இந்து முன்னணி சார்பில் மதுரையில் முருக பக்தர்கள் மாநாடு நடைபெறும் என்ற அறிவிப்பு வந்ததில் இருந்தே சர்ச்சை தான். மாநாட்டிற்கு எதிர்ப்பு, அனுமதி மறுப்பு, நீதிமன்றத்தில் முறையீடு, நிபந்தனைகள் விதிப்பு, நிபந்தனைகள் தளர்வு என்று ஒவ்வொரு நாளும் ஒவ்வொரு விதமான பேசுபொருளாய் உருவெடுத்தது முருக பக்தர்கள் மாநாடு. இதுவே அந்த மாநாட்டிற்கு கூடுதல் முக்கியத்துவத்தையும் கொண்டு வந்து சேர்த்தது.
மதுரை பாண்டிமா கோயில் அம்மா திடலில் மாநாடு நடந்தது. அவ்விடத்தில் அறுபடை வீடுகளின் கோயில் மாதிரிகளை நிறுவியது மாநாட்டுக்குழு. இதுபோதாதா தென்மாவட்டத்தில் இருந்து சாரைசாரையாய் படையெடுத்தனர் பக்தர்கள். இதுமட்டுமல்லாது திருப்பரங்குன்றம் கோயிலின் முகப்பு போன்று மாநாட்டு மேடையும் வடிவமைக்கப்பட்டிருந்தது. திருப்பரங்குன்றம் மலை விவகாரத்தை தனது அரசியல் ஆயுதமாக பாஜக கையில் எடுத்துள்ளது என்பதற்கு இதைவிட வேறு என்ன சான்று இருக்க முடியும்?
ராமருக்கு பதில் முருகன்
இந்துக்களின் வாக்குகளை அணிதிரட்டுவதே பாஜகவின் பிரதான அரசியல் பாணி. வடஇந்தியாவில் ராமர் பெயரை வைத்துதான் இத்தனை ஆண்டுகாலம் அரசியல் செய்து வந்தது. கேரளாவில் ஐயப்பன். ஒடிசாவில் பூரி ஜெகன்னாதர். தமிழ்நாட்டில் ராமருக்கு பதிலாக முருகன் அவ்வளவு தான் வித்தியாசம். இதற்காகத் தான் கடந்த இரண்டு ஆண்டுகளாக வேல் யாத்திரை என்ற ஒன்றை தமிழக பாஜக கையில் எடுத்துள்ளது. இத்தனை ஆயிரம் ஆண்டுகளாக இந்த மண்ணில் முருகப்பெருமான் வணங்கப்பட்டு வந்தபோதும் சூரசம்ஹாரம் போன்ற நிகழ்ச்சிகள் ஆண்டுதோறும் நடத்தப்பட்டு வந்தபோதும் கூட வேல் யாத்திரையை தமிழர்கள் மேற்கொண்டதில்லை. ஆனால் அதனை ஒரு அரசியல் யுக்தியாக பாஜக பின்பற்றி வருகிறது. ஆனால் அதற்கு போதிய அளவு வரவேற்பு இல்லை என்று தெரிந்து கொண்டு விட்டது. ஆனாலும் முருகனை விட்டால் வேறு வழியில்லை என்பதால் அவரை வைத்தே தனது அரசியலை பின்னி வருகிறது.
திருப்பரங்குன்றம் ஏன்?
அறுபடை வீடுகள் இருந்தாலும் குறிப்பாக திருப்பரங்குன்றம் முருகனை வைத்து குறிப்பிடத்தகுந்த அரசியலை பாஜக செய்து வருகிறது. காரணம், அந்த மலைமீதுள்ள சிக்கந்தர் தர்கா தான் அதன் கண்ணை உறுத்துகிறது. அந்த தர்காவில் ஆடு, மாடு பலியிடப் படுவதாக சில மாதங்களுக்கு முன்பு பெரும் சர்ச்சையை கிளப்பியது. பலநூறு ஆண்டுகளாக சுப்ரமணியனும், சிக்கந்தரும் அமைதியாக வழிபட்டுக் கொண்டிருந்த இடத்தில் பிளவுவாத அரசியலை கையில் எடுத்தது பாஜக. ஆனால் மதுரை மக்கள் அதனை பெரிய அளவில் பொருட்படுத்தவில்லை. ஆனாலும் அது பேசுபொருளானதே பாஜகவிற்கு கிடைத்த வெற்றி தான். அதனால் தான் இந்த முருக பக்தர்கள் மாநாட்டு மேடையில் திருப்பரங்குன்றம் கோயில் முகப்பை மாநாட்டு முகப்பாக வைத்தது.
பவன்கல்யாண் எதற்கு?
