தரமான பொழுதுபோக்குத் திரைப்படங்களைத் தயாரிக்கும் நோக்கில், தமிழ் திரையுலகில் ‘டிராமா கம்பனி’ (Drama Company) என்ற புதிய தயாரிப்பு நிறுவனம் தனது பயணத்தைத் தொடங்கியுள்ளது. தயாரிப்பாளர் பாலமுருகன் தயாரிப்பில், கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் மற்றும் இளம் நடிகர் அபிஷன் ஜீவிந்த் ஆகியோர் முதன்மை கதாபாத்திரங்களில் நடிக்கும் புதிய திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ பூஜை சென்னையில் கோலாகலமாக நடைபெற்றது.

இன்னும் பெயரிடப்படாத இத்திரைப்படத்தில், ‘ஜெயிலர்’ படம் மூலம் தமிழக ரசிகர்களைக் கவர்ந்த கன்னட சூப்பர் ஸ்டார் டாக்டர் சிவராஜ்குமார் நடிக்கிறார். அவருடன், ‘டூரிஸ்ட் ஃபேமிலி’ படத்தை இயக்கிய, ‘வித் லவ்’ படம் மூலம் நடிகராகக் கவனம் ஈர்த்தவருமான திறமையான இளம் கலைஞர் அபிஷன் ஜீவிந்த் இணைந்து நடிக்கிறார். தெலுங்குத் திரையுலகில் பிரபலமான ஷிவானி நாகாரம் இப்படத்தில் கதாநாயகியாக ஒப்பந்தமாகியுள்ளார். இவர்களுடன் ‘ஹார்ட் பீட்’ பிரபலம் யோகலட்சுமி, பிக் பாஸ் கானா வினோத், சங்கீதா மாதவன், பெஞ்சமின் உள்ளிட்ட பலர் முக்கிய வேடங்களில் நடிக்கின்றனர்.

இத்திரைப்படத்தின் மூலம் கௌதம் சிவராமன் இயக்குநராகத் தமிழ் சினிமாவில் அறிமுகமாகிறார். சென்னையில் நடைபெற்ற இப்படத்தின் தொடக்க விழாவில் திரைத்துறையைச் சேர்ந்த முக்கிய பிரபலங்களான சௌந்தர்யா ரஜினிகாந்த், கலைப்புலி எஸ். தாணு, இயக்குநர் சி. பிரேம்குமார், நடிகர் மணிகண்டன், கென் கருணாஸ், தயாரிப்பாளர் ஆர்.டி. ராஜா உள்ளிட்ட பலர் கலந்துகொண்டு படக்குழுவினரை வாழ்த்தினர்.

இப்படத்திற்கு லியோன் ஜேம்ஸ் இசையமைக்க, பிரகதீஷ் பிரபு ஒளிப்பதிவு செய்கிறார். சுரேஷ் படத்தொகுப்புப் பணிகளையும், சுவாதி ராமகிருஷ்ணன் ஆடை வடிவமைப்பையும் கவனித்துக்கொள்கின்றனர்.

இப்படத்தின் முதற்கட்ட படப்பிடிப்பு தற்போது சென்னையில் விறுவிறுப்பாகத் தொடங்கி நடைபெற்று வருகிறது. படத்தின் தலைப்பு மற்றும் இதர அறிவிப்புகள் விரைவில் வெளியாகும் எனத் தயாரிப்பு நிறுவனம் தெரிவித்துள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version