தமிழ்நாடு முதலமைச்சர் விஜய் மீது அவதூறாகவும் மிரட்டும் தொனியிலும் பேசியதாகக் கூறப்படும் புகாரின் அடிப்படையில், விளாத்திக்குளம் தொகுதி திமுக எம்.எல்.ஏ மார்க்கண்டேயன் கைது செய்யப்பட்டுள்ளார். காவல்துறை அவர்மீது இந்திய தண்டனைச் சட்டத்தின் (பி.என்.எஸ்) மூன்று பிரிவுகளின் கீழ் வழக்குப் பதிவு செய்துள்ளது. இதில் BNS 351(3) – கடுமையான குற்ற மிரட்டல், BNS 352 – அமைதிக்கு குந்தகம் விளைவிக்கும் வகையில் திட்டமிட்ட அவமதிப்பு, BNS 353(2) – சமூகங்களிடையே பகைமையைத் தூண்டும் பொய்யான தகவல்களைப் பரப்புதல் ஆகிய பிரிவுகள் அடங்கும்.
தவெக கட்சியின் சார்பில் கரூர் மக்கள் சந்திப்பு கூட்டத்தில் முதலமைச்சர் விஜய் பேசிய கருத்துகளுக்கு பதிலடியாக மார்க்கண்டேயன் பொதுக்கூட்டத்தில் பேசியதே இந்த நடவடிக்கைக்கு காரணமாகக் கூறப்படுகிறது. இந்த சம்பவம் அரசியல் வட்டாரத்தில் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
இந்நிலையில் முன்னாள் சட்டமன்ற சபாநாயகரும், திமுக முன்னாள் எம்.எல்.ஏவுமான அப்பாவு இந்த கைதுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்துள்ளார். எக்ஸ் தளத்தில் அவர் வெளியிட்ட பதிவில், “பெருந்தலைவர் காமராஜர், பேரறிஞர் அண்ணா, கலைஞர் கருணாநிதி போன்ற தலைவர்கள் தங்கள் மீதான விமர்சனங்களை எளிதில் கடந்து செல்வார்கள். அவர்களின் வழிவந்த தளபதி மு.க.ஸ்டாலின் கூட ‘முட்டாள் முதல்வரே’ என்ற விமர்சனத்தை ‘முட்டாள் இப்படித்தான் பேசுவான்’ என்று கடந்து சென்றார்” என்று நினைவூட்டினார்.
மேலும் அப்பாவு, “சட்டப்பேரவையில் தன் அப்பாவை எங்கே காணோம் என்று நையாண்டி செய்து, ஐந்து நிமிடப் பேச்சில் முன்னாள் முதல்வரை ‘கொத்து புரோட்டா’ என்று பேசிய முதலமைச்சர், இப்போது எதிர்க்கட்சியினரின் விமர்சனத்தை ஏற்க முடியாத நிலையில் உள்ளார். கரூர் பொதுக் கூட்டத்திலே ஓடு ஓடு என்று பாட்டு பாடி இனி சட்டமன்ற கதவை பூட்டுவேன் என்று ஆணவமாய் பேசுகிறீர்கள்.. நீங்கள் என்ன மொழியில் பேசினீர்களோ அதே மொழியில் பதில் தந்துள்ளார் மார்க்கண்டேயன். எங்களை சட்டமன்றத்திற்குள் பூட்டி வைத்து ஏதாவது செய்ய நினைத்தால் எங்கள் கை பூ பறிக்கவா செய்யும்? என்று தற்காப்பு உணர்வுடன் அவர் பேசியுள்ளார்.
திமுகவினர் இதனை “தவெக ஆட்சியில் இரண்டாவது திமுக எம்.எல்.ஏ கைது” என்று விமர்சித்து வருகின்றனர். முன்னதாக திருச்செந்தூர் எம்.எல்.ஏ அனிதா ராதாகிருஷ்ணன் கைது செய்யப்பட்டதை சுட்டிக்காட்டுகின்றனர். கட்சியினரின் குற்றங்களை பொறுத்துக்கொள்ளும் அரசு, எதிர்க்கட்சியினருக்கு வேறு நியாயம் காட்டுவதாக அப்பாவு கேள்வி எழுப்பியுள்ளார்.இந்த சம்பவம் தமிழ்நாட்டு அரசியலில் மீண்டும் அவதூறு, பேச்சு சுதந்திரம், இரட்டை நீதி பற்றிய விவாதத்தை தீவிரப்படுத்தியுள்ளது.
