தூத்துக்குடி இனிகோ நகர் கடற்கரை பகுதி வழியாக படகு மூலம் இலங்கைக்கு கடத்தப்பட இருந்த ரூபாய் 50 லட்சம் மதிப்பிலான 1260 கிலோ பீடி இலைகளை, சரக்கு லாரியுடன் க்யூ பிரிவு போலீசார் பறிமுதல் செய்தனர்.
தூத்துக்குடி மாவட்ட கடற் பகுதி வழியாக இலங்கைக்கு பைபர் படகுமூலம் எந்தவித ஆவணங்களும் இன்றி தொடர்ந்து போதை மருந்துகள், பீடி இலைகள், மஞ்சள், மளிகை பொருட்கள், மருந்து மாத்திரைகள், பட்டாசுகள், அழகு சாதன பொருட்கள், வாசனை திரவியங்கள், சோப் ஆகியவை கடத்தப்பட்டு வருகின்றன.
இந்தக் கடத்தலை தடுக்க தூத்துக்குடி மாவட்ட க்யூ பிரிவு காவல் துறையினர் மற்றும் கடலோர காவல் நிலைய போலீசார் ஆகியோர் அவ்வப்போது ரோந்து பணியில் ஈடுபட்டு கடத்தலை தடுத்து வருகின்றனர்.
இந்த நிலையில் இன்று அதிகாலை தூத்துக்குடி இனிகோ நகர் கடற் பகுதி வழியாக இலங்கைக்கு பீடி இலைகள் கடத்தப்படுவதாக க்யூ பிரிவு காவல் துறையினருக்கு தகவல் கிடைத்தது. இதைத் தொடர்ந்து க்யூ பிரிவு காவல் ஆய்வாளர் விஜய அனிதா தலைமையிலான காவல்துறையினர் கடற்கரைப் பகுதியில் சோதனை மேற்கொண்டனர்.
அப்போது, அங்கு நின்ற சரக்கு லாரியை சோதனை இட்ட போது அதில் படகு மூலம் இலங்கைக்கு கடத்துவதற்காக கொண்டுவரப்பட்ட சுமார் 35 கிலோ எடை கொண்ட 36 மூடை பீடி இலைகள் என மொத்தம் 1260 கிலோ பீடி இலைகள் இருப்பதை கண்டறிந்த க்யூ பிரிவு போலீசார் அவற்றை பறிமுதல்
செய்தனர். மேலும் கடத்தலுக்கு பயன்படுத்தப்பட்ட சரக்கு லாரியையும் பறிமுதல் செய்தனர். மேலும், இந்த கடத்தலில் யார் யாருக்கு தொடர்புள்ளது என்பது குறித்து விசாரணை நடத்தி வருகின்றனர்.
பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகளின் சர்வதேச மதிப்பு ரூ.50 லட்சம் ஆகும்.
இதைத் தொடர்ந்து பறிமுதல் செய்யப்பட்ட பீடி இலைகள் மற்றும் சரக்கு வாகனம் ஆகியவை சுங்க இலாகா அதிகாரிகளிடம் ஒப்படைக்கப்பட்டது.
