தமிழகம் முழுவதும் மீன் இனப்பெருக்க காலத்தையொட்டி விசைப்படகுகளுக்கான மீன்பிடி தடைக்காலம் அமலில் உள்ளதால், தூத்துக்குடி திரேஸ்புரம் துறைமுகத்தில் மீன்களின் வரத்து குறைந்து விலை கடுமையாக உயர்ந்துள்ளது.

ஆண்டுதோறும் கடலில் மீன்களின் இனப்பெருக்கத்திற்காக விதிக்கப்படும் 61 நாட்கள் மீன்பிடி தடைக்காலம், வரும் ஜூன் 14-ஆம் தேதியுடன் முடிவடைகிறது. அதுவரை விசைப்படகுகள் கடலுக்குச் செல்ல அனுமதியில்லை என்பதால், தற்போது நாட்டுப்படகுகள் மற்றும் ஃபைபர் படகுகளுடன் மட்டுமே மீனவர்கள் கடலுக்குச் சென்று மீன்பிடித்து வருகின்றனர்.

அந்த வகையில், தூத்துக்குடி திரேஸ்புரம் நாட்டுப்படகு மீன்பிடி துறைமுகத்தில் இருந்து  நூற்றுக்கணக்கான படகுகளுடன் கடலுக்குள் சென்ற மீனவர்கள், இன்று சனிக்கிழமை என்பதால் கரை திரும்பின. ஆனால், எதிர்பார்த்த அளவு மீன்கள் கிடைக்காமல் வரத்து மிகவும் குறைவாகவே இருந்தது.

வார இறுதி நாளான இன்று மீன்களை வாங்குவதற்காகப் பொதுமக்களும், வியாபாரிகளும் திரேஸ்புரம் துறைமுகத்தில் அதிக அளவில் திரண்டனர். வரத்து குறைவாகவும், தேவை அதிகமாகவும் இருந்ததால் மீன்களின் விலை கிடுகிடுவென உயர்ந்தது. அந்தவகையில், சீலா (வஞ்சிரம்): ரூ.1,600, விளை மீன்: ரூ.800, நண்டு: ரூ.800, ஊளி மீன்: ரூ.750, பாறை மீன்: ரூ.550, கேரை / சூறை: ரூ. 400, சாலை மீன்: ஒரு கூடை ரூ.2,000 வரை விற்பனையானது.

வலைகளில் மீன்களின் வரத்து குறைவாக இருந்தாலும், சனிக்கிழமை மற்றும் தடைக்காலம் காரணமாகக் கணிசமான அளவுக்கு நல்ல விலை கிடைத்ததால், தூத்துக்குடி நாட்டுப்படகு மீனவர்கள் மிகுந்த மகிழ்ச்சி அடைந்துள்ளனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version