பிரான்சில் நடைபெறும் ‘லெ மன்ஸ்’ (Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்றுள்ள நடிகர் அஜித்குமாருக்கு உத்வேகம் அளிக்கும் விதமாக அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அவருடன் தங்கி உள்ளனர்.
திரைத்துறையைத் தாண்டி கார் பந்தயங்களில் சர்வதேச அளவில் தடம் பதித்து வரும் அஜித்குமார், பல்வேறு சாதனைகளை படைத்து வருகிறார். தற்போது பிரான்சில் நடைபெற உள்ள புகழ்பெற்ற ‘லெ மன்ஸ்’ (Le Mans) கார் பந்தயத் தொடரில் பங்கேற்க, தனது ‘அஜித்குமார் ரேசிங்’ (Ajith Kumar Racing – AKR) அணியினருடன் இணைந்து தீவிர கார் பந்தயப் பயிற்சியில் ஈடுபட்டு வருகிறார்.
அண்மையில் அவரது தாயார் மோகினி மணி காலமானநிலையில், பேரிழப்பில் இருந்து மீளாத கனத்த இதயத்துடன் மீண்டும் பந்தைய களத்திற்குத் திரும்பி உள்ளதாக தனது அதிகாரப்பூர்வ பந்தய அணியின் எக்ஸ் பக்கத்தில் பதிவிட்டார். இந்தநிலையில், அஜித்துக்கு பக்கபலமாக இருக்கும் வகையில், அவரது மனைவி ஷாலினி, மகள் அனோஷ்கா மற்றும் மகன் ஆத்விக் ஆகியோர் பிரான்ஸ் சென்று அவருடன் தங்கி உள்ளனர்.
அஜித்தின் பந்தய உடையில் இருக்கும் புகைப்படங்கள் ஒருபுறமிருக்க, அவரது மனைவி ஷாலினி மற்றும் குழந்தைகள் அவருடன் பந்தயக் களத்தில் இருக்கும் புகைப்படங்கள் ரசிகர்களிடையே நெகிழ்ச்சியையும், பெரும் உத்வேகத்தையும் ஏற்படுத்தியுள்ளது. துயரமான நேரத்திலும் அஜித்தின் கனவுக்கு அவரது குடும்பத்தினர் தூணாக நிற்பதை ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் பாராட்டி வருகின்றனர்.
