளும் கட்சியாக இருக்கும் போது ஒரு நிலைப்பாடு, கொண்டு திமுக செயல்படுவதாக” சாடினார்.

ஆகையால் எதிர்க் கட்சியாக நாங்கள் கேட்கும் கேள்வி என்னவென்றால், ”ஒரு முதலமைச்சர் தன்னுடைய கடமையை செய்ய தவறி விட்டார்.. கடந்த மூன்று ஆண்டு காலமாக நடைபெற்ற நிதி ஆயோ கூட்டத்தில் கலந்து கொண்டு, தமிழகத்தின் பிரச்சனையை அதில் தெரிவித்து இருந்தால் மக்களுக்கு நன்மை கிடைத்து இருக்கும். பல்வேறு திட்டங்களுக்கு நன்மை கிடைத்து இருக்கும், நிலுவைத் தொகையும் கிடைத்து இருக்கும். அதோடு தமிழகத்தில் சட்ட ஒழுங்கு சந்தி சிரித்துக் கொண்டு இருக்கிறது. நான் ஒவ்வொருமுறை செய்தியாளர்களை சந்திக்கும் போதும் தமிழகத்தில் நடைபெறுகிற சம்பவங்களை கோடிட்டு காட்டுவேன்” என்றார்.

”இந்த அரசு வந்த பிறகு நாட்டு மக்கள், பெண்கள், சிறுமிகள் என யாருக்குமே பாதுகாப்பு இல்லை. இந்த அரசு பொதுமக்களுக்கு பாதுகாப்பு வழங்க தவறி விட்டது என்ற குற்றச்சாட்டை முன்வைக்கிறேன். ஒரு பொம்மை முதல்வர் இந்த நாட்டை ஆண்டு கொண்டு இருக்கிற காரணத்தால், திறமையற்ற முதலமைச்சர் இதை ஆண்டு கொண்டு இருக்கிறார், அதனால் சட்டம் – ஒழுங்கு மிக, மிக மோசமான நிலையில் இருந்து கொண்டு இருக்கிறது. இது தான் நாடறிந்த உண்மை” என்றார்.

அதே போல அரக்கோணத்தில் ஒரு பெண்ணுக்கு ஏற்பட்ட அவல நிலை, அந்தப் பெண் காவல் நிலையத்தில் புகார் கூறுகிறார். உச்சநீதிமன்ற தீர்ப்பின்படி அந்தப் பெண் கொடுத்த புகாரை அப்பொழுதே எஃப்.ஐ.ஆர் ஆக பதிவு செய்து இருக்க வேண்டும். அந்த பெண் ஏழாம் தேதி புகார் கொடுத்து இருக்கிறார். அதை பத்தாம் தேதி தான் புகாராக பதிவு செய்கிறார்கள். அந்த புகார் தெய்வச் செயல் என்பவர் மீது கொடுக்கப்பட்டு இருக்கிறது. சாதாரண பிரிவின் அடிப்படையில் வழக்கு பதிவு செய்யப்படுகிறது. அவர் நீதிமன்றத்தை அணுகுகிறார், அவருக்கு உடனே ஜாமீன் கிடைத்து விட்டது. அந்தப் பெண் கொடுத்த புகாரை ஊடகம் பத்திரிகை என அனைத்திலும் வெளியிட்டு இருக்கிறார்கள்”.

”காவலர்கள் இந்த புகாரை ஒரு போதும் வெளியிட்ட கூடாது. ஆனால் அந்தப் பெண்மணி கொடுத்த புகாரை அப்படியே ஊடகத்திலும் பத்திரிகைகளையும் வெளியிட்டு இருப்பதாக பேட்டியை கொடுத்து இருக்கிறார். தனக்கு ஏற்பட்ட கொடுமைகளை ஆளுநரிடம் தெரிவிப்பதற்காக சென்னை சென்று உள்ளார். அங்கு இருக்கும் காவலருக்கு இது தெரிய வர ஆளுநரை சந்திக்க விடாமல் தடுத்து நிறுத்தப்பட்டு, அந்த பெண்மணியின் அவரின் தாயாரையும் ஆட்டோவில் ஏற்றி வெளியே அனுப்பி விடுகிறார்கள்”.

