தமிழகத்தில் ஆட்சி அமைக்கும் முயற்சியில் தமிழக வெற்றிக் கழகம் (தவெக) தீவிரம் காட்டி வரும் நிலையில், ஆட்சி அமைக்க தேவையான ஆதரவு எம்.எல்.ஏ-க்களின் எண்ணிக்கையை திரட்டுவதில் அக்கட்சி திணறி வருகிறது.
108 தொகுதிகளில் வெற்றி பெற்ற விஜய் தலைமையிலான தவெக, காங்கிரஸ், இடதுசாரி உள்ளிட்ட கட்சிகளின் ஆதரவுடன் பெரும்பான்மைக்கு அருகில் இருந்தாலும், இன்னும் 2 உறுப்பினர்களின் ஆதரவு தேவையாக உள்ளது.
இந்தச் சூழலில் அமமுகவின் ஒரே எம்.எல்.ஏ. காமராஜ் , தவெக ஆட்சி அமைக்க ஆதரவு கடிதம் கொடுத்ததாக தவெக தரப்பில் வெளியான வீடியோ -தொடர்பான சர்ச்சை பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.
மோசடி வீடியோ
அமமுக பொதுச்செயலாளர் டிடிவி தினகரன் இன்று அளித்த பேட்டியில், “விஜய் ஆட்சி அமைத்தால் பேரழிவுதான்” என்று திட்டவட்டமாகக் கூறினார். தவெக சார்பில் ஆளுநரிடம் சமர்ப்பிக்கப்பட்ட அமமுக எம்.எல்.ஏ. காமராஜின் ஆதரவு கடிதம் மற்றும் அவர் காரில் கையெழுத்திடும் வீடியோ மோசடியானது எனவும், இதனை ஆளுநரிடம் தெரிவித்துவிட்டதாகவும் தினகரன் மேலும் கூறினார்.
“ஒரிஜினல் கடிதத்தையும் வீடியோவையும் தவெகவினர் வெளியிடட்டும். எனது ஒப்புதலுடன் கடிதம் கொடுக்கப்பட்டதாகக் கூறி கூட்டணிக்குள் குழப்பத்தை ஏற்படுத்த முயற்சிக்கின்றனர். தவெகவினர் என்னை மிரட்டப் பார்க்கின்றனர்” என்றும் அவர் குற்றம்சாட்டினார்.
காமராஜ் தனது ஒப்புதலின்றி எந்தக் கடிதத்திலும் கையெழுத்திடவில்லை எனவும், அமமுக அதிமுகவுக்கு ஆதரவு அளித்துள்ளதாகவும் தினகரன் வலியுறுத்தினார்.
போலீசில் புகார்
, “காமராஜ் கையெழுத்திடும் வீடியோ ஏஐ-ஆகக் கூட இருக்கலாம். விஜயா? புஸ்ஸி ஆனந்தா? செங்கோட்டையனா? யார் இந்த வீடியோவை எடுத்தது?” என்று கேள்வி எழுப்பினார். ஆளுநரிடம் போலி கடிதத்தின் புகைப்படத்தை (WhatsApp லெட்டர்) சமர்ப்பித்த தவெகவினர், ஒரிஜினலைக் கேட்டதும் ஓடிவிட்டதாகவும் குற்றஞ்சாட்டினார். இது தொடர்பாக போலீசில் புகார் அளித்துள்ளதாகவும் தெரிவித்தார்.
தவெக தரப்போ தங்களுக்கு காமராஜ் ஆதரவு அளித்ததாக வீடியோ வெளியிட்டு மறுப்பு தெரிவித்துள்ளது. ஆனால் தினகரன் இதை ஏற்க மறுத்து, அசல் ஆதாரங்களை வெளியிட வலியுறுத்தி வருகிறார். அமமுக எம்.எல்.ஏ. காமராஜும் தினகரனுடன் இணைந்து ஆளுநரைச் சந்தித்து அதிமுகவுக்கு ஆதரவு தெரிவித்துள்ளார். இந்தச் சர்ச்சை தமிழக அரசியலை மேலும் சிக்கலாக்கியுள்ளது. ஆட்சி அமைப்பதில் தவெக எதிர்கொள்ளும் சவால்கள் அதிகரித்துள்ள நிலையில், இந்தப் போலி ஆதரவு குற்றச்சாட்டு விஜய்க்கு பின்னடைவாக கருதப்படுகிறது.
