சேலம் மாவட்டம் அத்தூர் அருகே புதுகொத்தாம்பாடி கிராமத்தை சேர்ந்தவர் பழனியம்மாள், இவரை செல்போனில் தொடர்பு கொண்ட நார் ஒருவர், தாலுகா அலுவலகத்தில் இருந்து தாசில்தார் பேசுவதாக கூறி, அந்த பெண்ணின் பெயர், குடும்ப உறுப்பினர்களது பெயர்களை கூறியுள்ளார்.
தொடர்ந்து, ”கொரோனா போன்று புதுவிதமான நோய் பரவி வருகிறது. இந்த நோய் தலைமுடி வழியாக பரவுவதால், வெளிநாடுகளில் மொட்டை அடித்துக் கொண்டு நோயில் இருந்து தப்பித்துள்ளனர், அவ்வாறு, மொட்டை அடித்தால் நோய் தாக்கம் ஏற்படாது, மொட்டை அடிக்கும் நபர்களுக்கு தமிழக அரசு சார்பில் ஊக்கத் தொகையாக, பெண்கள் என்றால், தலா, ரூ.15,000ம் பள்ளி, கல்லுாரி மாணவிகள் என்றால், தலா, ரூ.45,000ம் மற்றும் மடிக்கணினி; ஆண்களுக்கு, தலா, ரூ.6,000 வழங்கப்படும் என கூறியுள்ளார்.
புதுகொத்தாம்பாடிக்கு, 18 டோக்கன் மட்டுமே உள்ளதால், உங்களது உறவினர்களுக்கு கூட தகவல் தெரிவித்து கொள்ளலாம் எனவும், நாங்கள் நேரில் வரும் போது மொட்டை அடித்து தயார் நிலையில் இருக்குமாறு கூறியுள்ளார் அந்த ஆசாமி. இதனை நம்பிய பழனியம்மாள் தனது உற்றார், உறவினர்களிடம் கூற, சுமார் 20 பேர் மொட்டை அடிக்க தயாராகி உள்ளனர். இதில் காவேரி, ராமாயி, சித்ரா ஆகிய 3 பேர் மொட்டை அடித்துள்ளனர்.
பணம் தருவதாக கூறிய நபரை, தொடர்பு கொண்டபோது, அவரது போன் ‘ஸ்விட்ச் ஆப்’ ஆக இருந்தது.
அதன்பின்பு தான் போனில் பேசியது மர்ம ஆசாமி என்பதும், மொட்டை அடிக்கச் சொல்லி ஏமாற்றியதும் தெரியவந்துள்ளது. இதனையடுத்து மற்ற நபர்கள் மொட்டை அடிப்பது தவிர்க்கப்பட்டது.
தகவலறிந்து வந்த போலீசார் பழனியம்மாளிடம் விசாரணை மேற்கொண்டனர். மேலும் அவரை செல்போனில் தொடர்பு கொண்டது யார் என்பது குறித்தும் விசாரித்து வருகின்றனர்.
