தூத்துக்குடி தென்பாகம் காவல் நிலையத்தில் விசாரணைக்காக அழைத்துச் செல்லப்பட்ட பின்னர் மயங்கி விழுந்து, மருத்துவமனையில் சிகிச்சை பலனின்றி உயிரிழந்த இளைஞர் அருணாச்சலத்தின் குடும்பத்தினரை, முன்னாள் அமைச்சரும் திருச்செந்தூர் தொகுதி தி.மு.க. எம்.எல்.ஏ.வுமான அனிதா ராதாகிருஷ்ணன் இன்று நேரில் சந்தித்து ஆறுதல் தெரிவித்தார்.

தூத்துக்குடி அமுதா நகர் பகுதியைச் சேர்ந்த அருணாச்சலம், கடந்த ஜூலை 17-ஆம் தேதி சட்டவிரோதமாக மது விற்பனை செய்ததாகக் கூறி தென்பாகம் காவல்துறையினரால் கைது செய்யப்பட்டு விசாரணைக்காக காவல் நிலையத்திற்கு அழைத்துச் செல்லப்பட்டார். அப்போது காவல் நிலையத்தில் அவர் திடீரென மயங்கி விழுந்ததாக கூறப்படுகிறது. இதையடுத்து, தூத்துக்குடி அரசு மருத்துவக் கல்லூரி மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்ட அருணாச்சலம், கடந்த ஜூலை 23-ஆம் தேதி அதிகாலை சிகிச்சை பலனின்றி உயிரிழந்தார்.

அவரது உயிரிழப்புக்கு காவல்துறையினரின் தாக்குதலே காரணம் என குற்றம்சாட்டிய உறவினர்கள், உடலை வாங்க மறுத்து போராட்டத்தில் ஈடுபட்டனர். பின்னர் காவல்துறையினருடன் நடைபெற்ற பேச்சுவார்த்தைக்குப் பிறகு, ஜூலை 24-ஆம் தேதி பிரேதப் பரிசோதனை செய்யப்பட்டு உடல் குடும்பத்தினரிடம் ஒப்படைக்கப்பட்டது. அதன் பின்னர் இறுதிச்சடங்கு நடைபெற்றது.

இந்த நிலையில், அமுதா நகரில் உள்ள அருணாச்சலத்தின் இல்லத்துக்கு இன்று சென்ற அனிதா ராதாகிருஷ்ணன், அவரது தாய், தந்தை மற்றும் தம்பியை சந்தித்து ஆறுதல் கூறினார். தொடர்ந்து அருணாச்சலத்தின் உருவப்படத்திற்கு மாலை அணிவித்து அஞ்சலி செலுத்தினார்.

அப்போது அருணாச்சலத்தின் குடும்பத்தினர், சம்பவத்தில் தொடர்புடையதாகக் கூறப்படும் நான்கு காவல்துறையினர் மீது கடுமையான நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும், இந்த விவகாரத்தை தமிழக முதலமைச்சர் விஜயின் கவனத்திற்கு கொண்டு சென்று உரிய நீதி கிடைக்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கோரிக்கை வைத்தனர். மேலும், குடும்பத்தில் ஒருவருக்கு அரசு வேலை வழங்க நடவடிக்கை எடுக்க வேண்டும் என்றும் கேட்டுக்கொண்டனர்.

இதற்கு பதிலளித்த அனிதா ராதாகிருஷ்ணன், குடும்பத்தின் கோரிக்கைகள் குறித்து உரிய மட்டத்தில் வலியுறுத்தி, தேவையான அனைத்து நடவடிக்கைகளும் மேற்கொள்ளப்படும் என்று உறுதியளித்ததாக கூறப்பட்டது.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version