பாகிஸ்தான் மற்றும் சீனா விவகாரங்களில் சிறந்த நிபுணராகக் கருதப்படும் தமிழரான ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி, இந்தியாவின் புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக (CDS) இன்று பொறுப்பேற்றுக்கொண்டார்.

முன்னதாக இப்பதவியில் இருந்த ஜெனரல் அனில் சவுகானின் பதவிக்காலம் நேற்றுடன் நிறைவடைந்ததை அடுத்து, அவர் தனது பொறுப்பை ஒப்படைத்தார். இதற்கு முன்பு தேசிய பாதுகாப்பு கவுன்சில் செயலகத்தின் ராணுவ ஆலோசகராகப் பணியாற்றிய ஜெனரல் சுப்பிரமணி, கடந்த ஆண்டு ஜூலை 31 அன்று ராணுவத்தின் துணைத் தளபதியாகப் (VCOAF) பணியாற்றி ஓய்வு பெற்றவர் என்பது குறிப்பிடத்தக்கது.

புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாக இன்று பொறுப்பேற்றுக் கொண்ட பின் செய்தியாளர்களிடம் பேசிய அவர், முப்படைகளின் ஒருங்கிணைப்பை மேம்படுத்துவதும், ராணுவக் கட்டமைப்பில் சீர்திருத்தங்களைக் கொண்டு வருவதுமே தனது முதன்மையான நோக்கம் என்று தெரிவித்தார். மேலும், இந்தியாவின் இறையாண்மையையும் எல்லை ஒருமைப்பாட்டையும் பாதுகாக்க முப்படைகளும் அர்ப்பணிப்புடன் செயல்படும் என்றும், உள்நாட்டிலேயே தயாரிக்கப்படும் ஆயுதங்களை ராணுவத்தில் சேர்ப்பதை வேகப்படுத்துவேன் என்றும் அவர் உறுதியளித்தார்.

சுமார் 40 ஆண்டுகளுக்கும் மேலான தனது சிறப்பான ராணுவப் பணியில், அசாம் மற்றும் ஜம்மு காஷ்மீர் பகுதிகளில் தீவிரவாத ஒழிப்பு நடவடிக்கைகளில் முக்கியப் பங்காற்றிய பெருமை இவருக்கு உண்டு. லண்டன் கிங்ஸ் கல்லூரியில் முதுகலை பட்டமும், சென்னை பல்கலைக்கழகத்தில் பாதுகாப்பு ஆய்வுகளில் எம்.பில் பட்டமும் பெற்றுள்ள இவர், பரம விசிஷ்ட் சேவா பதக்கம், அதி விசிஷ்ட் சேவா பதக்கம் உள்ளிட்ட பல்வேறு உயரிய ராணுவ விருதுகளைப் பெற்றுள்ளார். புதிய பாதுகாப்புப் படைத் தளபதியாகப் பொறுப்பேற்றுள்ள இவரின் முக்கியப் பணி, முப்படைகளையும் ஒருங்கிணைத்து தியேட்டரைசேஷன் (Theaterisation) எனப்படும் ஒருங்கிணைந்த ராணுவக் கட்டளை அமைப்பைச் செயல்படுத்துவதாகும்.

தமிழர்

ஜெனரல் என்.எஸ். ராஜா சுப்பிரமணி அவர்கள் பூர்வீகத்தால் தமிழர் ஆவார். 1968  ஜூலை 21 அன்று மகாராஷ்டிர மாநிலம் மும்பையில் பிறந்து வளர்ந்தவர் என்றாலும், அவரது குடும்பப் பின்னணி தமிழகத்தைச் சேர்ந்ததாகும்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version