தமிழ்நாட்டில் பள்ளி மாணவர்களுக்கு அடையாள அட்டை வழங்கும் திட்டத்தின்கீழ் சாதி விவரங்களையும் இணைக்க முடிவு செய்யப்பட்டுள்ளதற்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ள முன்னாள் பள்ளிக்கல்வித் துறை அமைச்சர் அன்பில் மகேஷ் பொய்யாமொழி, இந்த நடவடிக்கை தேசியக் கல்விக் கொள்கை (NEP-2020)-யின் ஒரு அங்கமான APAAR அட்டைத் திட்டத்தின் மறு உருவமே என்று விமர்சித்துள்ளார்.
வருவாய்த் துறை அமைச்சர் செங்கோட்டையன் நேற்று செய்தியாளர்களிடம் கூறுகையில், “பள்ளிக்குச் செல்லும் அனைத்து குழந்தைகளுக்கும் ஆண்டுதோறும் சாதிச் சான்றிதழ் பெறும் நடைமுறைக்கு மாற்றாக அடையாள அட்டை வழங்க முடிவு செய்யப்பட்டுள்ளது. இதில் மாணவர்களின் முகவரி, சாதி விவரம், இரத்த வகை, ஆதார் எண் மற்றும் தொலைபேசி எண் ஆகியவை இணைக்கப்படும். முதற்கட்டமாக 10 மற்றும் 12-ஆம் வகுப்பு மாணவர்களுக்கு இந்த அட்டை வழங்கப்படும்” என்றார்.
இந்த அறிவிப்பு வெளியான சில மணி நேரங்களிலேயே கடும் எதிர்ப்பு கிளம்பியது. இன்று காலை தனது எக்ஸ் பக்கத்தில் இரண்டு பதிவுகள் வெளியிட்ட அன்பில் மகேஷ், “மாணவர்களின் அடிப்படைத் தகவல்கள் அடங்கிய அட்டையில் சாதி குறித்த விவரமும் இடம்பெறுவது தேவையற்றது. இரத்த வகை, ஆதார் எண் போன்ற அத்தியாவசியத் தகவல்களுடன் சாதி அடையாளத்தை இணைப்பது ஏன்? இடஒதுக்கீடு மற்றும் அரசின் சமூக நீதித் திட்டங்களைப் பயன்படுத்தும் இடங்களில் மட்டுமே சாதிச் சான்றிதழ் விவரங்களைப் பயன்படுத்தலாம்” என்று கேள்வி எழுப்பினார்.
மேலும் அவர், “ஒளிந்திருந்த பூனை சீக்கிரம் வெளியே வந்துவிட்டது. இது தேசியக் கல்விக் கொள்கை 2020-ன் ஒரு அங்கமான APAAR (Automated Permanent Academic Account Registry) அட்டைத் திட்டமே. ‘ஒரே நாடு ஒரே அடையாள அட்டை’ என்ற அடிப்படையில் தமிழ்நாட்டு மாணவர்களின் சுயவிவரங்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் திட்டம் இது. தேசியக் கல்விக் கொள்கையை ஏற்க மாட்டோம் என்று கூறிவந்த தவெக அரசு, இப்போது அதன் ஒரு பகுதியை வேறு வடிவில் அமல்படுத்துகிறது” என்று சாடினார்.
“இரண்டாயிரம் கோடி என்ன, 10,000 கோடி கொடுத்தாலும் NEP-2020-ஐ ஏற்க மாட்டோம்” என்ற தி.மு.க. தலைவர் மு.க. ஸ்டாலினின் உறுதியான நிலைப்பாட்டை நினைவுகூர்ந்த அன்பில் மகேஷ், மாணவர்களின் அடிப்படைத் தகவல்களை மத்திய அரசிடம் ஒப்படைக்கும் இந்த முயற்சியை உடனடியாக கைவிட வேண்டும் என்று வலியுறுத்தினார்.
இந்த விவகாரம் தமிழ்நாட்டில் கல்வித் துறையில் மீண்டும் சர்ச்சையை ஏற்படுத்தியுள்ளது. மாணவர்களின் தனியுரிமை மற்றும் சாதி அடையாளம் சார்ந்த பிரச்னைகள் எழுந்துள்ள நிலையில், அரசு இதுகுறித்து விரிவான விளக்கம் அளிக்க வேண்டும் என்ற கோரிக்கை எழுந்துள்ளது.
