தமிழகம் முழுவதும் உள்ள கல் குவாரிகளில் சோதனை நடத்த கனிம வளத்துறை அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
தமிழகம் முழுவதும் கனிமவளத் துறை சார்பில் 3000-க்கும் மேற்பட்ட கல் குவாரிகளில் அனுமதி அளிக்கப்பட்டு கற்கள் வெட்டி எடுக்கப்படுகிறது. இந்த கல் குவாரிகளில் அரசு அளித்த அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்படுவதாக பல்வேறு புகார்கள் தொடர்ந்து வந்த வண்ணம் இருக்கின்றன.
அதே போல, மத்திய அரசின் சிபா கமிட்டி கல்குவாரிகளில் எந்த அளவு கற்கள் எடுக்கப்பட வேண்டும் என்பது தொடர்பாக பல்வேறு விதிமுறைகளை அறிவித்துள்ளது. இந்த விதிமுறைகள் பல இடங்களில் மீறப்படுவதாகவும் கூறப்படுகிறது. இதேபோல, கல்குவாரிகளை கண்காணிக்கும் சேப்டி மைண்ட் எனப்படும் கண்காணிப்பு குழுவினர் முறையாக கல்குவாரிகளின் கண்காணிக்கவில்லை என்ற புகார் எழுந்துள்ளது.
இந்தநிலையில் தமிழகம் முழுவதும் இருக்கும் அனைத்து கல்வாரிகளிலும் அந்தந்த மாவட்ட கனிம வளத்துறையினர் ஆய்வு செய்து அரசிடம் பெறப்பட்ட ஆணைப்படி கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? அல்லது அளவுக்கு அதிகமாக கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளதா? என்பதை உடனடியாக ஆய்வு செய்து அறிக்கை அனுப்ப அமைச்சர் பிரபு உத்தரவிட்டுள்ளார்.
அரசு உத்தரவு இல்லாமல் பல இடங்களில் சட்டவிரோதமாக கல் குவாரிகள் செயல்படுவதாகவும் புகார்கள் வந்துள்ளன. அனைத்து கல் குவாரிகளையும் ஆய்வு செய்து எந்த அளவிற்கு கற்கள் வெட்டி எடுக்கப்பட்டுள்ளது, சட்டவிரோதமாக செயல்படும் கல்குவாரிகள் எத்தனை உட்பட பல்வேறு விவரங்களை உடனடியாக திரட்ட கனிம வளத் துறையினருக்கு அமைச்சர் உத்தரவிட்டுள்ளார்.
அரசு விதிகளை மீறி அளவுக்கு அதிகமாக கற்களை வெட்டி எடுத்த கல் குவாரிகளை உடனடியாக மூடவும், அரசுக்கு இழப்பு ஏற்படுத்தியதற்காக அபராதம் வசூலிக்கவும் உடனடியாக நடவடிக்கை எடுக்கப்பட உள்ளதாகவும் அமைச்சர் பிரபு தெரிவித்துள்ளார்.
