மேற்கு வங்க மாநிலம், வடக்கு தினஜ்பூர் மாவட்டத்தில் உள்ள கோஷ்புகூர் சுங்கச்சாவடியில், சுங்கக் கட்டணம் செலுத்துவதில் ஏற்பட்ட தகராறால் ஊழியர் ஒருவர் காரின் கதவைப் பிடித்துக்கொண்டு 12 கிலோமீட்டர் தூரம் இழுத்துச் செல்லப்பட்ட சம்பவம் பெரும் பரபரப்பை ஏற்படுத்தியுள்ளது.

கோஷ்புகூர் சுங்கச்சாவடியில், கார் ஒன்றின் உரிமையாளர்களுக்கும் சுங்கச்சாவடி ஊழியர்களுக்கும் இடையே கட்டணம் செலுத்துவது தொடர்பாக வாக்குவாதம் ஏற்பட்டது. கட்டணம் செலுத்தாமல் காரை எடுக்க முயன்றபோது, காரை நிறுத்த முயற்சி செய்த ஊழியர் ஒருவர் காரின் ஜன்னல் வழியாக உள்ளே கையை விட்டுத் தடுக்க முயன்றார். அந்தச் சமயத்தில், ஓட்டுநர் காரை அதிவேகமாக இயக்கத் தொடங்கியதால், அந்த ஊழியர் காரின் கதவைப் பிடித்துக்கொண்டு தொங்கிய நிலையில் இழுத்துச் செல்லப்பட்டார்.

கார் அதிவேகமாகச் சென்றபோதும், அந்த ஊழியர் பயப்படாமல் காரைப் பிடித்துக் கொண்டே பயணம் செய்துள்ளார். இதைப் பார்த்த சக வாகன ஓட்டிகள் காரை நிறுத்தும்படி எச்சரித்தும், ஓட்டுநர் அதைக் கண்டு கொள்ளாமல் காரைச் செலுத்தினார். இதில் இஸ்லாம்பூரைச் சேர்ந்த முகமது பாப்லு என்ற வாகன ஓட்டி, காரைத் துரத்திச் சென்று காவல்துறைக்குத் தகவல் தெரிவித்தார்.

தகவல் அறிந்த காவல்துறையினர், அடுத்ததாக உள்ள புல்பாரி  சுங்கச்சாவடி அதிகாரிகளுக்குத் தகவல் கொடுத்து, காரை இடைமறிக்க ஏற்பாடு செய்தனர். புல்பாரி சுங்கச்சாவடியில் கார் தடுத்து நிறுத்தப்பட்டு, காயத்துடன் இருந்த ஊழியர் பத்திரமாக மீட்கப்பட்டார். காரில் இருந்த பயணிகள் மற்றும் ஓட்டுநர் உடனடியாகக் கைது செய்யப்பட்டு விசாரணை நடைபெற்று வருகிறது.

சரியான நேரத்தில் சக வாகன ஓட்டியின் விழிப்புணர்வும், காவல்துறையின் துரித நடவடிக்கையும் அந்த ஊழியரின் உயிரைக் காப்பாற்றியுள்ளது. இந்தச் சம்பவம் அந்தப் பகுதியில் பெரும் அதிர்ச்சியை ஏற்படுத்தியுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version