நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வதை சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது என சென்னை உயர்நீதிமன்றம் அதிரடியாகத் தெரிவித்துள்ளது.

கிருஷ்ணகிரி மாவட்டத்தில் கிராம நிர்வாக அலுவலராக  பணியாற்றி வந்த  ராமசந்திரன்,  பட்டா வழங்குவதற்கு லஞ்சம் பெற்றதாக லஞ்ச ஒழிப்புத்துறை பதிவு செய்த வழக்கின் அடிப்படையில், 2025-ஆம் ஆண்டு நவம்பர் மாதம் சஸ்பெண்ட்  செய்யப்பட்டார்.

தொடர்ந்து, பணியிடை நீக்கத்திலேயே வைத்திருந்ததால் சஸ்பெண்ட் உத்தரவை ரத்து செய்யக் கோரி ராமசந்திரன் சென்னை உயர்நீதிமன்றத்தில் மனு தாக்கல் செய்தார்.

இந்த மனு நீதிபதி பி.டி. ஆஷா முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது, மனுதாரர் சார்பில்  ஆஜரான மூத்த வழக்கறிஞர் அசன் முகம்மது ஜின்னா, லஞ்ச ஒழிப்பு விசாரணை ஏழு மாதங்களுக்கு மேலாகியும் , இதுவரை குற்றப்பத்திரிகை தாக்கல் செய்யப்படவில்லை என்றும்,  துறை ரீதியான விசாரணை தொடர்பாக குற்ற குறிப்பாணை வழங்கப்படவில்லை என்றும், ஏழு மாதங்களுக்கு மேலாக மனுதாரரை தொடர்ந்து பணியிடை நீக்கத்தில் வைத்திருக்க எந்த சட்டபூர்வமான காரணமும் இல்லை என்றும் வாதிட்டார்.  அரசுத் தரப்பில் மனுவுக்கு எதிர்ப்பு தெரிவிக்கப்பட்டது.

வழக்கை விசாரித்த நீதிபதி பி.டி. ஆஷா, லஞ்ச ஒழிப்பு விசாரணை மற்றும் துறை ரீதியான நடவடிக்கைகள் ஆகியவற்றை கருத்தில் கொண்டு,  உச்சநீதிமன்றத் தீர்ப்புகளின்படி நீண்டகாலமாக பணியிடை நீக்கத்தை தொடர்வது சட்டப்படி ஏற்றுக்கொள்ள முடியாது எனக் கூறி, மனுதாரரின் பணியிடை நீக்கத்தை ரத்து செய்து, அவரை முக்கியத்துவம் இல்லாத பணியிடத்தில் உடனடியாக மீண்டும் பணியில் அமர்த்த சம்பந்தப்பட்ட அதிகாரிகளுக்கு உத்தரவிட்டுள்ளார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version