தமிழ் சினிமாவின் திசையையே கிராமங்களை நோக்கித் திருப்பி, ‘இயக்குநர் இமயம்’ என்று ஒட்டுமொத்த திரையுலகாலும் கொண்டாடப்பட்ட இயக்குநர் பாரதிராஜா அவர்களின் மறைவு, ஒட்டுமொத்த கலை உலகையும் சோகத்தில் ஆழ்த்தியுள்ளது. அவரது மறைவுக்கு நேரில் வந்து சூப்பர் ஸ்டார் ரஜினிகாந்த் அஞ்சலி செலுத்தினார்.

பின்னர், செய்தியாளர்களிடம் பேசிய நடிகர் ரஜினிகாந்த், “பாரதிராஜா அவர்களின் திறமையைப் பற்றியும், அவர் தமிழ் சினிமாவில் படைத்த சாதனைகளைப் பற்றியும் நான் சொல்லித் தெரிய வேண்டியதில்லை, அதை ஒட்டுமொத்த உலகமே நன்கு அறியும். ஆனால், சினிமாவுக்கு அப்பாற்பட்டு அவர் ஒரு மிகச்சிறந்த மனிதர். இயக்குநர், தயாரிப்பாளர் எனத் திரையுலகில் யாருக்கு எந்தப் பிரச்சினை வந்தாலும், அங்கே முதல் ஆளாக வந்து, முதலில் குரல் கொடுக்கும் உன்னத குணம் படைத்தவர் அவர். திரையுலகம் இருக்கும் வரை அவரது பெயர் என்றென்றும் நிலைத்து நிற்கும்” என்றார்.

அவருடனான தனிப்பட்ட நட்பு குறித்துப் பகிர்ந்த ரஜினிகாந்த், “தனிப்பட்ட முறையில் பார்த்தால் அவர் ஒரு குழந்தை மாதிரி. எதையும் மனதில் வைத்துக் கொள்ளத் தெரியாத வெள்ளை உள்ளம் கொண்டவர். என்னிடம் பேசும் போது, ரொம்பவும் வெளிப்படையாக, ‘ரஜினி… உன்னை எனக்கு ரொம்பப் பிடிக்கும், ஆனால் உன் நடிப்பு எனக்குப் பிடிக்காது’ என்று என் முகத்திற்கு நேராகவே விமர்சனம் செய்வார். அவரைப் போல எதையும் ஒளிவுமறைவின்றி வெளிப்படையாகப் பேசக்கூடிய மனிதர்களை இனி நாம் பார்க்கவே முடியாது” என்று பழைய நினைவுகளை உருகிப் பகிர்ந்து கொண்டார்.

மேலும், “அவர் மக்கள் திலகம் எம்.ஜி.ஆர், நடிகர் திலகம் சிவாஜி கணேசன் என அன்றைய காலத்து ஜாம்பவான்கள் முதல் இன்று இருக்கும் இளம் தலைமுறையினர் வரை எல்லோரிடமும் மிகுந்த நட்புடனும், அன்புடனும் பழகியவர். கடந்த சில நாட்களாகவே அவர் உடல்நலம் குன்றியிருந்த போது, அவர் குணமாகி மீண்டு வந்துவிடுவார் என்று தொடர்ந்து பலரும் தெரிவித்துக் கொண்டே இருந்தார்கள். நாங்களும் அதைத்தான் நம்பினோம். ஆனால், இப்படி நடக்கும் என்று எதிர்பார்க்கவில்லை” எனக் கண் கலங்கினார்.

“அவரது மறைவு எனக்குத் தனிப்பட்ட முறையில் பேரிழப்பு. அவர் என்றென்றும் என்னுடைய நினைவுகளில் வாழ்ந்து கொண்டே இருப்பார். அவரது ஆன்மா சாந்தி அடையட்டும்” என்று கூறி நடிகர் ரஜினிகாந்த் தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்தார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version