நீட் தேர்வுக்கான வினாத்தாள் கசிவை தவிர்க்கும் வண்ணம் ஹெலிப்டர் மூலம் வினாத்தாள் கொண்டு வரும் சோதனை நெல்லையில் நடைபெற்றது
நாடு முழுவதும் நடைபெற உள்ள நீட் (NEET) தேர்வுக்கான வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு செல்வதற்கான ஏற்பாடுகள் தீவிரப்படுத்தப்பட்டுள்ள நிலையில், ஹெலிகாப்டர் மூலம் வினாத்தாள்களை கொண்டு வரும் நடைமுறைக்கான சோதனை ஓட்டம் இன்று நெல்லையில் நடைபெற்றது.
கடந்த மே 3-ஆம் தேதி நடைபெற்ற நீட் தேர்வில் வினாத்தாள் கசிவு தொடர்பான சர்ச்சைகள் எழுந்ததைத் தொடர்ந்து, அந்த தேர்வு ரத்து செய்யப்பட்டதாக கூறப்படுகிறது. இதையடுத்து, தேர்வு பாதுகாப்பை மேலும் பலப்படுத்த மத்திய மற்றும் மாநில அளவிலான அதிகாரிகள் பல்வேறு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றனர். அதன் ஒரு பகுதியாக, தேர்வு வினாத்தாள்களை விமானம் மற்றும் ஹெலிகாப்டர் மூலம் பாதுகாப்புடன் கொண்டு செல்லும் நடைமுறை ஆய்வு செய்யப்பட்டு வருகிறது.
அதன்படி, சென்னை பகுதியில் இருந்து இந்திய கடற்படைக்கு சொந்தமான ஹெலிகாப்டர் ஒன்று இன்று காலை புறப்பட்டு, நெல்லை மாவட்டம் பாளையங்கோட்டையில் உள்ள காவல்துறை ஆயுதப்படை மைதானத்தை வந்தடைந்தது. நீட் தேர்வு நடைபெறும் நாளில் வினாத்தாள்கள் கொண்டு வரப்படும் சூழலை முன்மாதிரியாக கொண்டு அதிகாரிகள் இந்த சோதனை ஓட்டத்தை மேற்கொண்டனர்.
ஹெலிகாப்டர் ஆயுதப்படை மைதானத்தில் சுமார் இரண்டு நிமிடங்கள் தரையிறக்கப்பட்டு, பாதுகாப்பு ஏற்பாடுகள், தரையிறங்கும் வசதி, பாதுகாப்பு வளையம், வாகன போக்குவரத்து ஒருங்கிணைப்பு உள்ளிட்ட அம்சங்கள் ஆய்வு செய்யப்பட்டன. பின்னர் ஹெலிகாப்டர் மீண்டும் சென்னைக்கு புறப்பட்டுச் சென்றது.
சோதனை ஓட்டத்தின்போது காவல்துறை மற்றும் தொடர்புடைய துறை அதிகாரிகள் பாதுகாப்பு ஏற்பாடுகளை கண்காணித்தனர். தேர்வு நாளில் வினாத்தாள்களை பாதுகாப்பாக கொண்டு வந்து, தேர்வு மையங்களுக்கு குறித்த நேரத்தில் அனுப்புவது தொடர்பாகவும் ஆய்வு மேற்கொள்ளப்பட்டதாக கூறப்படுகிறது.
நீட் தேர்வில் எந்தவித முறைகேடுகளும் நடைபெறாமல் தடுக்கவும், வினாத்தாள்களின் ரகசியத்தன்மையை முழுமையாக உறுதி செய்யவும் இந்த நடவடிக்கை மேற்கொள்ளப்பட்டுள்ளதாக அதிகாரிகள் தரப்பில் தகவல் வெளியாகியுள்ளது.
ஹெலிகாப்டர் திடீரென பாளையங்கோட்டை ஆயுதப்படை மைதானத்தில் தரையிறங்கியதால் அப்பகுதியில் சிறிது நேரம் பரபரப்பு நிலவியது. பொதுமக்கள் மற்றும் வாகன ஓட்டிகள் ஆர்வத்துடன் ஹெலிகாப்டரை பார்வையிட்டனர்.
