தமிழகத்தில் தனியார் பேருந்துகள் விடுமுறை நாட்கள் மற்றும் பண்டிகை காலங்களில் நிர்ணயிக்கப்பட்ட கட்டணத்தை விட அதிக கட்டணம் வசூலிப்பதை கட்டுப்படுத்த நடவடிக்கை எடுக்கக் கோரி தொடரப்பட்ட பொதுநல வழக்கில், கடந்த எட்டு ஆண்டுகளாக நிலவும் உச்சநீதிமன்ற இடைக்காலத் தடையை நீக்க தமிழக அரசு என்ன நடவடிக்கை எடுத்துள்ளது என்பது குறித்து பதில் மனு தாக்கல் செய்ய உயர்நீதிமன்ற மதுரை கிளை உத்தரவிட்டுள்ளது.

மதுரையைச் சேர்ந்த கதிர் என்பவர் தாக்கல் செய்த மனுவில், தனியார் மற்றும் ஆம்னி பேருந்துகளில் பண்டிகை காலங்களில் அதிக கட்டணம் வசூலிக்கப்படுவதால் வெளியூர்களில் பணிபுரியும் பொதுமக்கள் கடுமையாக பாதிக்கப்படுவதாக தெரிவித்திருந்தார். மோட்டார் வாகனச் சட்டத்தின்படி அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்களின் உரிமத்தை ரத்து செய்யும் அதிகாரம் இருந்தும் நடவடிக்கை எடுக்கப்படவில்லை என்றும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

மேலும், தனியார் பேருந்துகளுக்கான கட்டணத்தை முறைப்படுத்த உயர்நீதிமன்றம் ஏற்கனவே ஒரு குழுவை அமைத்து பரிந்துரைகள் வழங்க உத்தரவிட்டிருந்த போதிலும், அதன் அடிப்படையில் எந்த நடவடிக்கையும் எடுக்கப்படவில்லை என மனுவில் கூறப்பட்டிருந்தது. அதனால், வழித்தடங்களுக்கு ஏற்ப கட்டணத்தை நிர்ணயித்து அமல்படுத்தவும், அதிக கட்டணம் வசூலிக்கும் நிறுவனங்கள் மீது நடவடிக்கை எடுக்கவும், பேருந்து நிலையங்கள் மற்றும் ஆன்லைன் முன்பதிவு மையங்களில் திடீர் ஆய்வுகளை மேற்கொள்ளவும் உத்தரவிட வேண்டும் என கோரப்பட்டது.

இந்த வழக்கு நீதிபதிகள் சதீஷ்குமார் மற்றும் ஜோதிராமன் அமர்வில் விசாரணைக்கு வந்தது. அப்போது, கட்டண நிர்ணயம் தொடர்பாக உயர்நீதிமன்றம் அமைத்த குழுவின் உத்தரவுக்கு 2016-ஆம் ஆண்டு உச்சநீதிமன்றம் இடைக்காலத் தடை விதித்துள்ளதாக மனுதாரர் தரப்பு தெரிவித்தது.

இதையடுத்து, “கடந்த எட்டு ஆண்டுகளாக அந்த தடையை நீக்க என்ன நடவடிக்கை எடுக்கப்பட்டது? ஏன் இதுவரை மனு தாக்கல் செய்யப்படவில்லை? அதிக கட்டண வசூலை தடுக்க அரசுக்கு மனம் இல்லையா?” என நீதிபதிகள் கேள்வி எழுப்பினர். இதுகுறித்து தமிழக அரசு விரிவான பதில் மனு தாக்கல் செய்ய உத்தரவிட்டு, விசாரணையை ஒத்திவைத்தனர்.

 

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version