டெல்லியில் இன்று நடைபெற்ற ‘இந்தியா’ (INDIA) கூட்டணியின் ஆலோசனைக் கூட்டத்தில், விடுதலைச் சிறுத்தைகள் கட்சியின் (விசிக) தலைவரும் எம்பியுமான தொல். திருமாவளவன், காங்கிரஸ் கட்சிக்கு எதிராகப் பகிரங்கமாகக் குற்றச்சாட்டுகளை முன்வைத்துள்ளது தேசிய அரசியலிலும், தமிழக அரசியலிலும் ஒரு புதிய அதிர்வலையை ஏற்படுத்தியுள்ளது.
திருமா பேசியது என்ன?
“நரேந்திர மோடி அரசின் தவறான வெளியுறவு கொள்கையால் இப்போது நாடு திவாலாகும் நிலை ஏற்பட்டுள்ளது. நம்முடைய அந்நிய செலாவணி கையிருப்பில் சிக்கல் ஏற்பட்டுள்ளது. மிகப்பெரிய பொருளாதார நெருக்கடி ஏற்பட்டு கோடிக்கணக்கான மக்கள் பாதிக்கப்படும் நிலை உருவாகியுள்ளது.இதை அம்பலப்படுத்தி நாடு தழுவிய அளவில் நரேந்திர மோடி அரசுக்கு எதிரான போராட்டங்களை நாம் முன்னெடுக்க வேண்டும்.
இந்தப் போராட்டங்களை செய்வதற்கு எதிர்க்கட்சிகள் இடையே புரிந்துணர்வும் ஒற்றுமையும் அவசியம். அண்மையில் நடந்து முடிந்த தேர்தல்களின் போது காங்கிரஸ் கட்சி கையாண்ட அணுகுமுறையால் இந்தியா கூட்டணியில் இடம் பெற்றுள்ள கட்சிகள் இடையே அதிருப்தி ஏற்பட்டுள்ளது. குறிப்பாக கேரளா, மேற்குவங்கம், தமிழ்நாடு ஆகிய மாநிலங்களில் காங்கிரஸ் கட்சி மேற்கொண்ட அணுகுமுறை இந்த கூட்டணிக்கு உறுதுணையாக இருந்த கட்சிகளான திரிணாமுல், மார்க்சிஸ்ட் கம்யூனிஸ்ட் கட்சி, திமுக ஆகியவற்றை பலவீனம் அடையச் செய்திருக்கிறது. இது விரும்பத்தக்கது அல்ல. எனவே காங்கிரஸ் கட்சி தனது அணுகுமுறையை மறு ஆய்வு செய்து இந்த ஒற்றுமையை இன்னும் வலுவாக முன்னெடுப்பதற்கான வழிகளை கண்டறிய வேண்டும்.
இந்தியா கூட்டணியில் தேசியக் கட்சிகளும் மாநில கட்சிகளும் ஒன்றாக இணைந்து செயல்பட்டு வருகிறோம். இயல்பாகவே தேசியக் கட்சிகளுக்கும் மாநில கட்சிகளுக்கும் இடையே முரண்களும் இருக்கும். அவற்றை கூர்மைப்படுத்தக்கூடாது. அந்தப் பொறுப்பு மாநில கட்சிகளுக்கு மட்டுமல்ல தேசிய கட்சிகளுக்கும் உள்ளது. இப்போது மத்திய மாநில உறவுகள் மிக மிக சீர்கேடு அடைந்துள்ள சூழலில் தேசியக் கட்சிகள் கூட்டாட்சி என்ற அடிப்படையில் தங்களது நிலைப்பாடுகளை மறுபரிசீலனை செய்து மாற்றி அமைக்க வேண்டும்.இதன் ஒரு அங்கமாக ஒன்றிய பாஜக அரசு அறிமுகப்படுத்தியுள்ள மும்மொழிக் கொள்கையைப் பற்றி தெளிவான நிலைப்பாட்டை இந்தியா கூட்டணி எடுக்க வேண்டும். அது போலவே மத்திய மாநில உறவுகளை ஆராய்ந்து தமிழ்நாடு அரசின் சார்பில் நீதிபதி குரியன் ஜோசப் ஆணையம் முன் வைத்துள்ள பரிந்துரைகளையும் இந்தியா கூட்டணி பரிசீலனைக்கு எடுத்துக் கொள்ள வேண்டும்” என்று திருமாவளவன் இக்கூட்டத்தில் வெளிப்படையாகப் பேசியுள்ளார்.