ஒருபுறம் முருக பக்தர்கள் மாநாடு. ஆனால் சிறப்பு விருந்தினர் ஆந்திர துணை முதலமைச்சர் பவன் கல்யாண். காரணம் இல்லாமல் இல்லை. தமிழ்நாட்டில் உள்ள 70 லட்சம் தெலுங்கர் வாக்குகள் பெரும்பான்மையாக இதுவரை திமுகவுக்கு சென்று சேர்ந்து வருகிறது. அந்த வாக்குகளை எப்படியாவது பாஜக வசம் இழுக்க, தெலுங்கர் இனத்தின் பிரதிநிதியாக பவன் கல்யாணை தமிழ்நாட்டில் முன்னிறுத்துகிறது பாஜக.
அவருடைய பேச்சில் கருப்பை வைத்து காவியை அவமதிக்கிறீர்கள் என்று திமுக-வை விமர்சித்தார். ஆனாலும் அதே கருப்பு சிவப்பு கூடவே வெள்ளை நிறத்தையும் சேர்த்து தான் அண்ணாதிமுக உருவானது என்பதை அவர் மறந்து போய்விட்டார். அதனால் தான் அதிமுகவை சமாதானப்படுத்தும் விதமாக உலகின் முதல் புரட்சித்தமிழர் முருகன் என்று பேசி சமன் செய்கிறார். பவன் கல்யாணை ஒரு நடிகராக, ஆந்திரராக மட்டுமே தமிழர்கள் பார்க்கிறார்களே தவிர, அவர் மூலமாக தெலுங்கர் வாக்குகளை ஒன்றிணைக்க முடியும் என்பது மனப்பால் மட்டுமே.
அதேபோன்று பாஜக என்றாலே சிறுபான்மையினருக்கு எதிரான கட்சி என்பதே பொதுவான கருத்து. அதனை உறுதிப்படுத்தும் விதமாகவே பவன் கல்யாணின் பேச்சும் அமைந்துள்ளது. அதாவது இந்து மதத்தை கேள்வி கேட்கும் நீங்கள் அரேபியாவில் இருந்து வந்த மதங்களை விமர்சிப்பீர்களா? என கேள்வி எழுப்பி உள்ளார். ஏற்கனவே பாஜகவுடன் கூட்டணி வைத்ததால் அதிமுக மீது சற்று மனக்கசப்புடன் உள்ள சிறுபான்மையினர் இத்தகைய பேச்சுக்களை எள்ளளவும் ரசிக்க மாட்டார்கள் என்பதே உண்மை.
அண்ணாமலை Vs நயினார் நாகேந்திரன்
மாநாட்டில் மீண்டுமொருமுறை வெளிச்சத்திற்கு வந்துள்ளது தமிழக பாஜகவுக்குள் உள்ள தலைமை மோதல். முன்னாள் தலைவர் அண்ணாமலை, இந்நாள் தலைவர் நயினார் நாகேந்திரன் ஆகியோர் இடையே யார் வலிமையானவர் என்ற மோதல் மீண்டுமொருமுறை மாநாட்டு மேடையில் அம்பலமானது. குறிப்பாக பச்சை வேட்டி பச்சை துண்டு அணிந்து பவன் கல்யாண் போன்ற ஆடையணிந்து வந்த அண்ணாமலை மேடையேறும் போது அவரது ஆதரவாளர்கள் விண்ணை பிளக்க கோஷமெழுப்பினர். அதேசமயம் நடப்பு தலைவர் நயினாருக்கு அத்தகைய வரவேற்பு கிடைக்கவில்லை என்பதே உண்மை.
கவுண்டர் இனத்தைச் சேர்ந்த அண்ணாமலைக்கும் அதிமுக தலைமைக்கும் ஏழாம் பொருத்தம் என்பதால் தான் அவர் மாற்றப்பட்டு முக்குலத்தோர் சமூகத்தைச் சேர்ந்தவரும் அதிமுக பின்னணியில் இருந்தவருமான நயினார் நாகேந்திரனை பாஜக மாநிலத் தலைவர் பொறுப்புக்கு கொண்டு வந்த மேலிடம். ஆனாலும் கூட அவருக்கு பாஜக மாநில, மாவட்ட, மண்டல நிர்வாகிகளின் ஒத்துழைப்பு கிடைக்கவில்லை என்பதும் அமித் ஷா மதுரைக்கு வந்து பஞ்சாயத்து செய்ய வேண்டிய நிலைக்கு தள்ளப்பட்டும் தெரிந்ததே. அப்படி இருந்தும் கூட நேற்றைய தினம் முருக பக்தர்கள் மாநாட்டில் நயினாரை தாண்டி அண்ணாமலை ஸ்கோர் செய்து விட்டார்.
