சமையல் காஸ் சிலிண்டர் தட்டுப்பாடு காரணமாக, ‘அம்மா’ உணவகங்களில், இட்லி, சப்பாத்தி, சாம்பார் சாதம் விற்பனை முற்றிலும் நிறுத்தப்பட்டுள்ளது
சென்னை மாநகராட்சியில், 383 ‘அம்மா’ உணவகங்கள் உள்ளன. இந்த உணவகங்களில், காலையில் 1 ரூபாய்க்கு இட்லி, 5 ரூபாய்க்கு பொங்கல்; மதியம் 3 ரூபாய்க்கு தயிர் சாதம், 5 ரூபாய்க்கு லெமன் சாதம், சாம்பார் சாதம், கருவேப்பிலை சாதம்; இரவில் 3 ரூபாய்க்கு இரண்டு சப்பாத்திகள் வழங்கப்பட்டு வந்தது.
குறைந்த விலையில், தரமான உணவு கிடைத்ததால், ஏழைகள் மட்டுமின்றி நடுத்தர வர்க்கத்தினர், ஐ.டி., பிரிவு ஊழியர்கள் வரை இந்த உணவகங்களை நாடினர். பேரிடர் காலங்களிலும், அம்மா உணவகங்கள் தான், பெரும்பாலானோரின் பசியை போக்குகின்றன. ‘அம்மா’ உணவகங்கள் வாயிலாக ஆண்டுக்கு, 100 கோடி ரூபாய்க்கு மேல் நஷ்டம் ஏற்பட்டாலும், ஏழை, எளிய மக்களின் பசி போக்கும் வகையில், அம்மா உணவகங்கள் செயல்பட்டு வருகின்றன.
இந்நிலையில், ஒரு மாதத்திற்கு மேலாக சமையல் காஸ் தட்டுப்பாடு காரணமாக, அம்மா உணவகங்களின் செயல்பாடுகளில் தள்ளாட்டம் ஏற்பட்டது. வேறு வழியின்றி சில அம்மா உணவகங்களில், விறகு அடுப்புகள் பயன்படுத்தப்பட்டன. அது விமர்சனத்துக்கு உள்ளானது. எனவே, விறகு அடுப்புக்கு பதிலாக, ‘காஸ்’ சிலிண்டர் மீண்டும் பயன்படுத்தப்பட்டது. இந்நிலையில், சமையல் காஸ் சிலிண்டர்கள் போதிய அளவில் கிடைக்காததால், அம்மா உணவகத்தில் வழக்கமாக கொடுக்கப்படும் உணவு வகைகள் குறைக்கப்பட்டுள்ளன.
தற்போது, காலையில் பொங்கல், மதியம் தயிர் சாதம், இரவு தக்காளி சாதம் ஆகியவை மட்டுமே விற்பனை செய்யப்பட்டு வருகிறது. சாம்பார் சாதம், இட்லி, சப்பாத்தி ஆகியவை நிறுத்தப்பட்டு விட்டதாக தகவல் வெளியாகியுள்ளது.
