அமெரிக்க அதிபர் டொனால்டு டிரம்புடன் கோல்ஃப் விளையாடியது வாழ்க்கையில் மறக்க முடியாத வித்தியாசமான அனுபவம் என்று இங்கிலாந்து கால்பந்து அணியின் கேப்டன் ஹாரி கேன் நெகிழ்ச்சி அடைந்துள்ளார்.
2026 பிஃபா உலகக் கோப்பை காலிறுதியில் நார்வேயை எதிர்கொள்ளும் போட்டிக்கு முன்னதாக நடைபெற்ற செய்தியாளர் சந்திப்பில் பேசிய ஹாரி கேன், சுமார் ஒன்றரை ஆண்டுகளுக்கு முன்பு புளோரிடாவின் பாம் பீச்சில் டிரம்பின் அழைப்பின் பேரில் அவருடன் கோல்ஃப் விளையாடியதாக தெரிவித்தார்.
“நான் நன்றாகவே விளையாடினேன். பாம் பீச்சில் இருந்தபோது அதிபர் என்னை கோல்ஃப் விளையாட அழைத்தார். ஒரு நாட்டின் அதிபர் அழைத்தால் மறுக்க முடியாது. அவரை சந்தித்ததும், அவருடன் கோல்ஃப் விளையாடியதும் உண்மையிலேயே வித்தியாசமான அனுபவம். அவரது கோல்ஃப் திறமை மிகவும் சிறப்பாக இருந்தது. அவர் வயதில் நானும் அப்படி விளையாட வேண்டும் என்று நம்புகிறேன். அந்த அழைப்புக்கு நான் மிகவும் நன்றியுள்ளவனாக இருக்கிறேன்” என்று கேன் கூறினார்.
மெக்சிகோவுக்கு எதிரான 16-வது சுற்று ஆட்டத்தில் இங்கிலாந்து 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்றதைத் தொடர்ந்து, டிரம்ப் தனது Truth Social தளத்தில் “இங்கிலாந்தின் ஹாரி கேன் மிகச் சிறந்த வீரர்” என்று பாராட்டியிருந்தார்.
மேலும் செய்தியாளர்களிடம் பேசிய டிரம்ப், “ஹாரி கேன் ஒரு சிறந்த வீரர். அவருடன் நான் கோல்ஃப் விளையாடியுள்ளேன். அவர் ஒரு நல்ல கோல்ஃப் வீரரும் கூட. அவர் மீது எனக்கு மிகுந்த மதிப்பு உள்ளது” என்று தெரிவித்திருந்தார்.
இந்நிலையில், உலகக் கோப்பை காலிறுதியில் இங்கிலாந்து அணி, புளோரிடாவின் ஹார்ட் ராக் மைதானத்தில் நார்வேயை எதிர்கொள்கிறது. இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி அரையிறுதிக்கு முன்னேறும்.
மெக்சிகோவுக்கு எதிரான முந்தைய போட்டியில் 10 வீரர்களுடன் நீண்ட நேரம் விளையாடியும் 3-2 என்ற கோல் கணக்கில் வெற்றி பெற்ற இங்கிலாந்து அணி, சிறந்த பார்மில் உள்ளது. அந்தப் போட்டியில் ஜூட் பெல்லிங்ஹாம் 2 கோல்கள் அடித்ததுடன், ஹாரி கேன் வெற்றியை உறுதி செய்த பெனால்டி கோலை பதிவு செய்தார்.
மறுபுறம், எர்லிங் ஹாலண்ட் இரு கோல்கள் அடித்த உதவியுடன் பிரேசிலை 2-1 என்ற கோல் கணக்கில் வீழ்த்திய நார்வே, உலகக் கோப்பை வரலாற்றில் முதல்முறையாக காலிறுதிக்கு முன்னேறி அசத்தி உள்ளது.
இரு அணிகளும் இதுவரை 9 முறை நேருக்கு நேர் மோதியுள்ள நிலையில், இங்கிலாந்து 7 போட்டிகளில் வெற்றி பெற்றுள்ளது. மேலும், கடைசியாக நடைபெற்ற நான்கு போட்டிகளிலும் நார்வே அணியால் ஒரு கோல் கூட அடிக்க முடியவில்லை என்பது குறிப்பிடத்தக்கது.
இந்தப் போட்டியில் வெற்றி பெறும் அணி, அரையிறுதியில் நடப்பு சாம்பியன் அர்ஜென்டினா அல்லது சுவிட்சர்லாந்து அணியை எதிர்கொள்ளும்.
