வாய்ச்சவடால் தவெக ஆட்சியில் சமூக விரோதிகளுக்கு துளியும் பயமில்லை என பாஜக மூத்த தலைவர் ஹெச் ராஜா கடுமையாக விமர்சித்துள்ளார்.
ஹெச்.ராஜா வெளியிட்டுள்ள பதிவில் கூறியிருப்பதாவது:-
சென்னை ராயப்பேட்டையில் 23 வயது இளைஞர் விஷ்ணு என்பவர் கஞ்சா கும்பல் ஒன்றால் கொடூரமாகத் தாக்கப்பட்டு படுகொலை செய்யப்பட்டிருக்கும் சம்பவம் மிகுந்த அதிர்ச்சியினை அளிக்கிறது. இளைஞர் விஷ்ணு தங்களது பகுதியில் கஞ்சா விற்பனை செய்தவர்களை தட்டிக் கேட்டதாலும், அது குறித்து காவல்துறையில் புகார் தெரிவித்ததாலும், ஆத்திரமடைந்த கஞ்சா வியாபார கும்பல் ஏற்கனவே கத்தியுடன் வீடு தேடி வந்து மிரட்டியுள்ளனர்.
இது குறித்து காவல்நிலையத்தில் புகார் அளித்தும், போலீஸார் கஞ்சா கும்பலை உடனடியாக வளைத்துப் பிடிக்காமல் அலட்சியமாக செயல்பட்டதால் இன்று ஒரு இளைஞரின் உயிர் அநியாயமாக பலியாகியிருக்கிறது.
இன்னமும் எத்தனை காலம்தான் வழி வழியாக இம்மாநிலத்தில் சட்டம் ஒழுங்கு தன் அகோரப் பற்கள் கொண்ட கொடூர முகம் காட்டிச் சிரித்து, மக்களை அச்சத்தின் பிடியிலேயே வைத்திருக்கப் போகிறது என நினைக்கையில் மனம் பதறுகிறது.
இதற்கிடையே நேற்று திருச்சி கிழக்கில், தனக்கு வெற்றியளித்த மக்களுக்கு நன்றி தெரிவிக்கப் போன தமிழக முதல்வர் ஜோசப் விஜய், நாட்டில் சட்டம் ஒழுங்கு பிரச்னைகள் அதிகரித்து விட்டதற்கு காரணம் சென்ற ஆட்சியில் வளர்த்து விட்ட கஞ்சா, மது போன்ற போதைபுழக்கம்தான் என்றும் அதற்கு தன் மீது பழி போட வேண்டாம் என்றும் ஏதோ சரித்திர நாடகத்தில் நடிப்பது போல கைகளை அகல விரித்து, வயிற்றிலிருந்து ஒலியெழுப்பி மேடையில் வீரவசனம் எல்லாம் பேசினார். அப்போதே மாநிலம் முழுவதிலும் நடக்கும் எந்த ஒரு அராஜகத்திற்கும் இந்த தத்தக்கா பித்தக்கா தவெக அரசு பொறுப்பு ஏற்கப் போவதில்லை என நன்றாகப் புரிந்து விட்டது. இது தீயசக்தி ஆட்சியின் நீட்சிதானே தவிர ஒருக்காலும் தூயசக்தி ஆக முடியாது என்பதுவும் தெளிவாகப் புரிந்து விட்டது.
சமூக விரோதிகளின் வெறியாட்டம் இப்படி நாளுக்கு நாள் அதிகரிக்க உண்மையான காரணம் என்ன தெரியுமா முதல்வர் அவர்களே?!
இது ஒரு நிர்வாகத்திறனற்ற, வாய்ச்சவடால் மட்டுமே விட்டுக் கொண்டு, கோமாளித்தனமாக ஆளும் ரீல்ஸ் கூட்டம் என சமூகவிரோதிகளுக்கு நன்றாக விளங்கி விட்டது. அதனால்தான் இப்படி ஆட்சியாளர்கள் மீதோ அல்லது காவல்துறை மீதோ துளியும் பயம் இல்லாமல் போதை வியாபாரிகள், கொலை கொள்ளையில் ஈடுபடுபவர்கள் மற்றும் பாலியல் குற்றவாளிகள் என எல்லோரும் கூட்டு சேர்ந்து இன்று தமிழகத்தை அதகளம் செய்து குதூகலமாக இருக்கிறார்கள்.
தங்கள் மீது கடும் நடவடிக்கைகள் எடுப்பதை விட நாட்டில் நிகழும் அராஜகங்களுக்கு எதிர் கட்சிகள் மீது பழி போடுவதில்தான் முதல்வர் விஜய்
ஒரே குறியாக இருப்பார் எனும் அதீத துணிச்சலை சமூக விரோதிகளுக்கு அளிப்பதை முதலில் நிறுத்துங்கள். நிகழும் குற்றங்களுக்கு நீங்களும், உங்களது தூங்குமூஞ்சி ஆட்சியாளர்களும், அதிகாரிகளும் பொறுபேற்றுக் கொள்ளுங்கள்.
குற்றங்கள் நடந்த பிறகு செயல்படுவதை விட குற்றங்களே நடக்காமல் தடுக்க முழு கட்டமைப்புடன் கூடிய கம்பீரமான காவல்துறையினையும், அனைத்து இடங்களிலும் மக்களுக்கான பாதுகாப்புச் சூழலையும் உறுதிப்படுத்த வேண்டியதே இப்போது உங்களது முழு முதலான கடமை.!
ஆக, உங்களது ஆட்சியில் நிகழும் தவறுகளை மடைமாற்றும் செய்யும் சதித்திட்டங்களையோ, ஏமாற்று வேலைகளையோ மக்கள் உங்களிடம் எதிர்பார்க்கவில்லை. அவர்களுக்கு தேவை நிம்மதியாக வாழக்கூடிய, நிஜமான அதிரடி சூழல் மாற்றம்! சவாலை ஏற்று நிரூபியுங்கள் என தமிழக பாஜக உங்களை வலியுறுத்துகிறது.
