பிரதான் மந்திரி ஆவாஸ் யோஜனா – கிராமின் (PMAY-G) திட்டத்தின் கீழ், ஏழை எளிய மக்களுக்கான வீட்டு வசதியை மேம்படுத்தும் நோக்கில், முதற்கட்டமாக ரூ.10,021 கோடி நிதியை மத்திய அரசு அதிரடியாக விடுவித்துள்ளது. மத்திய ஊரக வளர்ச்சி மற்றும் விவசாயத்துறை அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான் இந்த நிதி ஒதுக்கீட்டிற்கு ஒப்புதல் அளித்துள்ளார்.
இதன் மூலம் தமிழ்நாடு உள்ளிட்ட நாட்டின் 12 மாநிலங்கள் நேரடியாகப் பயன்பெறவுள்ளன. நாடு முழுவதும் உள்ள வீடற்ற மற்றும் தகுதியான கிராமப்புற ஏழைக் குடும்பங்களுக்குப் பாதுகாப்பான வீடுகளைக் கட்டித் தரும் நோக்கில் PMAY-G திட்டம் செயல்படுத்தப்பட்டு வருகிறது. இத்திட்டத்தின் அடுத்த கட்டமாக, வரும் 2029-ஆம் ஆண்டு மார்ச் மாதத்திற்குள் ‘அனைவருக்கும் வீடு’ என்ற இலக்கை முழுமையாக எட்ட மத்திய அரசு இலக்கு நிர்ணயித்துள்ளது. அதன் ஒரு பகுதியாகவே இந்த நிதி தற்போது மாநிலங்களுக்குப் பிரித்து வழங்கப்பட்டுள்ளது.
மத்திய அரசு விடுவித்துள்ள இந்த ரூ.10,021 கோடி நிதியானது தமிழ்நாடு, கேரளா, ஆந்திரப் பிரதேசம், குஜராத், சத்தீஸ்கர், இமாச்சலப் பிரதேசம், ஜம்மு காஷ்மீர், ஜார்கண்ட், மத்தியப் பிரதேசம், மகாராஷ்டிரா, ஒடிசா மற்றும் உத்தரப் பிரதேசம் ஆகிய 12 மாநிலங்கள் மற்றும் யூனியன் பிரதேசங்களுக்குப் பகிர்ந்தளிக்கப்பட உள்ளது.
இத்திட்டம் குறித்துப் பேசிய மத்திய அமைச்சர் சிவராஜ் சிங் சவுகான், “மத்திய அரசின் இந்த முன்னெடுப்பு என்பது வெறுமனே செங்கல் மற்றும் சிமெண்டால் வீடுகளைக் கட்டுவது மட்டுமல்ல; மாறாக ஏழை மக்களின் வாழ்வாதாரத்தை உயர்த்துவதாகும்” என்று குறிப்பிட்டார். அதற்கேற்ப, கட்டப்படும் அனைத்து வீடுகளும் பல்வேறு அடிப்படைத் தேவைகளுடன் ஒருங்கிணைக்கப்பட்டு பயனாளிகளுக்கு வழங்கப்படவுள்ளன.
அதாவது, தூய்மையான குடிநீர் வசதி (ஜல் ஜீவன் மிஷன்), தடையற்ற மின்சார இணைப்பு (சௌபாக்யா திட்டம்), சுகாதாரமான கழிப்பறை வசதிகள் (தூய்மைப் பாரத இயக்கம்), புகையில்லா சமையலுக்கான எல்பிஜி (LPG) சிலிண்டர் இணைப்பு (உஜ்வலா திட்டம்), முறையான சாலை மற்றும் போக்குவரத்து வசதிகள் உள்ளிட்ட அடிப்படை வசதிகளும் வழங்கப்படவுள்ளன.
மாநில அரசுகள் இந்த நிதியைப் பயன்படுத்தி, விடுபட்ட தகுதியான பயனாளிகளைக் கண்டறிந்து, கட்டுமானப் பணிகளை விரைந்து முடிக்க வேண்டும் என மத்திய அரசு அறிவுறுத்தியுள்ளது. இந்த அதிரடி நிதி விடுவிப்பால் தமிழகத்தின் கிராமப்புறங்களில் ஏழைகளுக்கான வீட்டு வசதித் திட்டங்கள் இனி கூடுதல் வேகமெடுக்கும் என எதிர்பார்க்கப்படுகிறது.
