திருச்சி சர்வதேச விமான நிலையத்திற்கு வெளிநாடுகளில் இருந்து வரும் விமானங்களில், கடந்த சில மாதங்களாக தங்கம் மற்றும் போதைப்பொருட்கள் கடத்தப்படுவது தொடர்ந்து அதிகரித்து வருகிறது. கடந்த மாதம் கூட சுமார் 5 கோடி ரூபாய் மதிப்பிலான போதைப்பொருட்கள் அதிகாரிகளால் பறிமுதல் செய்யப்பட்டது குறிப்பிடத்தக்கது.

இந்த நிலையில், நேற்று முன்தினம் மலேசியா மற்றும் சிங்கப்பூரில் இருந்து திருச்சி வந்த ஏர்ஏசியா, ஏர் இந்தியா எக்ஸ்பிரஸ் மற்றும் ஸ்கூட் ஆகிய விமானங்களில் மத்திய வருவாய் நுண்ணறிவு பிரிவு (DRI) அதிகாரிகள் அதிரடி சோதனையில் ஈடுபட்டனர்.

இந்த சோதனையின் போது, சந்தேகத்திற்கு இடமளிக்கும் வகையில் வந்த சுமார் 30 பயணிகளிடம் இருந்து 4.5 கிலோ கடத்தல் தங்கம் பறிமுதல் செய்யப்பட்டது. இதன் சர்வதேச சந்தை மதிப்பு சுமார் 5 கோடி ரூபாய் இருக்கும் என தெரிவிக்கப்பட்டுள்ளது.

தங்கம் பறிமுதல் செய்யப்பட்ட விவகாரம் தொடர்பாக, அந்த 30 பயணிகளையும் தனி அறையில் வைத்து சுங்கத்துறை அதிகாரிகள் தொடர்ந்து தீவிர விசாரணை நடத்தி வருகின்றனர். இதன் பின்னணியில் உள்ள கடத்தல் கும்பல் யார் என்பது குறித்தும் விசாரணை முடுக்கிவிடப்பட்டுள்ளது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version