மலைகளின் இளவரசியான கொடைக்கானலுக்குச் செல்லும் சுற்றுலாப் பயணிகளுக்குத் தமிழக அரசு ஒரு அதிரடி சலுகையை அறிவித்துள்ளது. முதலமைச்சர் விஜய் உத்தரவின்படி, கொடைக்கானலில் வனத்துறையின் கட்டுப்பாட்டின் கீழ் உள்ள சுற்றுலாத் தலங்களை இன்று முதல் வரும் மே 31-ஆம் தேதி வரை பொதுமக்கள் எவ்விதக் கட்டணமும் இன்றி இலவசமாகக் கண்டுகளிக்கலாம்.
தற்போது கோடைகாலம் என்பதால் கொடைக்கானலில் சுற்றுலாப் பயணிகளின் வருகை நாளுக்கு நாள் கணிசமாக அதிகரித்து வருகிறது. இதனால் அங்குள்ள முக்கியச் சாலைகளில் போக்குவரத்து நெரிசல் ஏற்பட்டு வருகிறது. கட்டணச் சாவடிகளில் கட்டணம் செலுத்துவதற்காக வாகனங்கள் நீண்ட நேரம் வரிசையில் நிற்பதைத் தவிர்த்து, சாலைப் போக்குவரத்தை எளிதாக்கும் வகையில் இந்த ஏற்பாடு செய்யப்பட்டுள்ளது.
இன்று (மே 25) முதல் மே 31 வரை மட்டுமே இந்த இலவச அனுமதி பொருந்தும் என மாவட்ட நிர்வாகம் மற்றும் வனத்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது. இந்தக் கோடை விடுமுறை வார இறுதி நாட்களில் கொடைக்கானல் வரத் திட்டமிடும் பயணிகளுக்கு அரசின் இந்த அறிவிப்பு மிகுந்த மகிழ்ச்சியையும், வரவேற்பையும் பெற்றுத் தந்துள்ளது.
