சென்னை, ராயப்பேட்டையில் உள்ள அதிமுக தலைமை அலுவலகத்தில் மாவட்ட செயலாளர்கள் கூட்டம் இன்று நடைபெற்ற அதே வேளையில், சென்னை எம்.ஆர்.சி நகரில் முன்னாள் அமைச்சர்கள் எஸ்.பி. வேலுமணி மற்றும் சி.வி.சண்முகம் தரப்பினர் தங்களது ஆதரவாளர்களுடன் அவசர ஆலோசனை நடத்தினர்.
இக்கூட்டத்தில் விஜயபாஸ்கர், தங்கமணி, ஆர்.காமராஜ் உள்ளிட்ட முக்கிய சட்டமன்ற உறுப்பினர்கள் கலந்துகொண்டனர். ஆலோசனைக்குப் பிறகு செய்தியாளர்களைச் சந்தித்த சி.வி.சண்முகம், எடப்பாடி பழனிசாமி மீது அடுக்கடுக்கான குற்றச்சாட்டுகளை முன்வைத்தார்.
அவரது பேட்டியின் முக்கிய விவரங்கள் இதோ:
2019 முதல் தொடரும் படுதோல்விகள்
நடந்து முடிந்த சட்டமன்றத் தேர்தலில் அதிமுக படுதோல்வியைச் சந்தித்துள்ளது. இது இந்தத் தேர்தலில் மட்டும் வந்த தோல்வி அல்ல; 2019 முதல் இரண்டு நாடாளுமன்றத் தேர்தல்கள், இரண்டு சட்டமன்றத் தேர்தல்கள் மற்றும் இடைத்தேர்தல்கள் எனத் தொடர் தோல்விகளைச் சந்தித்து, கட்சியின் வாக்கு வங்கி சரிந்து வருகிறது. இது இயக்கத்திற்குப் பேரச்சுறுத்தல்.
2024 நாடாளுமன்றத் தேர்தல் தோல்விக்குப் பிறகு, நாங்கள் 6 பேர் இபிஎஸ்ஸை நேரில் சந்தித்து, “பிரிந்தவர்கள், நீக்கப்பட்டவர்கள் அனைவரையும் ஒருங்கிணைத்து வலிமையான அதிமுகவை முன்னெடுப்போம்” எனக் கூறினோம். ஆனால், எடப்பாடி பழனிசாமி அதை நிராகரித்து, உண்மையான காரணங்களை ஆய்வு செய்யாமல் கூட்டங்களை திசை திருப்பினார்.
தவெக, தேமுதிக கூட்டணியை தடுத்த இபிஎஸ்
“தமிழக வெற்றி கழகம் (தவெக) சார்பாக அதிமுகவுடன் கூட்டணி வைக்க பேச்சுவார்த்தை நடத்தினார்கள். நாங்களும் வலிமையான கூட்டணி வையுங்கள் என்றோம். ஆனால், கூட்டணி அமையக்கூடாது என்பதற்காக என்னென்னவோ பேசி, அவர்களை வெளியேற்றுவதிலேயே எடப்பாடி பழனிசாமி குறியாக இருந்தார்.”
தவெக மட்டுமன்றி, தேமுதிகவையும் “அரை சதவீத கட்சி” என்று விமர்சித்து எடப்பாடி பழனிசாமி கூட்டணியில் இருந்து வலுக்கட்டாயமாக வெளியேற்றினார். டாக்டர் கிருஷ்ணசாமி உள்ளிட்ட யாரையும் அவர் அரவணைக்கவில்லை. “நான் மட்டும் இருந்தால் போதும், எனக்குத்தான் வாக்களிப்பார்கள்” என்ற அகந்தையில் இபிஎஸ் செயல்பட்டார். ஓபிஎஸ் கடைசியில் “எந்தப் பதவியும் வேண்டாம், என்னை ஒரு தொண்டனாகவாவது சேர்த்துக்கொள்ளுங்கள்” என்று கூறியபோதும் இபிஎஸ் சேர்க்க மறுத்துவிட்டார்.
