தென் சென்னை நாடாளுமன்ற உறுப்பினர் தமிழச்சி தங்கபாண்டியன் வெளியிட்டுள்ள சமூக வலைத்தளப் பதிவில்,

வெளிநாடுகளில் மருத்துவம் பயின்ற இந்திய மாணவர்கள் மருத்துவப் பணியில் ஈடுபட கட்டாயமாக எழுத வேண்டிய FMGE தேர்வைச் சுற்றி எழுந்துள்ள சர்ச்சை கவலை அளிப்பதாகக் கூறியுள்ளார்.

தேர்வின் கடினத்தன்மை திடீரென உயர்த்தப்பட்டது, வினாத்தாள் அமைப்பில் முன்னறிவிப்பின்றி மாற்றங்கள் செய்யப்பட்டன, அதிகாரப்பூர்வ விடைக்குறிப்பு வெளியிடப்படவில்லை, தேர்வு மையங்களில் அடிப்படை வசதிகள் போதுமானதாக இல்லை என தேர்வர்கள் முன்வைத்துள்ள குற்றச்சாட்டுகள் தீவிரமாக பரிசீலிக்கப்பட வேண்டியவை எனக் குறிப்பிட்டுள்ளார்.

தேர்வுகளின் தரத்தை உயர்த்துவது அவசியம்தான். ஆயினும்,  தேர்வு நடைமுறைகளில் வெளிப்படைத்தன்மை, முன்கூட்டிய தெளிவான வழிகாட்டுதல்கள் மற்றும் சமமான வாய்ப்புகள் உறுதி செய்யப்படுவதும் அதே அளவிற்கு முக்கியமானது என வலியுறுத்தியுள்ள தமிழச்சி தங்கபாண்டியன்,

மாணவர்களின் நியாயமான கோரிக்கைகளை அலட்சியப்படுத்தாமல், ஒன்றிய அரசு மற்றும் தேசிய தேர்வுகள் வாரியம் (NBEMS) உரிய விளக்கங்களையும், தேவையான நடவடிக்கைகளையும் உடனடியாக மேற்கொள்ள வேண்டும் எனக் கேட்டுக் கொண்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version