தமிழக நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாரிப்பு பணி தீவிரமாக நடைபெற்று வருவதாகவும், அடுத்த இரு வாரங்களுக்குள் அது சட்டமன்றத்தில் தாக்கல் செய்யப்படும் என்றும், அதன் பின்னர் திருத்தப்பட்ட பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் கூட்டப்படும் என்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் அறிவித்தார்.
புதுச்சேரி உப்பளம் இந்திராகாந்தி விளையாட்டு மைதானத்தின் உள்விளையாட்டு அரங்கில் புதுச்சேரி கூடைப்பந்து சங்கம் சார்பில் 76-வது ஜூனியர் தேசிய ஆண்கள் மற்றும் பெண்கள் கூடைப்பந்து சாம்பியன்ஷிப் போட்டிகளின் நிறைவு விழா நேற்று இரவு கோலாகலமாக நடைபெற்றது. இந்திய அளவில் இளம் வீரர், வீராங்கனைகளின் திறமையை வெளிக்கொணரும் முக்கிய தேசிய போட்டியாக இது கருதப்படுகிறது.
விழாவில் சிறப்பு விருந்தினராக இந்திய கூடைப்பந்து சம்மேளனத் தலைவரும், தமிழக விளையாட்டுத் துறை அமைச்சருமான ஆதவ் அர்ஜூனா மற்றும் தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன் ஆகியோர் கலந்துகொண்டனர். இருவரும் போட்டியில் சிறப்பாக செயல்பட்டு சாம்பியன் பட்டம் வென்ற வீரர்கள் மற்றும் வீராங்கனைகளுக்கு கோப்பைகள், பதக்கங்கள் மற்றும் பாராட்டுச் சான்றிதழ்களை வழங்கி கௌரவித்தனர். ஆண்கள் பிரிவில் கர்நாடகா அணி சாம்பியன் பட்டத்தை கைப்பற்றியது. இரண்டாவது இடத்தை அரியானா அணியும், மூன்றாவது இடத்தை ராஜஸ்தான் அணியும் பெற்றன. பெண்கள் பிரிவில் சத்தீஸ்கர் அணி முதலிடம் பிடித்த நிலையில், கேரளா இரண்டாவது இடத்தையும், தமிழக அணி மூன்றாவது இடத்தையும் தக்கவைத்தன.
விழாவுக்குப் பின்னர் செய்தியாளர்களைச் சந்தித்த தமிழக நிதியமைச்சர் மரிய வில்சன், “புதுச்சேரி எனது பிறந்த ஊர். இங்கு கூடைப்பந்து போட்டியில் பங்கேற்பது பழைய இனிய நினைவுகளை மீட்டுருவாக்கியது. அமைச்சராகப் பங்கேற்கும் எனது முதல் நிகழ்ச்சியாகவும் இது அமைந்தது” என்று உணர்ச்சிபூர்வமாகத் தெரிவித்தார். தொடர்ந்து பேசிய அவர், தமிழக முதலமைச்சர் விஜய் அவர்கள் அறிவித்தபடி மாநிலத்தின் நிதிநிலை குறித்த வெள்ளை அறிக்கை தயாரிக்கும் பணி முழு வீச்சில் நடைபெற்று வருவதாகக் கூறினார். “இன்னும் இரு வாரங்களுக்குள் வெள்ளை அறிக்கை தாக்கல் செய்யப்படும். அதைத் தொடர்ந்து திருத்திய பட்ஜெட் கூட்டத்தொடர் விரைவில் நடைபெறும்” என்றார்.
முதலமைச்சர் விஜய்யின் சமீபத்திய டெல்லி பயணம் வெற்றியா, தோல்வியா என செய்தியாளர்கள் கேட்டபோது, “அது மரபு மற்றும் சீர்முறை சார்ந்த விஷயம். முதல் முறையாக தமிழக முதலமைச்சராக அவர் பிரதமரை சந்தித்துள்ளார். இது இயல்பான நடைமுறை” என்று பதிலளித்தார். புதுச்சேரி தட்டாஞ்சாவடி இடைத்தேர்தலில் தவெக போட்டியிடுமா எனும் கேள்விக்கு, “அதை கட்சித் தலைமையே முடிவு செய்யும்” என்று மரிய வில்சன் கூறினார். இந்த நிகழ்ச்சி தமிழக-புதுச்சேரி உறவை மேலும் வலுப்படுத்தும் வகையில் அமைந்தது என்பது குறிப்பிடத்தக்கது.