‘கண்கெட்ட பிறகு சூரிய நமஸ்காரம்’
தற்போது தனது பதவிக்கு ஆபத்து என்றவுடன், “தவறு செய்தவர்கள் திரும்பி வந்தால் ஏற்றுக்கொள்கிறோம்” என நேற்று இபிஎஸ் அறிக்கை விட்டுள்ளார். இது கண்கெட்ட பிறகு செய்யும் சூரிய நமஸ்காரம். இதை முன்பே செய்திருந்தால் கட்சிக்கு இந்த நிலை வந்திருக்காது. எங்களை “துரோகி” என்றும், எங்கள் குடும்பங்களைப் பற்றியும் விமர்சிப்பது ஒரு தலைமைக்கு அழகல்ல.
நாங்கள் எடப்பாடியை தனிப்பட்ட முறையில் குறை சொல்லவில்லை; அவர் செய்த தவறுகளைத்தான் சுட்டிக்காட்டுகிறோம். எங்களது ஒரே நோக்கம் எம்.ஜி.ஆர், அம்மா கட்டிக்காத்த அதிமுகவை மீட்டெடுத்து, மீண்டும் தமிழ்நாட்டில் ஆட்சிக் கட்டிலில் அமர வைக்க வேண்டும் என்பதுதான்.
புதிய நியமனங்கள் செல்லாது
ஒருபுறம் பேசித் தீர்த்துக்கொள்ளலாம் என்று கூறிக்கொண்டே, மறுபுறம் இதுவரை 31 மாவட்ட செயலாளர்களை இபிஎஸ் நீக்கியுள்ளார். தனக்கு ஆதரவாகக் கையெழுத்துப் போட மறுப்பவர்களின் பதவிகள் பறிக்கப்படும் என அச்சுறுத்துகிறார்.
அம்மா மறைந்த 05/12/2016 அன்று யார் யார் பொறுப்பில் இருந்தார்களோ, அவர்களின் கையெழுத்து இருந்தால்தான் செல்லும் எனத் தேர்தல் ஆணையமே கூறியுள்ளது. எனவே, தற்போது அதிகாரத்தைப் பயன்படுத்தி எங்களை நீக்கிய நடவடிக்கையோ அல்லது புதிதாகப் போடப்பட்டுள்ள பொறுப்புகளோ சட்டப்படி செல்லாது. அது செல்லாத நோட்டு. ஒன்றிய, நகர, பேரூர் செயலாளர்கள் யாரும் மிரட்டல்களுக்குப் பயப்பட வேண்டாம்; உங்கள் பதவி உங்களுக்குத்தான்.
பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும்
ஐந்தில் ஒரு பங்கு பொதுக்குழு உறுப்பினர்கள் கையெழுத்திட்டுக் கேட்டால், 30 நாட்களுக்குள் சிறப்புப் பொதுக்குழுவைக் கூட்ட வேண்டும் என்பது கட்சி விதி. ஆனால், பொதுக்குழுவைக் கூட்ட வேண்டாம் என உறுப்பினர்களிடம் இபிஎஸ் கட்டாயக் கையெழுத்து வாங்குவது ஜனநாயக விரோதம். தேர்தலில் இருந்து பாடம் கற்றுக்கொண்டதாகக் கூறும் இபிஎஸ்ஸுக்கு பொதுக்குழுவைக் கூட்ட என்ன அச்சம்?
பொதுக்குழுவைக் கூட்ட எந்த நிபந்தனையும் இல்லை. உங்களுடைய அழைப்புக்கு நாங்கள் தயார். பொதுக்குழுவைக் கூட்டுங்கள், அங்கு விவாதிப்போம். அதில் பெரும்பான்மையான பொதுக்குழு உறுப்பினர்கள் என்ன முடிவை எடுக்கிறார்களோ, அதை நாங்கள் தலைவணங்கி ஏற்றுக்கொள்கிறோம் என சி.வி. சண்முகம் மேலும் தெரிவித்தார்.
