மேகதாது அணை விவகாரத்தில் தமிழ்நாட்டுக்கு எதிராக சதிவலை பின்னப்படுவதால், தமிழக அரசு எச்சரிக்கையாக இருக்கும்படி பா.ம.க. தலைவர் மருத்துவர் அன்புமணி இராமதாஸ் அறிவுறுத்தியுள்ளார்.

இதுதொடர்பான அவரது அறிக்கையில், காவிரி ஆற்றின் குறுக்கே  எந்த அணையையும் கட்டுவதற்கு தமிழ்நாடு உள்ளிட்ட எந்த பாசன மாநிலங்களின் ஒப்புதலையும் கர்நாடக அரசு பெறத் தேவையில்லை என்றும், இது தொடர்பாக உச்சநீதிமன்றத் தீர்ப்பில் தெளிவாகக் குறிப்பிடப்பட்டிருக்கிறது என்றும் மத்திய அரசு தெரிவித்திருப்பது அதிர்ச்சியளிப்பதாகக் கூறியுள்ள அன்புமணி,  கர்நாடக அரசுக்கு ஆதரவான மத்திய நீர்வளத்துறை அமைச்சகத்தின் இந்த நிலைப்பாட்டினை கடுமையாகக் கண்டித்துள்ளார்.

தமிழ்நாட்டில் மட்டுமல்ல, இந்தியாவில் மட்டுமல்ல, உலகம் முழுவதுமே கடைமடை பாசனப் பகுதிகளுக்கு பாதிப்பை ஏற்படுத்தும் வகையில் எந்த திட்டங்களையும் முதல் மடை பாசனப் பகுதிகள் செயல்படுத்தக் கூடாது என்பது தான் நடைமுறையாகும் எனக் கூறியுள்ள அன்புமணி. காவிரி நீர்ப்பகிர்வு தொடர்பாக அப்போதைய சென்னை மாகாணத்திற்கும், மைசூர் மாகாணத்திற்கும் இடையே 1892, 1924 ஆகிய ஆண்டுகளில் கையெழுத்தான ஒப்பந்தங்களில் இது தெளிவாக கூறப்பட்டுள்ளதையும் சுட்டிக்காட்டியுள்ளார்.

கடைமடை பாசன மாநிலமான தமிழகத்தின் ஒப்புதல் இல்லாமல், எந்த அணையையும் கர்நாடகம் கட்ட முடியாது என்னும் உண்மையை மறைத்து விட்டு, மேகதாது அணை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என மத்திய அரசு கூறுவது திசை திருப்பும் செயல் எனக் கூறியுள்ள அன்புமணி,

காவிரி நடுவர் மன்றத்தின் இறுதித் தீர்ப்பில் கர்நாடகத்தில் நடைமுறையில் உள்ள பாசனத் திட்டங்கள் பட்டியலிடப்பட்டு, வேறு எந்த புதிய பாசனத் திட்டமும் செயல்படுத்தப்படக் கூடாது என்று தெளிவாகக் கூறப்பட்டிருப்பதைச் சுட்டிக்காட்டி,

அவ்வாறு இருக்கும் போது மேகதாது அணையை கட்ட தமிழ்நாட்டின் ஒப்புதல் தேவையில்லை என்று மத்திய நீர்வளத்துறை அமைச்சர் இராஜ் பூஷன் சவுத்ரி எப்படி கூற முடியும் என வினா எழுப்பியுள்ளார்.

காவிரி பிரச்சினையில் மத்தியில் ஆட்சி செய்யும் பாரதிய ஜனதாவாக இருந்தாலும், காங்கிரசாக இருந்தாலும்  தமிழக நலனுக்கு எதிராக செயல்படுவதையே  வழக்கமாகக் கொண்டுள்ளதாகக் குற்றம்சாட்டியுள்ள அன்புமணி,

மேகதாது அணை கட்டுவதற்கான விரிவான திட்ட அறிக்கை தயாரிக்க கடந்த 2018-ஆம் ஆண்டு மத்திய பாரதிய ஜனதா அரசு அனுமதி அளித்ததைப் போல், இப்போது தமிழ்நாட்டுக்கு எதிராக இன்னொரு சதிவலையை மத்திய பாரதிய ஜனதா அரசும், கர்நாடக காங்கிரஸ் அரசும் இணைந்து பின்னுகின்றன. இந்த சதிவலை கிழித்தெறியப்பட வேண்டும். இந்த விஷயத்தில் தமிழக அரசு கூடுதல் விழிப்புணர்வுடனும், எச்சரிக்கை உணர்வுடனும் செயல்பட வேண்டும் என வலியுறுத்தியுள்ளார்.

மேகதாது அணை விவகாரத்தில் மத்திய அரசு எடுத்துள்ள புதிய நிலைப்பாடு நமக்கு சொல்லும் செய்தி என்னவென்றால், காவிரி நீரை தமிழ்நாட்டுக்கு வழங்காமல் இருப்பதற்காக பெரும் சதி நடக்கிறது என்பதும்,  இதில் மத்திய அரசும் பங்குதாரராக உள்ளது என்பதும் தான்.

எனவே, இந்த விவகாரத்தில் தமிழக அரசு கூடுதல் எச்சரிக்கையுடன் செயல்பட வேண்டும்; இந்த விவகாரத்தில் அடுத்தக்கட்ட நடவடிக்கை குறித்து விவாதிக்க அனைத்துக் கட்சித் தலைவர்கள் கூட்டத்தை தமிழ்நாடு அரசு உடனடியாக கூட்ட வேண்டும் எனக் கோரியுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version