புதுச்சேரி காரைக்காலில் உள்ள புகழ்பெற்ற ஸ்ரீகயிலாசநாதர் சுவாமி தேவஸ்தானத்தைச் சேர்ந்த ஆற்றங்கரை ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய மகா கும்பாபிஷேக விழா இன்று மிகச் சிறப்பாக நடைபெற்றது.

இவ்விழா கடந்த 26-ஆம் தேதி விக்னேஸ்வர பூஜை மற்றும் முதற்கால யாகசாலை பூஜைகளுடன் விமரிசையாகத் தொடங்கியது. இன்று அதிகாலை ஆறாம்கால யாகசாலை பூஜைகள் நிறைவடைந்து, மகாபூர்ணாகுதியும் மகாதீபாராதனையும் காட்டப்பட்டன.

தொடர்ந்து, யாகசாலையில் வைத்து பூஜிக்கப்பட்ட புனிதநீர் கலசங்களை சிவாச்சாரியார்கள் மங்கல வாத்தியங்கள் முழங்க மங்களகரமாக ஏந்தி வந்து, ஆலயப் பிரகாரத்தை வலம் வந்தனர். பின்னர், ஸ்ரீசித்தி விநாயகர் ஆலய ராஜகோபுரம், மூலவர் மற்றும் ஸ்ரீவள்ளி, தேவசேனா சமேத சுப்ரமணியர் உள்ளிட்ட விமான கலசங்களுக்கு புனிதநீர் ஊற்றப்பட்டு மகா கும்பாபிஷேகம் விமரிசையாக நடத்தப்பட்டது.

இதனைத் தொடர்ந்து மூலவர் சன்னதிகளில் சிறப்பு மகாபிஷேகமும், தீபாராதனையும் நடைபெற்றன. விழாவில் பங்கேற்ற ஆயிரக்கணக்கான பக்தர்கள் மீது கும்பாபிஷேக புனிதநீர் குழாய்கள் மூலம் தெளிக்கப்பட்டது.

இந்நிகழ்வில் தெற்கு தொகுதி சட்டமன்ற உறுப்பினர் ஏ.எம்.ஹெச்.நாஜிம், கோவில் நிர்வாக அதிகாரி சுப்ரமணியன், ஆலய நிர்வாக அதிகாரி விநாயகமூர்த்தி, திருப்பணிக்குழு தலைவர் வெற்றிச்செல்வன் மற்றும் திரளான பக்தர்கள் கலந்துகொண்டு சாமி தரிசனம் செய்தனர்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version