மேகேதாட்டு அணை பிரச்சினையில் முதல்வர் விஜய் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருவதாக பாஜக தேசிய மகளிரணி தலைவர் வானதி சீனிவாசன் குற்றம் சாட்டியுள்ளார்.
இது தொடர்பாக அவர் விடுத்துள்ள அறிக்கையில், “ மேகேதாட்டு அணை திட்டம் என் இதயத்துக்கு நெருக்கமானது. மேகேதாட்டு அணை கட்ட தமிழ்நாடு முதல்வருடன் பேச்சுவார்த்தை நடத்த தயாராக உள்ளேன் என கர்நாடக மாநில முதல்வர் தெரிவித்துள்ளார்.
மேலும், மேகேதாட்டு திட்டமானது, சம நிலை அணைத் திட்டம். அங்கு நீரைத் தேக்கினால் வறட்சிக் காலத்தில் தமிழ்நாட்டிற்கு நீரை எளிதாக திறந்து விடலாம் என்றும் அவர் தமிழ்நாட்டு மக்களை ஏமாற்ற முயற்சித்துள்ளார்.
காவிரி நதி பாயும் தமிழ்நாடு, புதுச்சேரி மாநிலங்களின் அனுமதி இல்லாமல் கர்நாடகம் அணை கட்டக்கூடாது என்பது உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பாகும். இதை மதிக்க வேண்டியது அரசியலமைப்பு சட்டப்படி பதவியேற்ற முதல்வர் சிவக்குமாரின் கடமையாகும். ஆனால், உச்ச நீதிமன்றத்தின் தீர்ப்பை மதிக்காமல், மேகேதாட்டுவில் அணையை கட்டியே தீருவோம் என்று அவர் பேசிக் கொண்டிருக்கிறார்.
மேகேதாட்டுவில் அணை கட்டப்பட்டால், தமிழ்நாட்டில் விவசாயம் பாதிக்கப்படுவதோடு, குடிநீர் பஞ்சமும் ஏற்படும் அபாயம் உள்ளது. எனவே, காவிரியின் குறுக்கே மேகேதாட்டுவில் அணை கட்டுவதை தமிழ்நாட்டில் புதிதாக அமைந்துள்ள தவெக அரசு தடுத்து நிறுத்த வேண்டும். முதல்வர் விஜய், மேகேதாட்டு அணை பிரச்சினையில் மென்மையான போக்கை கடைப்பிடித்து வருகிறார்.
இது தமிழ்நாட்டுக்கு பெரும் தீங்கை விளைவிக்கும். பெரும்பான்மை இல்லாத போதும், ஆட்சி அமைப்பதிலும், ஆட்சியை தக்க வைக்க இப்போது எதிர்க்கட்சி எம்.எல்.ஏ.க்களை விலைக்கு வாங்குவதில் காட்டும் வேகத்தையும், திறமையையும், தமிழ்நாட்டின் நலனுக்காகவும் முதல்வர் விஜய் பயன்படுத்த வேண்டும்” என வலியுறுத்தி உள்ளார்.

