வேலூரில் ஆட்சியர் அலுவலகம் எதிரே பயிர் கடனை முழுமையாக தள்ளுபடி செய்ய கோரி விவசாயிகள் நூதன ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.

வேலூர் மாவட்டம் சத்துவாச்சாரியில் தமிழக விவசாயிகள் சங்கத்தின் சார்பில் விவசாயக் கடன் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வலியுறுத்தி கண்டன ஆர்ப்பாட்டம் நடைபெற்றது. மாநில பொது செயலாளர் உதயகுமார் தலைமையில் நடைபெற்ற இந்தப் போராட்டத்தை மாநில பொருளாளர் சுபாஷ் தொடக்கி வைத்தார். ராமதாஸ், அரிமூர்த்தி, வெங்கடேசன் உள்ளிட்ட திரளான மாவட்ட மற்றும் கிளை நிர்வாகிகள், விவசாயிகள் பெருந்திரளாகப் பங்கேற்றனர்.

தேர்தல் பிரச்சாரத்தின்போது தவெக அரசு விவசாயிகளின் பயிர்க் கடன்களைத் தள்ளுபடி செய்வதாக வாக்குறுதி அளித்திருந்தது. ஆனால் ஆட்சிப் பொறுப்பேற்ற பின்னர் அந்த வாக்குறுதியை நிறைவேற்றாமல் விவசாய சமூகத்தை ஏமாற்றுவதாகக் குற்றம் சாட்டினர் விவசாயிகள். “விவசாயம் தமிழ்நாட்டின் முதுகெலும்பு. ஆனால் அரசின் அலட்சியப் போக்கு அதை நலிவடையச் செய்கிறது” எனக் கூறிய அவர்கள், உடனடியாக அனைத்து பயிர்க் கடன்களையும் முழுமையாகத் தள்ளுபடி செய்ய வேண்டும் என வலியுறுத்தினர்.

விவசாயிகள் தங்களது கோரிக்கையை வலுப்படுத்தும் வகையில் நூதன முறையில் ஆர்ப்பாட்டம் நடத்தினர். கோரிக்கை மனுவில் கையெழுத்திட்டு, நெற்றியில் நாமம் போட்டு, வாயில் கருப்புத் துணி கட்டியபடி அமைதியாகப் போராட்டத்தில் ஈடுபட்டனர். உழவு மாடுகள் இல்லாத சூழல், தொழிலாளர் பற்றாக்குறை, உரம் மற்றும் விதை விலை உயர்வு, உற்பத்திப் பொருட்களுக்கு லாபகரமான விலை கிடைக்காத நிலை உள்ளிட்ட பல்வேறு சிரமங்களுக்கு மத்தியிலும் விவசாயத்தைத் தொடர்ந்து நடத்தி வருவதாக அவர்கள் தெரிவித்தனர். இத்தகைய சூழலில் அரசு விவசாயிகளுக்கு உரிய ஆதரவு அளிக்க வேண்டும் என்பதே அவர்களது எதிர்பார்ப்பு.

ஆர்ப்பாட்டத்தின் போது ஒரு விவசாயி திடீரென மயங்கி விழுந்த சம்பவம் பரபரப்பை ஏற்படுத்தியது. உடனடியாக அவரை மீட்டு அருகிலுள்ள மருத்துவமனைக்கு அனுப்பி வைக்கப்பட்டார். இந்தச் சம்பவம் விவசாயிகளின் கடும் மன உளைச்சலையும், நிதி நெருக்கடியையும் பிரதிபலிப்பதாகப் போராட்டக்காரர்கள் சுட்டிக்காட்டினர். தமிழக விவசாயிகள் சங்க நிர்வாகிகள் அரசுக்கு எச்சரிக்கை விடுத்து, “வாக்குறுதிகளை நிறைவேற்றாவிட்டால் மாநிலம் தழுவிய போராட்டங்கள் தீவிரப்படுத்தப்படும்” என அறிவித்தனர்.

விவசாயத் துறையின் வளர்ச்சியும், உணவுப் பாதுகாப்பும் உறுதிப்படுத்தப்பட வேண்டுமெனில், பயிர்க் கடன் தள்ளுபடி உள்ளிட்ட நடைமுறைச் சிக்கல்களுக்கு உடனடி தீர்வு காண வேண்டும் என்பது விவசாய சமூகத்தின் ஒருமித்த குரலாக ஒலித்தது. இந்த ஆர்ப்பாட்டம் விவசாயிகளின் தொடர் போராட்டங்களின் ஒரு பகுதியாகப் பார்க்கப்படுகிறது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version