நடிகர் அஜித்குமாரின் தாயார் மோகினி மணி தனது 84-வது வயதில் உடல்நலக்குறைவு காரணமாக இன்று உயிரிழந்தார். சென்னை பாலவாக்கத்தில் உள்ள அஜித்தின் இல்லத்தில் இறுதிச்சடங்குகள் நடைபெற உள்ளன.

அஜித்குமார் தயார் மறைவுக்கு தமிழக அரசியல் கட்சி தலைவர்கள் தங்கள் இரங்கலைத் தெரிவித்துள்ளனர்.

மு.க.ஸ்டாலின், திமுக தலைவர்”-

அன்புச் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தியறிந்து வேதனையடைந்தேன்.

உயிர்கொடுத்து, தான் உயரங்கள் தொட்டதைப் பார்த்து மகிழ்ச்சி கொண்ட அன்னையினை இழந்து வாடும் திரு. அஜித்குமார் அவர்களைத் தேற்ற என்னிடம் வார்த்தைகள் இல்லை.

அன்னையுடனான அழகிய தருணங்களே இந்தத் துயரில் அவர் மீளத் துணைநிற்க விழைகிறேன். திரு. அஜித்குமார் அவர்களுக்கும் அவரது குடும்பத்தினருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலும் ஆறுதலும்.

 

எடப்பாடி பழனிசாமி, அதிமுக பொதுச் செயலாளர்;-

திரையுலகில் முன்னணி நட்சத்திர நடிகரும் , கார் பந்தய வீரருமான சகோதரர் திரு.அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் காலமானார் என்ற செய்தி அறிந்து மிகுந்த துயருற்றேன்.

பாசமிகு தாயாரை இழந்து வாடும் சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தாருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக்கொள்கிறேன். மறைந்த திருமதி. மோகினி மணி அவர்களின் ஆன்மா இறைவன் திருவடி நிழலில் இளைப்பாற எல்லாம் வல்ல இறைவனை வேண்டுகிறேன்.

 

நயினார் நாகேந்திரன், பாஜக தமிழக தலைவர்:

இன்றைய தினம் தமிழ் திரையுலகின் முன்னணி நடிகரான திரு. அஜித் குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி அவர்கள் இயற்கை எய்திய செய்தி மிகுந்த வேதனையையும் ஆழ்ந்த வருத்தத்தையும் அளிக்கிறது.

அவரை இழந்து வாடும் திரு. அஜித் குமார் அவர்களுக்கும், அவரது குடும்பத்தினருக்கும், உறவினர்களுக்கும் மற்றும் நண்பர்களுக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

அவரது ஆன்மா சாந்தியடைய எல்லாம் வல்ல இறைவனை பிரார்த்திக்கிறேன். ஓம் சாந்தி!

 

அண்ணாமலை, பாஜக முன்னாள் தலைவர்:-

நடிகரும், கார் பந்தய வீரருமான திரு. அஜித் குமார் அவர்களது தாயார், திருமதி. மோகினி அவர்கள், வயது மூப்பின் காரணமாக காலமான செய்தி, மிகுந்த வருத்தமளிக்கிறது.

இந்தத் துயரமான நேரத்தில், திரு. அஜித் குமார் மற்றும் அவரது குடும்பத்தினருக்கு, ஆழ்ந்த இரங்கல்களைத் தெரிவித்துக் கொள்கிறேன். அவரது தாயார் ஆன்மா இறைவன் திருப்பாதங்களை அடைய வேண்டிக் கொள்கிறேன். ஓம் சாந்தி!

அன்புமணி ராமதாஸ், பாமக தலைவர்;-

தமிழ்த் திரைப்பட நடிகர் அஜித்குமார் அவர்களின் தாயார் மோகினி மணி அவர்கள் உடல்நலக் குறைவு காரணமாக காலமானார் என்ற செய்தியறிந்து அதிர்ச்சியும், வேதனையும் அடைந்தேன்.

தாய் மீது நடிகர் அஜித்குமார் கொண்டிருந்த அன்பை நான் அறிவேன். உலகில் எவராலும் தாங்கிக் கொள்ள முடியாத இழப்பு என்பது தாயாரின் மறைவு தான்.

அன்னையை இழந்து வாடும் நடிகர் அஜித்குமார் அவர்கள் உள்ளிட்ட குடும்பத்தினர், நண்பர்கள் உள்ளிட்ட அனைவருக்கும் எனது ஆழ்ந்த இரங்கலையும், அனுதாபங்களையும் தெரிவித்துக் கொள்கிறேன்.

 

கமல்ஹாசன், மநீம தலைவர்:-

சகோதரர் திரு. அஜித்குமார் அவர்களின் தாயார் திருமதி. மோகினி மணி அவர்கள் மறைந்த செய்தி அறிந்து வருத்தமடைந்தேன். அன்புத் தாயை இழந்து தவிக்கும் அஜித்குமாருக்கும் அவரது குடும்பத்தாருக்கும் எனது மனமார்ந்த ஆறுதல்களைத் தெரிவித்துக்கொள்கிறேன்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version