தவெக எம்.எல்.ஏ.விடம் குதிரை பேரம் பேசியதாகப் பதிவு செய்யப்பட்ட வழக்கில், முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் தாக்கல் செய்த முன் ஜாமீன் மனு மீது ஜூலை 6-ம் தேதிக்குள் பதிலளிக்க காவல்துறைக்கு சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

சட்டப்பேரவையில் சபாநாயகருக்கு எதிராக கொண்டு வரப்படவுள்ள தீர்மானத்திற்கு ஆதரவாகச் செயல்பட, 35 கோடி ரூபாய் வரை லஞ்சம் தருவதாகப் பேரம் பேசியதாக ஊத்தங்கரை தவெக எம்.எல்.ஏ. என். இளையராஜா சென்னை காவல் ஆணையரிடம் புகார் அளித்திருந்தார். இந்தப் புகாரின் பேரில், திருவல்லிக்கேணி காவல்துறையினர் வழக்குப்பதிவு செய்து, திருநாவுக்கரசு, நரேஷ் மற்றும் தியாகராஜன் உள்ளிட்ட 8 பேரை ஏற்கனவே கைது செய்துள்ளனர்.

இந்தநிலையில், இந்த வழக்கில் தன் மீது எந்தக் குற்றச்சாட்டுகளும் இல்லை என்று குறிப்பிட்டு, முன்னாள் அமைச்சர் செந்தில் பாலாஜியின் சகோதரர் அசோக்குமார் முன் ஜாமீன் கோரி சென்னை உயர்நீதிமன்றத்தில் மனுத்தாக்கல் செய்துள்ளார். அதில், “முன்னாள் அமைச்சரின் சகோதரர் என்பதால் அரசியல் காழ்ப்புணர்ச்சியுடன் என் பெயர் இதில் சேர்க்கப்பட்டுள்ளது. வழக்கில் தொடர்புடைய எவரையும் நான் தொடர்பு கொள்ளவில்லை. நீதிமன்றம் விதிக்கும் நிபந்தனைகளை ஏற்கத் தயார்,” எனத் தெரிவித்துள்ளார்.

இந்த மனு நீதிபதி சி.குமரப்பன் முன்னிலையில் இன்று விசாரணைக்கு வந்தபோது, காவல்துறை தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் ஜான் சத்யன், இந்த மனுவிற்குப் பதிலளிக்க அவகாசம் கோரினார். இதையேற்று, ஜூலை 6-ம் தேதிக்குள் பதில் மனுத் தாக்கல் செய்ய காவல்துறைக்கு நீதிபதி உத்தரவிட்டார்.

இதனிடையே, அசோக்குமார் தரப்பில் ஆஜரான மூத்த வழக்கறிஞர் என்.ஆர். இளங்கோ, வழக்கு விசாரணை முடியும் வரை அசோக்குமார் மீது காவல்துறை எவ்விதக் கடுமையான நடவடிக்கையும் எடுக்கக் கூடாது என உத்தரவிடக் கோரினார். ஆனால், இதனை தீவிரமான வழக்கு எனக் குறிப்பிட்ட காவல்துறை தரப்பு வழக்கறிஞர், இதற்கு ஆட்சேபம் தெரிவித்தனர். இதையடுத்து, வழக்கின் விசாரணையை ஜூலை 6-ம் தேதிக்கு ஒத்திவைத்து நீதிபதி உத்தரவிட்டார்.

Share.
Leave A Reply Cancel Reply

Exit mobile version