2026 பிஃபா உலகக்கோப்பை கால்பந்து தொடரின் விறுவிறுப்பான ‘F’ பிரிவு லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி, துனிசியாவை 4-0 என்ற கோல் கணக்கில் வீழ்த்தி அபார வெற்றி பெற்றுள்ளது. உலகக்கோப்பை வரலாற்றின் 1000-ஆவது போட்டியாக அமைந்த இந்த ஆட்டத்தில் ஜப்பான் அணி பல்வேறு புதிய சாதனைகளைப் படைத்துள்ளது.
இந்த தொடர்ச்சியான தோல்வியின் மூலம் துனிசியா அணி உலகக்கோப்பை தொடரிலிருந்து அதிகாரப்பூர்வமாக வெளியேறியுள்ளது. ஹைட்டி மற்றும் துருக்கி நாடுகளைத் தொடர்ந்து, இந்த தொடரிலிருந்து வெளியேறும் 3-ஆவது நாடாக துனிசியா மாறியுள்ளது.
தனது முதல் போட்டியில் நெதர்லாந்துடன் 2-2 என டிரா செய்திருந்த ஜப்பான், இந்த முதல் வெற்றியின் மூலம் குரூப் ‘F’ பிரிவில் 2-ஆவது இடத்திற்கு முன்னேறி, நாக்-அவுட் சுற்றுக்கான வாய்ப்பை உறுதி செய்துள்ளது. தனது அடுத்த கடைசி லீக் ஆட்டத்தில் ஜப்பான் அணி, ஸ்வீடனை எதிர்கொள்கிறது.
உலகக்கோப்பை வரலாற்றில் 2010-ஆம் ஆண்டு டென்மார்க் அணிக்கு எதிராக 3 கோல்கள் அடித்ததே ஜப்பானின் சிறந்த சாதனையாக இருந்தது. தற்போது 16 ஆண்டுகளுக்குப் பிறகு, உலகக்கோப்பையில் ஜப்பான் அணி 3-க்கும் மேற்பட்ட கோல்களை அடித்து அசத்தியுள்ளது.
உலகக்கோப்பை கால்பந்து போட்டி ஒன்றில் 4 கோல்களை அடித்த முதல் ஆசிய அணி என்ற வரலாற்றுச் சாதனையை ஜப்பான் படைத்துள்ளது. இப்போட்டியில் ஜப்பான் வீரர் அயாஸ் உடா (Ayase Ueda) ஆட்டத்தின் 31 மற்றும் 82-ஆவது நிமிடங்களில் இரண்டு கோல்களை அடித்து அசத்தினார். இதன் மூலம் உலகக்கோப்பை போட்டி ஒன்றில் 2 கோல்களை அடித்த முதல் ஜப்பான் வீரர் என்ற பெருமையைப் பெற்றுள்ளார்.
