நிதேஷ் திவாரி இயக்கத்தில், ரன்வீர் கபூர் நடிப்பில் மிகவும் பிரம்மாண்டமாக உருவாகி வரும் ‘ராமாயணா: பார்ட் 1’ திரைப்படத்தின் அதிகாரப்பூர்வ டிரைலர் இன்று (ஜூலை 30) அதிகாலை 4:15 மணிக்கு உலகம் முழுவதும் வெளியானது.
4 நிமிடங்கள் 9 வினாடிகள் கொண்ட இந்த டிரைலர் ரசிகர்களிடையே வரவேற்பைப் பெற்று வைரலாகி வருகிறது. ராவணணாக நடித்துள்ள நடிகர் யாஷ் டிரைலரின் தொடக்கத்திலேயே, “மூன்று உலகங்களுக்கும் ஒரே ராஜா தான்” என்று முழங்கும் காட்சி ரசிகர்களை அதிர வைத்துள்ளது.
தர்மத்தையும் நன்மையையும் நிலைநாட்ட அவதரிக்கும் ஸ்ரீ ராமனாக ரன்வீர் கபூர் அமைதியான மற்றும் கம்பீரமான தோற்றத்தில் மிளிர்கிறார். சீதாதேவியாக நடித்துள்ள நடிகை சாய் பல்லவி தனது இயல்பான நடிப்பினால் கவனத்தை ஈர்த்துள்ளார். ஏ.ஆர்.ரஹ்மான் மற்றும் ஹான்ஸ் ஜிம்மர் இணைந்து அமைத்துள்ள பின்னணி இசை மற்றும் பிரம்மாண்டமான VFX காட்சிகள் டிரைலருக்குப் பெரும் பலமாக அமைந்துள்ளன.
லட்சுமணனாக ரவி துபே, சூர்ப்பனகையாக ராகுல் ப்ரீத் சிங், தசரதனாக அருண் கோவில் மற்றும் கைகேயியாக லாரா தத்தா ஆகியோர் நடித்துள்ளனர். ஹனுமானாக சன்னி தியோல் நடித்துள்ளார். விவேக் ஓபராய் உள்ளிட்ட பல முன்னணி நட்சத்திரங்களும் இதில் இணைந்துள்ளனர்.
நமித் மல்ஹோத்ரா தயாரிப்பில் ரூ.4,000 கோடிக்கும் அதிகமான மெகா பட்ஜெட்டில் இரண்டு பாகங்களாக உருவாகும் இந்த காவியத்தின் முதல் பாகம், வரும் தீபாவளிப் பண்டிகையை முன்னிட்டு திரையரங்குகளில் வெளியாகவுள்ளது. இரண்டாம் பாகம் 2027 தீபாவளிக்கு வெளியிடத் திட்டமிடப்பட்டுள்ளது.
