ஊழல் என்பதே இனி நடந்துவிடக்கூடாது என்பதில் தீவிர கண்காணிப்புடன்  இருப்பதாகவும் அவ்வாறு எங்கேயும் ஊழல் நடந்தால் அதனை பொதுமக்கள் சுட்டிக்காட்டுமாறு வருவாய்த்துறை அமைச்சர் செங்கோட்டையன் வலியுறுத்தியுள்ளார்.

கோவையில் செய்தியாளர்களைச் சந்தித்த அவர், தமிழகத்தில் நேர்மையான மற்றும் தூய்மையான நிர்வாகத்தை வழங்க வேண்டும் என்பதே முதலமைச்சரின் முதன்மை நோக்கமாகும். அதற்கேற்பவே அனைத்து நடவடிக்கைகளும் எடுக்கப்பட்டு வருகின்றன. ஊழலற்ற நேர்மையான ஆட்சியை வழங்குவதே அரசின் நோக்கம் என்று குறிப்பிட்டார். ஊழல் நடந்ததற்கான தகவல் உண்மையாக இருந்தால், அதில் தனது நேரடி கவனத்துடன் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்படும் என்றும் அவர் உறுதியளித்துள்ளார்.

தமிழக வெற்றிக் கழகத்தின் வளர்ச்சி குறித்துப் பேசிய அவர், இந்தியாவில் ஒரு புதிய இயக்கம் தொடங்கப்பட்டு இரண்டே ஆண்டுகளில், பணநாயகத்தை வீழ்த்தி ஜனநாயகத்தை நிலைநாட்டியுள்ளதாகக் குறிப்பிட்டார். மக்கள் என்றென்றைக்கும் முதலமைச்சராக இருக்கப்போகும் விஜய் அவர்களுக்குத் தங்களின் வாக்குகளை அன்றே அளித்துவிட்டார்கள் என்று தெரிவித்தார்.

வருவாய்த்துறையின் வரவு-செலவு தொடர்பான புள்ளிவிவரங்களை முழுமையாகச் சமர்ப்பிக்கக் குறைந்தது ஒரு மாத காலமாவது அவகாசம் தேவை. தற்போது அதற்கான விவரங்கள் கையில் இல்லை. எனினும், ஏழை எளிய மக்களுக்குப் பட்டா வழங்குவதில் ஏதேனும் குளறுபடிகள் அல்லது தவறுகள் இருந்தால், அதனை நேரடியாகத் தனது கவனத்திற்குக் கொண்டு வரலாம்; உடனடியாக அதற்குத் தீர்வு காணப்படும் என அதிகாரிகளுக்கு அறிவுறுத்தப்பட்டுள்ளது.

சொத்துவரி மற்றும் குப்பை வரி உயர்வு தொடர்பான கேள்விகளுக்கு, அது உள்ளாட்சித் துறை சார்ந்த விஷயம் என்பதால் சம்பந்தப்பட்ட அமைச்சரிடமே கேட்க வேண்டும் என்று கூறிய அவர், சட்டம் ஒழுங்கு குறித்த கேள்விகளுக்குப் பதிலளிக்காமல் கடந்து சென்றார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version