அதிமுகவின் பலமான வாக்கு வங்கியான முக்குலத்தோர் வாக்குகளை கைப்பற்றவே பாஜக நயினாரை தலைவர் பதவிக்கு கொண்டு வந்தது பாஜக. கூடவே அதிமுகவில் அவர் இருந்தவர் என்பதாலும், எடப்பாடி பழனிசாமிக்கு நெருக்கமானவர் என்பதாலும் அந்த கணக்கை போட்டுப் பார்க்கிறது. மதுரையை களமாக தேர்ந்தெடுத்ததும், அதிமுகவில் உள்ள முக்குலத்தோர் சமூகத்தை சேர்ந்தவர்களை மேடையில் ஏற்றி அழகு பார்த்ததும் அதற்கு தான். ஆனால் வந்திருந்தது அல்லது அழைத்து வரப்பட்டிருந்தது அனைத்துமே முருக பக்தர்கள் மாநாடு என்ற அடிப்படையில் தானே தவிர, பாஜக மாநாடு என்ற காரணத்திற்காக அல்ல..
உண்மையிலேயே இதனை வெளிப்படையாக பாஜக மாநாடு என்று அறிவித்து நடத்தி இருந்தால் இத்தனை லட்சம் மக்கள் திரண்டிருப்பார்களா என்பது சந்தேகமே. அதனால் தான் இந்துக்களை அணிதிரட்டல் என்ற போர்வையில் இந்து முன்னணி சார்பில் இதனை நடத்தி உள்ளது பாஜக.
இதுமட்டுமல்லாமல் மேடையில் அண்ணாமலை பேசும்போது, இனி பள்ளிகளுக்கு செல்லும் இந்து குழந்தைகள் விபூதி அணிந்தும் கழுத்தில் ருத்ராட்சை மாநில அணிந்தும் செல்ல வேண்டும் என்று பேசியிருக்கிறார். சாதி, மத அடையாளங்களை துறந்து அனைவரும் சமம் என்பதை போதிக்க வேண்டிய பள்ளியில் எதற்காக மத அடையாளங்கள். ஏற்கனவே பல வண்ணக்கயிறுகளை அணிந்து சாதி மோதல்கள் பள்ளி வளாகத்தில் நடைபெற்று வரும் நிலையில் மத அடையாளங்களும் கூடுதல் பிரிவினைளை விதைக்கவே பயன்படும். இதைத்தான் பாஜக எதிர்பார்க்கிறது போலும்.
ஆழமற்ற ஆறு தீர்மானங்கள்
திருப்பரங்குன்றம் மலை உச்சியில் தீபம் ஏற்ற வேண்டும், பெஹல்காம் தாக்குதலுக்கு ஆபரேஷன் சிந்தூர் என்ற பெயரில் பதிலடி கொடுத்த பிரதமருக்கு பாராட்டு, திருப்பரங்குன்றத்தின் புனிதத்தை காப்போம், கோயில் நிதியை பொதுநல காரியங்களுக்கு பயன்படுத்தக்கூடாது, கடவுள் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும், ஆண்டுதோறும் கந்தசஷ்டி நாளில் முருகன் கோயில்களில் ஒன்றுகூடி கந்தசஷ்டி கவசம் பாட வேண்டும் என ஆறு தீர்மானங்கள் மாநாட்டில் நிறைவேற்றப்பட்டுள்ளன.
நடப்பது முருக பக்தர்கள் மாநாடா? அரசியல் மாநாடா? எதற்காக பிரதமர் மோடிக்கு பாராட்டு தெரிவித்து முருக பக்தர்கள் மாநாட்டில் தீர்மானம் நிறைவேற்றப்பட வேண்டும்.. எதற்காக கடவுள் நம்பிக்கை இல்லாத அரசியல் கட்சிகளை தேர்தலில் புறக்கணிக்க வேண்டும் என்ற தீர்மானம்..
நேரடியாக அரசியல் மாநாடு என்று இதனை நடத்தி இருந்தால் இந்த தீர்மானங்களை வரவேற்கலாம். ஆனால் முருக பக்தர்கள் மாநாடு என்ற போர்வையில் இதனை நடத்தி விட்டு இத்தகைய தீர்மானங்கள் உள்ளடி வேலையல்லாமல் வேறென்ன?..
அதிமுகவின் கள்ளமௌனம்
அதிமுகவும், பாஜகவும் தேர்தல் கூட்டணி தான் வைத்துள்ளன, கொள்கை கூட்டணி அல்ல என்பது அக்கட்சியின் பொதுச்செயலாளர் எடப்பாடி பழனிசாமியின் கூற்று. அப்படி இருக்கும்போது முருக பக்தர்கள் மாநாட்டில் அதிமுக பிரதிநிதிகள் ஆர்.பி.உதயகுமார், செல்லூர் ராஜு, ராஜேந்திர பாலாஜி, கடம்பூர் ராஜு, ராஜன் செல்லப்பா போன்றவர்கள் கலந்து கொண்டுள்ளனர்.
