கேரளப் பகுதிகளில் இன்று (ஜூன் 4) முறைப்படி தொடங்கிய தென்மேற்கு பருவமழை, தற்போது தமிழகத்தின் சில பகுதிகள், கர்நாடகா, லட்சத்தீவு மற்றும் வங்கக்கடல் பகுதிகளிலும் வேகமாக முன்னேறியுள்ளது. இதன் காரணமாகத் தமிழகம், புதுச்சேரி மற்றும் காரைக்கால் பகுதிகளில் அடுத்த சில நாட்களுக்குப் பரவலாக மழை பெய்ய வாய்ப்புள்ளதாகச் சென்னை வானிலை ஆய்வு மையம் தெரிவித்துள்ளது.
நாளை 26 மாவட்டங்களில் கனமழை
பருவமழை தீவிரமடைந்து வருவதால், நாளை (ஜூன் 5) தமிழகத்தில் சென்னை, காஞ்சிபுரம், செங்கல்பட்டு, திருவள்ளூர், ராணிப்பேட்டை, வேலூர், திருப்பூர், மதுரை, தஞ்சாவூர், திருவாரூர், நாகப்பட்டினம், புதுக்கோட்டை உள்ளிட்ட 26 மாவட்டங்கள் மற்றும் புதுச்சேரி, காரைக்கால் பகுதிகளில் ஓரிரு இடங்களில் இடி, மின்னல் மற்றும் பலத்த காற்றுடன் கூடிய கனமழை பெய்யக்கூடும். குறிப்பாக, கன்னியாகுமரி, நீலகிரி மற்றும் கோவை மாவட்டங்களில் ஓரிரு இடங்களில் கன முதல் மிக கனமழை பெய்ய வாய்ப்புள்ளது.
ஜூன் 6 முதல் 10 வரை மழை நீடிக்கும்
பருவமழையின் தாக்கம் காரணமாக ஜூன் 6 மற்றும் 7-ம் தேதிகளில் நீலகிரி, கோவை, திருப்பூர், திண்டுக்கல், தேனி, கன்னியாகுமரி, தென்காசி, திருநெல்வேலி மாவட்டங்களின் மலைப்பகுதிகள், ஈரோடு, சேலம், தருமபுரி, கிருஷ்ணகிரி மற்றும் மதுரை உள்ளிட்ட மாவட்டங்களில் கன முதல் மிக கனமழை பெய்யக்கூடும். தொடர்ந்து ஜூன் 8, 9, 10 ஆகிய தேதிகளிலும் நீலகிரி, கோவை, தேனி, திண்டுக்கல், கன்னியாகுமரி மற்றும் நெல்லை, தென்காசி மலைப்பகுதிகளில் கனமழை நீடிக்கும் என எச்சரிக்கப்பட்டுள்ளது.
குளிரப்போகும் தமிழகம்
தமிழகத்தில் இன்று அதிகபட்ச வெப்பநிலை வழக்கமான அளவில் இருக்கும். எனினும், தொடர் மழை காரணமாக வரும் ஜூன் 6 முதல் 8-ம் தேதி வரை, வழக்கமான அளவைவிட 7 டிகிரி ஃபாரன்ஹீட் வரை வெப்பநிலை குறைந்து, குளிர்ந்த வானிலை நிலவக்கூடும் என்றும் வானிலை ஆய்வு மையம் அதன் செய்திக்குறிப்பில் தெரிவித்துள்ளது.

