உலகக் கோப்பை போட்டியில் ஒரே ஆட்டத்தில் 5 கோல்கள் அடித்த முதல் ஆப்பிரிக்க அணி என்கிற வரலாற்றை படைத்துள்ளது செனகல் அணி.
வெள்ளிக்கிழமை டொராண்டோவில் நடைபெற்ற குரூப் கட்ட ஆட்டத்தில், ஈராக் அணியை 5-0 என்ற கோல் கணக்கில் செனகல் அபாரமாக வீழ்த்தியது. இந்த தோல்வியால் ஈராக் அணியின் அடுத்த சுற்று வாய்ப்பு முற்றிலும் முடிவுக்கு வந்தது. இரு அணிகளுக்கும் வெற்றி அவசியமான ‘வாழ்வா-சாவா’ போட்டியாக இது அமைந்திருந்தது.
இந்த ஆட்டத்தில் இஸ்மைலா சார் ஒரு கோல் அடித்ததுடன், ஒரு கோலுக்கான அசிஸ்ட்டையும் வழங்கினார். இதன் மூலம் உலகக் கோப்பை வரலாற்றில் ஒரு போட்டியில் கோலும், அசிஸ்ட்டும் பதிவு செய்த முதல் செனகல் வீரர் என்ற சாதனையைப் படைத்தார். மேலும், உலகக் கோப்பை போட்டிகளில் 4 கோல்கள் அடித்ததன் மூலம் செனகலின் அதிக கோல்கள் அடித்த வீரராகவும் உயர்ந்துள்ளார்.
இந்தப் போட்டியில் இஸ்மைலா சார், பாபே குயே மற்றும் இலிமான் ந்தியாயே ஆகிய மூவரும் தலா ஒரு கோல் அடித்ததுடன், ஒரு கோலுக்கான அசிஸ்ட்டும் வழங்கினர். உலகக் கோப்பை வரலாற்றில் ஒரே அணியைச் சேர்ந்த மூன்று வீரர்கள் ஒரே போட்டியில் கோலும், அசிஸ்ட்டும் பதிவு செய்தது 2014 உலகக் கோப்பையில் பிரேசிலை 7-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய ஜெர்மனிக்குப் பிறகு இதுவே முதல் முறை.
மேலும், மாற்று வீரராக களமிறங்கிய இலிமான் ந்தியாயே, கோல் அடித்ததுடன், ஒரு கோலுக்கான அசிஸ்ட்டும் வழங்கி, எதிரணியின் பெனால்டி பாக்ஸில் 5 முறை பந்தை தொட்டு, 5 வெற்றிகரமான டிரிபிள்களையும் பதிவு செய்த உலகக் கோப்பை வரலாற்றின் முதல் வீரராகவும் சாதனை படைத்தார்.
போட்டி தொடங்கிய 4-வது நிமிடத்திலேயே செனகல் முன்னிலை பெற்றது. கார்னர் வாய்ப்பில் அப்துலயே செக் தலையால் முட்டிய பந்து, ஹபீப் டியாரா மீது பட்டு திசை மாறி ஈராக் கோல்கீப்பர் அகமது பாசில்-ஐ ஏமாற்றி கோலாக மாறியது.
13-வது நிமிடத்தில், செனகலின் சாடியோ மனேவை கோல் வாய்ப்பைத் தடுத்ததற்காக ஈராக் வீரர் ரெபின் சுலாகா நேரடி சிவப்பு அட்டை பெற்று வெளியேற்றப்பட்டார். VAR பரிசீலனைக்குப் பிறகே இந்த முடிவு உறுதி செய்யப்பட்டது.
முதல் பாதியில் மேலும் கோல் அடிக்க முடியாத செனகல், இரண்டாவது பாதியில் ஆதிக்கம் செலுத்தியது. 56-வது நிமிடத்தில் லாமின் கமாராவின் பாஸை இஸ்மைலா சார் கோலாக மாற்றி 2-0 என முன்னிலையை அதிகரித்தார்.
அதன் மூன்று நிமிடங்களுக்குப் பிறகு மாற்று வீரராக களமிறங்கிய பாபே குயே, இடது காலால் அற்புதமான ஷாட்டை அடித்து மூன்றாவது கோலைப் பதிவு செய்தார். தொடர்ந்து 71-வது நிமிடத்தில் தொலைதூரத்திலிருந்து சக்திவாய்ந்த ஷாட் மூலம் தனது இரண்டாவது கோலையும் அடித்தார்.
இறுதியாக, மற்றொரு மாற்று வீரரான இலிமான் ந்தியாயே ஐந்தாவது கோலை அடித்து செனகலின் அபார வெற்றியை உறுதி செய்தார்.
இந்த வெற்றியின் மூலம், கோல் வித்தியாசத்தில் முன்னிலை பெற்றுள்ள செனகல் அணி, அடுத்த சுற்றுக்கு முன்னேறும் வாய்ப்பை மிகவும் வலுப்படுத்தியுள்ளது.