திருமாவளவன் பேச்சில் தர்க்க ரீதியான உண்மைகள் இருந்தாலும், தவெக-காங்கிரஸ் அமைச்சரவையில் இடம்பெற்று, திமுகவை விட்டு வெளியேறிய விசிகவின் தலைவர், திடீரென காங்கிரஸ் அல்லாத மாநிலக் கட்சிகளின் குரலாக, குறிப்பாக திமுகவின் பிரதிநிதியாக டெல்லியில் முழங்கியிருப்பது ஏன்? இதன் பின்னணியில் இருக்கும் அரசியல் கணக்குகள் என்னென்ன?
விசிகவை குறிவைக்கும் திமுக…
சமீபத்திய தேர்தலில் தமிழக வெற்றி கழகத்தின் (தவெக) அமைச்சரவையில் விசிக இடம்பெற்றது முதலே, திமுக தரப்பு விசிக மீது கடும் அதிருப்தியில் இருந்து வருகிறது. விசிகவை ஒரு ‘சோபா கட்சி’ என்கிற ரீதியில் திமுகவினர் சமூக வலைதளங்களில் கடுமையாக விமர்சித்து வந்தனர். முன்னதாக திமுகவின் ஆ.ராசா, விசிகவின் அரசியல் நிலைப்பாடு குறித்து விமர்சித்தது பெரும் பரபரப்பை ஏற்படுத்தியது.
கூட்டணியில் இருந்து விலகிய விசிகவின் வாக்கு வங்கியைச் சிதைக்கவும், அக்கட்சியைப் பலவீனப்படுத்தவும் விசிகவின் முக்கிய நிர்வாகிகளைத் தங்கள் பக்கம் வளைக்க திமுக திட்டமிட்டு வருவதாக அரசியல் வட்டாரத்தில் செய்திகள் கசிந்தன. அதன் முதல் கட்டமாக, விசிகவின் தென்சென்னை மேற்கு மாவட்டச் செயலாளராகவும், முன்னாள் எம்.எல்.ஏ-வாகவும், ‘வெளிச்சம்’ தொலைக்காட்சியின் முக்கியத் தூணாகவும் கருதப்பட்ட பனையூர் பாபு நேற்று முறைப்படி திமுகவில் இணைந்தார். இது விசிகவிற்கு விழுந்த ஒரு கடுமையான அரசியல் அடியாகும். தன் கட்சியைத் திமுக மேலும் காலி செய்துவிடக் கூடாது என்ற தற்காப்பு வியூகமும் திருமாவின் தற்போதைய நகர்வுக்கு ஒரு காரணமாகப் பார்க்கப்படுகிறது.
திமுகவின் கோபமும், ராகுல் காந்திக்கு எதிரான போஸ்டர் சர்ச்சையும்
இன்று டெல்லியில் நடைபெற்ற ‘இந்தியா’ கூட்டணிக் கூட்டத்தை திமுக முழுமையாகப் புறக்கணித்துள்ளது. 5 தொகுதிகளில் கிடைத்த தேர்தல் வெற்றிக்காக தங்களை நேரில் சந்தித்து ஒரு வார்த்தை கூட நன்றி சொல்லாமல், தவெக-வுடன் திடீர் கூட்டணி அமைத்து தங்களை வஞ்சித்த காங்கிரஸ் மீது திமுக தலைமை கடும் கோபத்தில் உள்ளது.
இந்த நிலையில், இன்று டெல்லியில் இண்டியா கூட்டணிக் கூட்டம் நடைபெறும் இடத்திற்கு அருகே ராகுல் காந்தியை விமர்சித்து இந்தியில் சில போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன. ஆச்சரியப்படும் விதமாக, அந்தப் போஸ்டர்களில் தமிழகத் துணை முதலமைச்சர் உதயநிதி ஸ்டாலினின் படமும் இடம் பெற்றிருந்தது. இதன் பின்னணியில் திமுக இருக்கலாம் என்கிற பேச்சும் எழுந்தது. இதேபோன்று ஆம் ஆத்மி உள்ளிட்ட சில கட்சித் தலைவர்களின் படங்களுடனும் போஸ்டர்கள் ஒட்டப்பட்டிருந்தன.
