தமிழகத்தில் உள்ள டாஸ்மாக் சில்லறை விற்பனை கடைகளில் அரசு நிர்ணயித்த விலையை விடக் கூடுதலாக மதுபானங்களை விற்றால், ரூ.10,000 வரை அபராதம் மற்றும் கடுமையான ஒழுங்கு நடவடிக்கைகள் எடுக்கப்படும் என டாஸ்மாக் நிர்வாகம் எச்சரித்துள்ளது. இது தொடர்பாக அனைத்து மாவட்ட மேலாளர்களுக்கும் டாஸ்மாக் தலைமை அலுவலகத்திலிருந்து அதிகாரப்பூர்வ சுற்றறிக்கை அனுப்பப்பட்டுள்ளது.

வாடிக்கையாளர் புகார்கள் அல்லது திடீர் ஆய்வுகளின் மூலம் கூடுதல் விலைக்கு மது விற்பனை செய்யப்படுவது உறுதிசெய்யப்பட்டால், வசூலிக்கும் கூடுதல் தொகைக்கேற்ப அபராதம் நிர்ணயிக்கப்படும். அதன்படி, கூடுதலாக வசூலிக்கப்படும் ஒவ்வொரு ரூபாய்க்கும் தலா ரூ.1,000 வீதம் அதிகபட்சமாக ரூ.9,000 வரையிலும், ரூ.10 அல்லது அதற்கு மேல் கூடுதல் வசூல் செய்யப்பட்டால் நேரடியாக ரூ.10,000 அபராதமும் விதிக்கப்படும். இந்த அபராதத் தொகையில் 60 சதவீதத்தை விற்பனையாளரும், 40 சதவீதத்தை அன்றைய தினத்திற்கான மேற்பார்வையாளரும் கட்டாயம் செலுத்த வேண்டும்; மேற்பார்வையாளர் இல்லாத பட்சத்தில் முழுத் தொகையையும் விற்பனையாளரே செலுத்த நேரிடும்.

மேலும், கூடுதல் விலைக்கு மது விற்பவர்கள் மீது மூன்று கட்டங்களாகக் கடுமையான நடவடிக்கைகள் எடுக்கப்படும் என அறிவிக்கப்பட்டுள்ளது. முதல் முறை தவறு செய்தால் ஒரு மாத காலத்திற்குத் தற்காலிகப் பணியிடை நீக்கம் செய்யப்படுவதுடன், அபராதம் வசூலிக்கப்பட்டு தலைமையகத்தின் ஒப்புதலுடன் மட்டுமே மீண்டும் பணி வழங்கப்படுவார்கள். இரண்டாவது முறை தவறு செய்பவர்கள் மூன்று மாத காலம் சஸ்பெண்ட் செய்யப்பட்டு மதுபானக் கிடங்கிற்கு பணியிட மாற்றம் செய்யப்படுவர். மூன்றாவது முறை தவறு செய்தால் உள்விசாரணை நடத்தப்பட்டு எந்தவிதத் தட்சணையும் இன்றி நிரந்தரமாகப் பணி நீக்கம் செய்யப்படுவர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version