அமெரிக்காவின் மேரிலாந்து மாநிலத்தில் ஏற்பட்ட சாலை விபத்தில் ‘காட்சில்லா வெர்சஸ் காங்’ புகழ் இளம் நடிகை கெய்லி ஹாட்டில் (18) உயிரிழந்த சோக சம்பவம் திரையுலகையும் ரசிகர்களையும் அதிர்ச்சியில் ஆழ்த்தியுள்ளது. டெக்சாஸ் ஸ்கூல் ஃபார் தி டீஃப் மாணவியான அவர், செவித்திறன் குறைபாடுடைய குடும்பத்தில் பிறந்தவர்.
2021-ல் வெளியான ‘காட்சில்லா வெர்சஸ் காங்’ படத்தில் ‘ஜியா’ என்ற கதாபாத்திரத்தில் நடித்து உலகளாவிய புகழ் பெற்றார் கெய்லி. காங்குடன் உணர்வுப்பூர்வமான தொடர்பை ஏற்படுத்தும் செவித்திறன் இல்லாத சிறுமியாக அவர் வெளிப்படுத்திய நடிப்பு ரசிகர்களின் இதயங்களை கவர்ந்தது. 2024-ல் வெளியான ‘காட்சில்லா எக்ஸ் காங்: தி நியூ எம்பயர்’ படத்தில் அதே பாத்திரத்தை மீண்டும் ஏற்று சிறப்பான நடிப்பை வெளிப்படுத்தினார். இதற்காக சிறந்த இளம் நடிகைக்கான சாட்டர்ன் விருதுக்கு பரிந்துரைக்கப்பட்டிருந்தார்.
இந்நிலையில் ஜூலை 21 அன்று அதிகாலை இஜாம்ஸ்வில்ல் பகுதியில் நடைபெற்ற கார் விபத்தில் பயணியாக இருந்த கெய்லி உயிரிழந்தார். கார் அதிக வேகத்தில் சென்று சாலையை விட்டு விலகி குழியில் விழுந்ததாக போலீசார் தெரிவித்தனர். வாகன ஓட்டியும் மற்றொரு பயணியும் காயமின்றி தப்பினர். கெய்லியின் இதயத்துடிப்பு மருத்துவமனைக்கு செல்லும் வழியில் நின்றுவிட்டதாக அவரது தந்தை ஜோஷுவா ஹாட்டில் தெரிவித்தார்.
திரையுலக பிரபலங்கள், ரசிகர்கள் சமூக வலைத்தளங்களில் இரங்கல் தெரிவித்து வருகின்றனர். லெஜண்டரி பிக்சர்ஸ் நிறுவனம் அவரை “மான்ஸ்டர்வெர்ஸுக்கு இதயம் சேர்த்த அன்பான உறுப்பினர்” என போற்றியது. பல படங்களில் சிறு வேடங்களில் நடித்த அவர், செவித்திறன் குறைபாடுள்ளவர்களுக்கு உத்வேகமாக விளங்கினார். இளம் வயதிலேயே அவரது திடீர் மறைவு பெரும் வருத்தத்தை ஏற்படுத்தியுள்ளது.