”அந்த பாதிக்கப்பட்ட பின் எனக்கு ஏற்பட்ட இந்த கொடுமை வேறு எந்த பெண்ணுக்கும் ஏற்படக் கூடாது என கூறி இருக்கிறார். அந்தப் பெண்மணி மிகுந்த அச்சத்தோடு தன்னுடைய கொடுமையை ஊடகத்தின் வாயிலாக வெளிப்படுத்துகிறார். எவ்வளவு மோசமான ஆட்சி நடைபெற்று கொண்டு இருப்பதற்கு அரக்கோணமே சாட்சி என்பதை நான் கூறிக்கொள்ள விரும்புகிறேன்”.

”அதேபோல கும்பகோணம் தஞ்சாவூர் மாவட்டம், திருவிடைமருதூர் பகுதியில், ஒரு பெண்ணுக்கு பாலியல் வன்கொடுமை நிகழ்ந்து உள்ளது. அந்தப் பெண்ணுக்கு ஏற்பட்ட பாலியல் கொடுமையை, காவல் துறையே வெளியிடுகிறது. குற்றவாளிகள் இதில் முன் ஜாமீன் பெறுவதற்கு காவல் துறையே உதவி செய்கிறது. அதே போல இது சாதாரண குற்ற பிரிவிலே வழக்காக பதிவு செய்யப்படுகிறது. இதை கண்டித்து அ.தி.மு.க சார்பிலே அரக்கோணம் பெண்மணிக்கும் கும்பகோணம் பெண்மணிக்கும், நியாயம் கிடைக்க வேண்டும் என்பதற்காக, அரக்கோணத்திலும் மிகப்பெரிய ஆர்ப்பாட்டத்தை நடத்தி இருக்கிறோம்”.

”அதேபோல இன்று கோவை மாவட்டம் பொள்ளாச்சியில், ஒரு காப்பகத்தில் 21 வயது மதிக்கத்தக்க வாலிபர் அடித்து துன்புறுத்தி கொலை செய்து இருக்கிறார்கள். இந்த செய்தியாக வெளிவந்து இருக்கிறது. இந்த ஆட்சியில் யாருக்குமே பாதுகாப்பு இல்லாத நிலை இருக்கிறது. இனியாவது இந்த அரசு விழிப்போடு இருந்து மக்களை பார்க்க வேண்டும்” என்று கூறினார்.

”நீலகிரி மாவட்டத்திற்கும் கோவை மாவட்டத்திற்கும் ரெட் அலர்ட் விடுத்து இருக்கிறார்கள், கனமழை பெய்யும் என தெரிவித்து இருக்கிறார்கள் மக்கள் மிகுந்த ஜாக்கிரதையோடு இருக்க வேண்டும் என்று கூறினார். உதயநிதி குறித்த கேள்விக்கு, யாருக்கும் பயப்படவில்லை என்றால் அவரது தம்பி ஏன் தப்பி செல்ல வேண்டும்?” எனக் கேள்வி எழுப்பினார்.

”அதேபோல பட்டாசு ஆலைகளில் நடைபெறும் விபத்துகளை தடுத்து நிறுத்த முன் கூட்டியே நடவடிக்கை எடுக்க வேண்டும் என சட்டமன்றத்தில் பேசி இருந்தோம், ஆனால் இந்த அரசு என்ன செய்கிறது என்று எங்களுக்கு தெரியவில்லை. பட்டாசு தொழில் என்பது ஒரு அபாயகரமான தொழில். அதற்கு முன்னெச்சரிக்கைகள் தேவை, என்ன பாதுகாப்பு தேவை என்பதை இந்த அரசாங்கம் அவர்களுக்கு ஆலோசனை வழங்கி செய்தால் இது போன்ற விபத்துகளை தவிர்க்கலாம். அரசு இதை செய்யும் என நம்புவதாக” கூறினார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version