தமிழகத்தில் சமீபத்தில் நடைபெற்ற 2026 சட்டமன்றத் தேர்தலில் பாஜக ஒரு தொகுதியில் மட்டுமே வெற்றி பெற்ற நிலையில், கட்சியின் மாநிலத் தலைவர் நயினார் நாகேந்திரன் மீது கட்சியினர் மத்தியில் அதிருப்தி அதிகரித்துள்ளதாக சொல்லப்படுகிறது. குறிப்பாக அவரது மகன் நயினார் பாலாஜிக்கு அளிக்கப்பட்ட பதவிகள் வாரிசு அரசியல் என்ற விமர்சனத்தை ஏற்படுத்தியுள்ளன.
கடந்த ஆண்டு, அண்ணாமலை மாநிலத் தலைவராக இருந்தபோது அதிமுகவுடன் இணக்கமான கூட்டணி உத்தி மேற்கொள்ள வேண்டும் என்பதற்காக அவரை பாஜக தலைமை நீக்கியது. அதற்குப் பதிலாக நயினார் நாகேந்திரன் மாநிலத் தலைவராக நியமிக்கப்பட்டார். அவரது தலைமையில் கடந்த ஒரு வருடத்திற்கும் மேலாக கட்சி செயல்பட்டு வந்த நிலையில், இந்தத் தேர்தலில் பாஜகவுக்கு பெரும் பின்னடைவு ஏற்பட்டது.
முந்தைய சட்டமன்றத்தில் 4 உறுப்பினர்களுடன் இருந்த பாஜக, இப்போது ஒரே ஒரு சட்டமன்ற உறுப்பினருடன் திருப்தி அடையும் நிலைக்குத் தள்ளப்பட்டுள்ளது. இந்நிலையில், சில மாதங்களுக்கு முன்பு நயினார் நாகேந்திரன் தனது மகன் நயினார் பாலாஜிக்கு மாநில விளையாட்டு மற்றும் திறன் மேம்பாட்டு ஒருங்கிணைப்பாளர் பொறுப்பை வழங்கினார். இந்த நடவடிக்கை கட்சியினர் மத்தியில் பெரும் எதிர்ப்பை சந்தித்தது.
பலரும் இதை வாரிசு அரசியல் என்று விமர்சித்தனர். தொண்டர்கள் மட்டுமின்றி பல்வேறு தரப்பினரும் இந்த முடிவுக்கு கடும் எதிர்ப்பு தெரிவித்தனர். இந்த அதிருப்தி இன்னும் அடங்காத நிலையில், மத்திய அரசின் 12 ஆண்டுகால ஆட்சி ஜூன் 1-ம் தேதியுடன் நிறைவடையும் சூழலில், பாஜக சார்பில் பல்வேறு நிகழ்ச்சிகளுக்குத் திட்டமிடப்பட்டுள்ளன. இதற்காக மாநில அளவில் ஒரு குழு அமைக்கப்பட்டுள்ளது.
இந்த நிலையில், இந்த மாநிலக் குழுவிலும் நயினார் நாகேந்திரனின் மகன் நயினார் பாலாஜிக்கு உறுப்பினர் பொறுப்பு வழங்கப்பட்டுள்ளது. இது கட்சியினர் இடையே மீண்டும் அதிருப்தியை ஏற்படுத்தி உள்ளதாக சொல்லப்படுகிறது. ஏற்கெனவே தேர்தல் தோல்வி மற்றும் தந்தை-மகன் பதவி பங்கீடு குறித்த விமர்சனங்கள் இருக்கும் நிலையில், இந்தப் புதிய நடவடிக்கை கட்சியினர் இடையே, அதிருப்தியை மேலும் அதிகரித்துள்ளது. குறிப்பாக கட்சியின் மூத்த தலைவர்கள் மிகவும் அப்செட்டில் உள்ளதாக கூறப்படுகிறது.
இத்தகைய சூழலில், பாஜக தலைமை இந்த விவகாரங்களை எப்படி கையாளப் போகிறது என்பதை கட்சியினர் உன்னிப்பாகக் கவனித்து வருகின்றனர்.
