ஆன்லைன் உணவு மற்றும் மளிகைப் பொருள் விநியோகத் தளமான ஸ்விக்கி இன்ஸ்டாமார்ட் நிறுவனத்துக்கு இந்திய உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணய ஆணையம் (FSSAI) தொடர்ச்சியாக 9 நோட்டீஸ்களை அனுப்பியுள்ளது. இணையத்தில் வாடிக்கையாளர்கள் அளித்த பல்வேறு புகார்களை அடுத்து இந்த நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது.
புகார்களில் பெரும்பாலானவை உணவுப் பொருட்களின் காலாவதி தேதி கடந்த நிலையில் விநியோகம் செய்யப்பட்டது, அழுகிய மற்றும் துர்நாற்றம் வீசும் பொருட்கள் வழங்கப்பட்டது போன்றவை. குறிப்பாக, ‘ஹெல்திஃபை 100% வே புரோட்டீன் 1 கிலோ’ பொருளும், ‘நாய்ஸ் ஹோம்ஸ்டைல் மெட்ராஸ் மிக்சர்’ உள்ளிட்ட தின்பண்டங்களும் காலாவதியான பிறகு வாடிக்கையாளர்களுக்கு அனுப்பப்பட்டதாகக் குற்றச்சாட்டு எழுந்துள்ளது.
மேலும், ஒரு வாடிக்கையாளருக்கு அழுகிய நிலையில் துர்நாற்றம் வீசும் ‘அக்ஷயகல்ப ஆர்கானிக் முட்டை’ வழங்கப்பட்டதாகவும், ‘காக்கே டா பரோட்டா’ போன்ற உணவு பொருள் முற்றிலும் கெட்டுப்போய் உண்ணத் தகுதியற்றதாக இருந்ததாகவும் புகார்கள் வந்துள்ளன. இந்தப் புகார்களை FSSAI தன் அதிகாரப்பூர்வ எக்ஸ் (ட்விட்டர்) பக்கத்தில் வெளியிட்டு பொதுமக்களின் கவனத்தை ஈர்த்துள்ளது.
உணவு பாதுகாப்பு மற்றும் தர நிர்ணயச் சட்டம் 2006-ஐ மீறியதாகக் கருதப்படும் இந்தச் சம்பவங்கள் குறித்து ஸ்விக்கி நிறுவனம் விரிவான விளக்கம் அளிக்கவும், தனது இணக்க நடைமுறைகள் குறித்த அறிக்கையை சமர்ப்பிக்கவும் FSSAI உத்தரவிட்டுள்ளது. இதைச் செய்யத் தவறினால் சட்டப்படி உரிய நடவடிக்கை எடுக்கப்படும் என எச்சரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.
ஆன்லைன் உணவு விற்பனைத் துறையில் தானியங்கி ரோபோடிக் செயலிகள் (பாட்ஸ்) அதிக அளவில் பயன்படுத்தப்படுவதே இத்தகைய பிரச்னைகளுக்கு முக்கிய காரணமாகச் சொல்லப்படுகிறது. மனிதர்கள் நேரடியாக பொருட்களைப் பரிசோதிக்காமல் தானியங்கி அமைப்புகள் மூலம் ஆர்டர்கள் கையாளப்படுவதால் தரக்கட்டுப்பாடு பாதிக்கப்படுவதாகத் தொழில்துறை வல்லுநர்கள் கருத்து தெரிவிக்கின்றனர். ஸ்விக்கி போன்ற பெரிய தளங்கள் வாடிக்கையாளர் நம்பிக்கையைப் பெற மிகுந்த முக்கியத்துவம் கொடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளன.
இந்தச் சம்பவம் ஆன்லைன் உணவு விநியோகத் துறையில் தரக்கட்டுப்பாடு மற்றும் பாதுகாப்பு நடைமுறைகளை மேம்படுத்த வேண்டிய அவசியத்தை மீண்டும் ஒருமுறை எடுத்துக்காட்டுகிறது. வாடிக்கையாளர்கள் காலாவதி தேதியை கவனமாகப் பார்த்து பொருட்களைப் பெறுமாறு நிபுணர்கள் அறிவுறுத்துகின்றனர்.
