சர்வதேச அளவில் நிலவி வரும் புவிசார் அரசியல் பதற்றங்களுக்கு மத்தியில், உலக நாடுகள் தங்களின் அணு ஆயுதங்களின் உற்பத்தியைக் கணிசமாக அதிகரிக்கத் தொடங்கியுள்ளதாகத் புகழ்பெற்ற ஸ்டாக்ஹோம் சர்வதேச அமைதி ஆராய்ச்சி நிறுவனம் (SIPRI) எச்சரித்துள்ளது.

2026-ஆம் ஆண்டுக்கான புதிய அறிக்கையில் கூறப்பட்டுள்ளதாவது, இந்த அறிக்கையின்படி, இந்தியாவின் அணு ஆயுத பலம் அதிகரித்திருப்பதுடன், சீனா மற்றும் வடகொரியா போன்ற நாடுகளும் தங்களது அணு ஆயுதக் குவியலை வேகமாக உயர்த்தி வருகின்றன.

SIPRI அமைப்பின் 2026 புள்ளிவிவரங்களின்படி, இந்தியாவின் அணு ஆயுதங்களின் எண்ணிக்கை 180-லிருந்து 190-ஆக அதிகரித்துள்ளது. இந்தியாவின் அணு ஆயுத நவீனமயமாக்கல் திட்டம், தற்போது சீனா முழுவதையும் குறிவைக்கும் வகையிலான நீண்டதூர ஏவுகணைகளை உருவாக்குவதை நோக்கமாகக் கொண்டுள்ளதாக இந்த அறிக்கை கூறுகிறது. அதேநேரம், அண்டை நாடான பாகிஸ்தானின் அணு ஆயுத எண்ணிக்கை மாற்றமின்றி 170 என்ற அளவில் நீடிக்கிறது. இதனால் அணு ஆயுத எண்ணிக்கையில் பாகிஸ்தானை விட இந்தியா முன்னிலை பெற்றுள்ளது.

சீனா, வடகொரியாவின் அசுர வளர்ச்சி: ஆசிய பிராந்தியத்தில் சீனாதான் மிக வேகமான முறையில் தனது அணு ஆயுதங்களை அதிகரித்து வருகிறது. கடந்த ஆண்டு 600 ஆக இருந்த சீனாவின் அணு ஆயுத எண்ணிக்கை, தற்போது 620-ஆக உயர்ந்துள்ளது. சர்வதேசத் தடைகளையும் மீறி வடகொரியா தனது அணு ஆயுதங்களின் எண்ணிக்கையை 50-லிருந்து 60-ஆக உயர்த்தியுள்ளது.

முதலிடத்தில் ரஷ்யாவும், அமெரிக்காவும்: உலக அளவில் ஒட்டுமொத்தமாக 12,187 அணு ஆயுதங்கள் உள்ள நிலையில், அதில் சிப்பிரி (SIPRI) அமைப்பின் கணக்குப்படி வல்லரசு நாடுகளான ரஷ்யாவும், அமெரிக்காவும் தான் மிக அதிக எண்ணிக்கையுடன் முதல் இரு இடங்களில் ஆதிக்கம் செலுத்துகின்றன. 5,420 அணு ஆயுதங்களுடன் ரஷ்யா உலக அளவில் முதலிடத்தில் உள்ளது. அமெரிக்கா, 5,042 அணு ஆயுதங்களுடன் இரண்டாம் இடத்தில் நீடிக்கிறது.

பனிப்போர் காலத்திற்குப் பிறகு அணு ஆயுதங்களைக் குறைப்பதற்காக உலக நாடுகள் எடுத்து வந்த முயற்சிகள் தற்போது தலைகீழாக மாறியுள்ளதாகவும், நாடுகள் தங்களின் தேசியப் பாதுகாப்புக்காக மீண்டும் அணு ஆயுதங்களையே அதிகம் நம்பத் தொடங்கியுள்ளதாகவும் SIPRI தனது வருடாந்திர அறிக்கையில் கவலை தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version