எவரெஸ்ட் சிகரத்தில் காணாமல் போன வழிகாட்டி ஒருவர், உணவு, தண்ணீர் மற்றும் கூடுதல் ஆக்சிஜன் இன்றி, 6 நாட்கள் கழித்து உயிருடன் மீட்கப்பட்டுள்ள சம்பவம் அனைவரையும் நெகழ்ச்சியடையச் செய்துள்ளது.

நேபாளத்தின் அனுபவம் மிக்க மலையேற்ற வழிகாட்டி தவா ஷெர்பா, உலகின் உச்ச உயரமான எவரெஸ்ட் சிகரத்தில் ஏற்பட்ட கடுமையான சவால்களுக்கு மத்தியில் ஆறு நாட்கள் பனிப்பாறைகளுக்கு இடையே தனித்து உயிர் பிழைத்த அதிசய சம்பவம் உலகெங்கும் பெரும் நெகிழ்ச்சியையும் வியப்பையும் ஏற்படுத்தியுள்ளது. போலந்து நாட்டைச் சேர்ந்த ஒரு மலையேற்ற வீரருடன் இணைந்து எவரெஸ்ட் உச்சியை அடையும் முயற்சியில் ஈடுபட்ட தவா ஷெர்பா, கடுமையான பனிப்புயல் மற்றும் எதிர்பாராத வானிலை மாற்றங்களால் இலக்கை எட்ட முடியாமல் திரும்ப முடிவு செய்தார்.

இருவரும் கீழ்நோக்கி பயணித்தபோது, கேம்ப்-3 மற்றும் கேம்ப்-4 இடையேயான ஆபத்தான பகுதியில் மே 29-ம் தேதி தவா ஷெர்பா திடீரென காணாமல் போனார். அவருடன் சென்ற போலந்து வீரர் பாதுகாப்பாக அடிப்படை முகாமுக்கு திரும்பினாலும், தவா திரும்பாதது பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியது. உடனடியாக தேடுதல் பணிகள் தொடங்கப்பட்டன. ஹெலிகாப்டர் உதவியுடன் மற்ற ஷெர்பாக்கள் மற்றும் மீட்புக் குழுக்கள் பனி மூடிய பகுதிகளில் தீவிரமாக தேடினர். ஆனால் கடுமையான வானிலை மற்றும் பனி வழுக்கல்கள் காரணமாக தொடக்க கட்டத்தில் எந்த தடயமும் கிடைக்கவில்லை.

தவா உயிரிழந்திருக்கலாம் என்ற அச்சம் எழ, அவரது குடும்பத்தினர் நம்பிக்கையை இழந்து பாரம்பரிய இறுதிச் சடங்குகளுக்கான ஏற்பாடுகளை கூடத் தொடங்கினர். இந்த நிலையில், எவரெஸ்ட் அடிவாரப் பகுதியில் பனி மற்றும் குப்பைகளை அகற்றும் தூய்மைப் பணியில் ஈடுபட்டிருந்த ஒரு குழு, பனிப்பாறைப் பகுதியில் ஒருவர் மெதுவாக நகர்வதை கவனித்தனர். அருகில் சென்று பார்த்தபோது, கடுமையான சோர்வு, உடல் காயங்கள் மற்றும் குளிரால் பாதிக்கப்பட்ட நிலையில் தவா ஷெர்பா இருந்தது தெரியவந்தது. உணவு, தண்ணீர் அல்லது கூடுதல் ஆக்சிஜன் எதுவுமின்றி கிட்டத்தட்ட ஆறு நாட்கள் அந்த கொடூரமான சூழலில் உயிர் பிழைத்திருந்தது மலையேற்ற உலகில் அரிய வரலாறாகப் பதிவாகியுள்ளது.

மீட்புக் குழுவினர் உடனடியாக அவருக்கு முதலுதவி அளித்து பாதுகாப்பான இடத்திற்கு அழைத்துச் சென்றனர். பின்னர் ஹெலிகாப்டர் மூலம் காத்மண்டுவுக்கு கொண்டு செல்லப்பட்ட தவா, மருத்துவமனையில் தீவிர சிகிச்சைக்கு உட்படுத்தப்பட்டார். மருத்துவர்கள் அவரது உடல் நிலை மெல்ல முன்னேற்றம் காண்பதாக தெரிவித்துள்ளனர். எவரெஸ்ட் போன்ற உயரமான மலைகளில் குறைந்த ஆக்சிஜன், கடும் குளிர் (-30 டிகிரி வரை) மற்றும் பனி வீழ்ச்சி அபாயங்கள் நிறைந்த சூழலில் ஆறு நாட்கள் தனித்து உயிர் வாழ்வது மனித உடல் மற்றும் மன உறுதியின் எல்லைகளை மீறிய சாதனை என நிபுணர்கள் பாராட்டுகின்றனர். தவா ஷெர்பாவின் இந்த அதிசய மீட்பு, மலையேற்ற வீரர்களுக்கு புதிய நம்பிக்கையை ஏற்படுத்தியுள்ளதோடு, மனித உயிரின் அசைக்க முடியாத வலிமையை உலகுக்கு நினைவூட்டியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version