தமிழக சட்டப்பேரவைத் தேர்தல் வரும் ஏப்ரல் 23-ம் தேதி நடைபெற உள்ள நிலையில், அதிமுக தலைமையிலான கூட்டணியில் இடம்பெற்றுள்ள பாஜக தனது தேர்தல் வியூகங்களைத் தீவிரப்படுத்தியுள்ளது. இக்கூட்டணியில் பாஜகவுக்கு ஒதுக்கப்பட்ட 27 தொகுதிகளுக்கான வேட்பாளர் பட்டியல் ஏற்கனவே வெளியிடப்பட்ட நிலையில், தற்போது அக்கட்சியின் நட்சத்திரப் பேச்சாளர்கள் (Star Campaigners) பட்டியலைத் தேசியத் தலைமை வெளியிட்டுள்ளது. இதில் பிரதமர் நரேந்திர மோடி, மத்திய அமைச்சர்கள் அமித்ஷா, ராஜ்நாத் சிங், நிர்மலா சீதாராமன் உள்ளிட்ட 10 மத்திய அமைச்சர்களும், யோகி ஆதித்யநாத் உள்ளிட்ட 6 மாநில முதல்வர்களும் தமிழகத்தில் அனல் பறக்கும் பிரச்சாரத்தை மேற்கொள்ள உள்ளனர்.

இந்தத் தேர்தல் களத்தில் மிகவும் எதிர்பார்க்கப்பட்ட தமிழக பாஜக முன்னாள் தலைவர் அண்ணாமலையின் பெயர் வேட்பாளர் பட்டியலில் இடம்பெறாதது அவரது ஆதரவாளர்களிடையே விவாதத்தை ஏற்படுத்தியது. இருப்பினும், நட்சத்திரப் பேச்சாளர்கள் பட்டியலில் அண்ணாமலையின் பெயர் முக்கிய இடம்பிடித்துள்ளது. தனது ஆதரவாளர்களுக்கு வாய்ப்பு மறுக்கப்பட்ட போதிலும், கட்சியின் வெற்றிக்காகத் தமிழகம் முழுவதும் சூறாவளிப் பிரச்சாரம் செய்யப் போவதாக அண்ணாமலை ஏற்கனவே உறுதி அளித்துள்ளார். இவருடன் நயினார் நாகேந்திரன், பொன்.ராதாகிருஷ்ணன், தமிழிசை சவுந்தரராஜன் மற்றும் வானதி சீனிவாசன் போன்ற மாநிலத் தலைவர்களும் இந்தப் பட்டியலில் இடம்பெற்றுள்ளனர்.

திரைத்துறை மற்றும் நட்சத்திரப் பட்டாளங்களைப் பொறுத்தவரை சரத்குமார், குஷ்பு, நமிதா, கஸ்தூரி, மதுவந்தி உள்ளிட்டோர் பாஜக வேட்பாளர்களுக்காக வாக்கு சேகரிக்க உள்ளனர். அதேவேளையில், ராதிகா சரத்குமார், வினோஜ் பி. செல்வம் மற்றும் கே.டி. ராகவன் ஆகியோரின் பெயர்கள் இந்தப் பட்டியலில் இடம்பெறாதது அரசியல் வட்டாரத்தில் உற்று நோக்கப்படுகிறது. 27 தொகுதிகளிலும் தங்களது செல்வாக்கை நிரூபிக்க மத்திய மற்றும் மாநிலத் தலைவர்களைக் களம் இறக்கி, அதிமுக கூட்டணியின் வெற்றியை உறுதி செய்ய பாஜக இப்போதே தயாராகிவிட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version