மேடையில் நிகழ்ச்சி தொடங்குவதற்கு முன்னதாக வெளியிடப்பட்ட வீடியோக்களில் தந்தை பெரியார் பற்றியும், பேரறிஞர் அண்ணா பற்றியும் விமர்சனம் செய்து பல காட்சிகள் காட்டப்பட்டன. அண்ணா பெயரில் கட்சி நடத்திக் கொண்டு அவரை விமர்சனம் செய்து வீடியோ வெளியிடப்படும் மாநாட்டில் அதிமுகவினர் அமரலாமா?
இந்துசமய அறநிலையத்துறை வசம் இருந்து கோயில்களை விடுவிக்க வேண்டும் என்றும் தீர்மானம் நிறைவேற்றப்பட்டுள்ளது. நீதிக்கட்சி காலத்தில் தொடங்கப்பட்ட இந்த துறையை தனது ஆட்சிகாலத்தில் ஊட்டி வளர்த்தவர் முன்னாள் முதலமைச்சர் ஜெயலலிதா. அவரது ஆட்சியின் போதுதான் கோயில்களில் அன்னதான திட்டம் செயல்படுத்தப்பட்டது. கோயில் யானைகள் புத்துணர்வு முகாம் கொண்டு வரப்பட்டது. இவை அனைத்தும் தெரிந்திருந்தும் அதிமுகவினர் இந்த மாநாட்டில் மௌனசாமிகளாக அமர்ந்திருந்தது கடும் விமர்சனங்களை எழுப்பி உள்ளது.
விரும்பிய கடவுள்களை வழிபட நினைப்பது ஜனநாயக உரிமை என்று இந்த மாநாடு குறித்து எடப்பாடி பழனிசாமி பேசியிருந்தார். அப்படியெனில் கடவுளை வழிபட நினைக்காமல் இருப்பதும் ஜனநாயக உரிமை தானே. அப்படியிருப்பவர்களை கருப்புச்சட்டைக்காரர்கள் என்று விமர்சித்து மேடையில் இருப்பவர்கள் பேசும்போது அதிமுகவினர் ஏன் எதிர்ப்பு தெரிவிக்கவில்லை.
திராவிடத்தை ஒழிப்பதே தனது வாழ்நாள் லட்சியம் என்று பேசிவரும் ஹெச்.ராஜா, ஜெயலலிதா உட்பட எடப்பாடி பழனிசாமியையும் விமர்சித்து பேசிய அண்ணாமலை ஆகியோர் அமர்ந்துள்ள மேடையில் எப்படி கூச்சமில்லாமல் அதிமுகவினர் அமைதியோடு உட்கார்ந்து இருந்தனர் என்பது கேள்விக்குறியாக உள்ளது.
திமுக கோட்டை விட்டதா?
தமிழ்நாட்டில் ஆர்பாட்டம், போராட்டம், மறியல், மாநாடு எதுவாக இருந்தாலும் காவல்துறையிடம் அனுமதி பெற்றே நடத்தப்பட வேண்டும். முருக பக்தர்கள் மாநாடு என்ற பெயரில் பாஜக நடத்தும் அரசியல் மாநாடு குறித்து உளவுத்துறை முன்கூட்டியே தகவல் தெரிவிக்கவில்லையா? இல்லை கண்டும் காணாதது போல் இதனை திமுக அரசு கடந்து செல்கிறதா? என்பது தெரியவில்லை.
அதேபோன்று கோயில் விவகாரங்களில் பாஜக முன்னெடுக்கும் போராட்டங்களை திமுக அரசு வீரியத்துடன் அணுகுவதில்லையோ என்ற தோற்றம் ஏற்படுகிறது. திருப்பரங்குன்றம் போராட்டத்தையும் தாமதமாக அறிந்து கொண்டு செயலாற்றியது. முருக பக்தர்கள் மாநாட்டிற்கான திமுகவின் எதிர்வினையை பொறுத்தே அதன் அரசியல் பாதையை அறிந்து கொள்ள முடியும். அதிமுகவை வீழ்த்த பாஜக மெல்ல மெல்ல வளர்வதை திமுக ஊக்குவிக்கிறதா என்ற ஐயம் எழுகிறது. ஆனால் கொள்கை கோட்பாட்டளவில் திமுகவும், அதிமுகவும் ஒன்று. இரண்டில் எது ஆட்சிக்கு வந்தாலும் பெரிய வேறுபாடு இருக்கப் போவதில்லை. ஆனால் பாஜகவின் சிந்தனை தளம் என்பது மனுஸ்மிருதியை அடிப்படையாக கொண்ட சனாதனம். இதனை வளர்ப்பதும், அதற்கு மௌனமாக துணைபோவதும் ஆபத்துக்கான அறிகுறிகள்.