காங்கிரஸ் மீது மாநிலக் கட்சிகள் கொண்டுள்ள அதிருப்தி
டெல்லி கூட்டத்தில் திருமாவளவன் காங்கிரசைப் போட்டு உடைத்த விதம், அங்கு கூடியிருந்த மம்தா பானர்ஜி (திரிணாமுல் காங்கிரஸ்), அகிலேஷ் யாதவ் (சமாஜ்வாதி), தேஜஸ்வி யாதவ் (ஆர்ஜேடி) மற்றும் இடதுசாரித் தலைவர்களை ஆச்சரியத்துடன் திரும்பிப் பார்க்க வைத்துள்ளது. ஏனெனில், இந்த பிராந்தியத் தலைவர்கள் அனைவருக்குமே காங்கிரஸ் கட்சியின் ‘பெரியண்ணன் மனப்பான்மை’ மீது நீண்ட நாட்களாக அதிருப்தி உள்ளது. மம்தா பானர்ஜி மேற்கு வங்கத்திலும், பினராயி விஜயன் கேரளாவிலும் காங்கிரசின் உள்ளூர் அரசியலால் தங்களுக்கு ஏற்பட்ட பாதிப்புகளை ஏற்கனவே பலமுறை சுட்டிக்காட்டியுள்ளனர். அதனைத்தான் இன்று திருமாவளவன் தேசியத் தலைவர்கள் முன்னிலையில் ஓப்பனாகப் போட்டு உடைத்துள்ளார்.
திமுகவை கூல் பண்ணவா?
தற்போது டெல்லி அரசியல் வட்டாரத்தில் கசியும் மிக முக்கியமான தகவல் என்னவென்றால், தேசிய அளவில் காங்கிரஸ் அல்லாத, அதே நேரத்தில் பாஜகவிற்கும் எதிரான ஒரு ‘மாநிலக் கட்சிகளின் மூன்றாவது மாற்று அணியை’ (Federal Front) திரட்டும் முயற்சிகளில் திமுக தீவிரமாக இறங்கியுள்ளது. இதற்காக மம்தா பானர்ஜி, அகிலேஷ் யாதவ் போன்ற தலைவர்களுடன் திமுக தொடர்பில் இருப்பதாகக் கூறப்படுகிறது.
இந்தச் சூழலில், திருமாவளவன் காங்கிரசுக்கு எதிராகப் பேசியிருப்பது ஒரே கல்லில் இரண்டு மாங்காய் அடிக்கும் வியூகமாக பார்க்கப்படுகிறது. முதலாவதாக, தமிழகத்தில் விசிகவை உடைக்கத் திட்டமிடும் திமுகவின் கோபத்தைத் தணித்து, அவர்களைக் ‘கூல்’ செய்வது. “நாங்கள் காங்கிரசுடன் கூட்டணி அமைத்திருந்தாலும், அவர்களின் தவறான அணுகுமுறையை எதிர்க்கிறோம்; நாங்கள் இன்னும் உங்களின் (திமுகவின்) உணர்வுகளோடுதான் இருக்கிறோம்” என்ற செய்தியைத் திமுகவிற்குத் திருமா மறைமுகமாகக் கடத்தியுள்ளார்.
இரண்டாவதாக, டெல்லியில் உருவாக வாய்ப்புள்ள ‘காங்கிரஸ் அல்லாத பிராந்தியக் கட்சிகளின்’ புதிய அணியில், விசிகவிற்கான ஒரு முக்கிய இடத்தையும், தேசிய அளவிலான முக்கியத்துவத்தையும் தக்க வைத்துக் கொள்வது. தேர்தல் முடிவுகளுக்குப் பிறகான இந்த டெல்லி ஆக்ஷன், தமிழகத்தில் திமுக – விசிக இடையிலான பனிப்போரை முடிவுக்குக் கொண்டு வருமா அல்லது காங்கிரஸுடனான விசிகவின் கூட்டணியில் புதிய விரிசலை ஏற்படுத்துமா என்பதைப் பொறுத்திருந்துதான் பார்க்க வேண்டும்.
– பா. முகிலன்
