சுதந்திரத்திற்குப் பிறகு தேர்தல் வரலாற்றில் மிக அதிக அளவிலான வாக்குப்பதிவு சதவீதம் தமிழகத்தில் பதிவாகி இருப்பதற்கு தமிழ்நாடு மக்களுக்கு இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார் வாழ்த்துகளை தெரிவித்தார்.
கோவை விமான நிலையத்தில் செய்தியாளர்களைச் சந்தித்த இந்திய தலைமை தேர்தல் ஆணையர் ஞானேஷ் குமார், தமிழ்நாடு சட்டமன்றத் தேர்தலில் 4.93 கோடிக்கும் அதிகமான வாக்குகள் பதிவாகியுள்ளதாக குறிப்பிட்டார். இது சுதந்திரத்திற்குப் பிறகு தமிழ்நாட்டில் பதிவான மிக அதிகபட்ச வாக்குகளின் எண்ணிக்கையாகும் என்றார். இந்தத் தேர்தலில் ஏறத்தாழ 86 சதவீதம் வாக்குப்பதிவு எட்டப்பட்டுள்ளதாகவும், சுதந்திரத்திற்குப் பிந்தைய தமிழக தேர்தல் வரலாற்றிலேயே இதுவே மிக அதிகபட்ச வாக்குப்பதிவு சதவீதமாகும் என்று தேர்தல் ஆணையர் பெருமிதத்துடன் குறிப்பிட்டார்.
கோவை அமிர்தா விஷ்வ வித்யாபீடம் பல்கலைக்கழகத்தின் பட்டமளிப்பு விழாவில் சிறப்பு விருந்தினராகக் கலந்து கொள்வதற்காகத் தான் கோவை வந்ததாகத் அவர் தெரிவித்தார். தென்னிந்தியாவில் அதிவேகமாக வளர்ந்து வரும் நகரங்களில் கோவை மிக முக்கியமானது எனக் குறிப்பிட்ட அவர், உலகத்தரம் வாய்ந்த கல்விச் சூழல், ஜவுளித் தொழில் மற்றும் பொறியியல் துறைத் திறமையால் கோவை நாட்டின் வளர்ச்சிக்குப் பெரும் பங்காற்றி வருவதாகப் பாராட்டினார். தமிழகத்தின் வளமான ஆன்மீக, கலாச்சார பாரம்பரியம் மற்றும் இயற்கை அழகைப் பெருமையுடன் போற்ற வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டார்.

